முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. மார்ச் 22,2017 இல் சின்னம் முடக்கப்பட்டது.
சின்னம் முடக்கப்பட்டபோது சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருந்த முதல்வர் பழனிசாமி அணியினர் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்தனர். இதனால் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் டிடிவி தினகரன் தரப்பினர் தனி அணியாகவும் பிரிந்து, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வந்தனர்.
இருதரப்பும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில் நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வந்தது.
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தங்கள் அணிக்கு ஒதுக்கியுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (நவம்பர் 23,2017) செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் கொடுத்த ஆதாரங்களை பரிசீலித்து தேர்தல் ஆணையம் நல்ல, நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது. எங்கள் பக்கம் நியாயம் இருந்ததாலேயே இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
90% நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பது தவறான கருத்து” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இரட்டைஇலை சின்னத்தை அதிமுகவின் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமல் இருந்தது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமியே இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதன்மூலம் கட்சியின் பெயர், கட்சியின் சின்னம், கட்சியின் லெட்டர் பேடு என அனைத்தையும் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான உரிமை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு கிட்டியுள்ளது.