இன்னும் 30 ஆண்டுகளில் சென்னை கடலில் மூழ்கும் – அதிர்ச்சி தரும் விண்வெளி ஆராய்ச்சி அறிக்கை

சென்னை- கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் நகரம்.

கடல் மட்டம் உயர்வதால் சென்னையில் மட்டும் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், 144 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கிப் போகும் என்கின்றன இரண்டு ஆய்வு அறிக்கைகள். கடற்கரையில் அமைந்துள்ள அல்லது அமைக்கப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் இதனால் மிக அதிகமாக பாதிக்கப்படும் என்றும் சொல்கின்றன அறிக்கைகள்.

சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதிற்கும், அதுவும் அழிவை ஏற்படுத்தும் திட்டங்கள் அமைந்துள்ள எண்ணூர், கல்பாக்கம், செய்யூர், பெட்ரோலியம் முதலீட்டு மண்டலம் உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிகள், கூடங்குளம், தூத்துக்குடி என அதிக திட்டங்கள் உள்ள பகுதிகள் அதிகமாகப் பாதிப்படையும் என்றும் எச்சரிக்கையை விடுகின்றன அந்த அறிக்கைகள்.

இந்த எச்சரிக்கைகளை விடுப்பது சூழல் செயல்பாட்டாளர்கள் கொண்டுவந்த அறிக்கைகள் கிடையாது, ஒரு ஆய்வு அறிக்கை 2012 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளிக்கொண்டுவந்தது, மற்றொன்று 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு திட்டக் குழு தயாரித்தது (இது இன்னமும் பொதுவெளிக்கு வரவில்லை).

சென்னையின் முக்கியத் தொழில்கள் நடைபெறும் பகுதிகள், குறிப்பாக எண்ணூரிலுள்ள அனல் மின்நிலையங்கள், காமராஜர் துறைமுகத்தின் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்டுள்ள கட்டுமானங்கள் என அனைத்தும் கடலுக்குள் இருக்கும், இதைத் தவிர மீஞ்சூர் உப்பகற்றி ஆலை, இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் முழு கட்டுமானங்களும், சென்னை பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையின் அனேக கட்டுமானங்களும் கடலுக்குள் மூழ்கி இருக்கும். ஆரணியாறு-கொசத்தலையாற்றின் வடிநில பகுதிகள் முழுவதும் கடல்நீர் உட்புகுதலால் உவர் நிலமாக மாறியிருக்கும்.

சென்னையின் முக்கியப் பகுதியும், லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் “தகவல் தொழில்நுட்பச் சாலை” (IT corridor) முழுவதும் கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும், ஆக்கிரமிப்புக்குள்ளான பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி முழுவதும் கடல்கொண்டிருக்கும். இவை அனைத்தும் ஒரு மீட்டர் கடல் மட்டம் உயர்ந்தாலே ஏற்படும் விளைவுகள்.

காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்றும், வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி அளவிற்கு உயரவாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அப்படி மூன்று டிகிரி அளவிற்கு வெப்பநிலை உயர்ந்தால் கடல் மட்டம் இன்னும் கூடுதலாக உயரும் என்கிறார்கள் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிஞர்கள்.

இவையனைத்தையும் கணக்கில்கொள்ளாமல் புதிய உயர் அலை அளவுகளை (high tide line) நிர்ணயிக்கக் கூடாது என்றும், புதிதாகத் திட்டமிடப்படும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலங்களை இந்தத் தரவுகளைக் கொண்டே நிர்ணயம் செய்யவேண்டும் என்கிறார்கள் சூழலியல் செயல்பாட்டாளர்கள் நித்தி, பூஜா மற்றும் சரவணன்.

மேற்சொன்ன அழிவுகள் ஏதோ 2200 ஆம் ஆண்டு நடைபெறும் என்று நினைக்க வேண்டாம், இவை அனைத்தும் 2050 ஆம் ஆண்டுவாக்கில் நடைபெறும் என்று திகிலூட்டுகின்றன அறிக்கைகள். 2050 ஆம் ஆண்டு என்றால் சரியாக அந்த ஆண்டில் நடக்காது, இப்போதே அதற்கூறிய அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன.

சென்னை தமிழகத்தின் தலைநகரமாக இருக்குமா அல்லது மூழ்கிக்கொண்டிருக்கும் மாநிலத்தின் நகரமாக இருக்குமா என்பது, நாம் எவ்வாறு காலநிலை மாற்றங்களைக் கையாளப்போகிறோம் என்பதை பொறுத்தே அமையும்.

– சுந்தர்ராஜன்

Leave a Response