டெங்கு என்றதும் அச்சம் வேண்டாம் – அதை விரட்டும் எளிய மருத்துவக்குறிப்பு

டெங்கு காய்ச்சல் பற்றி எங்கும் பேசப்படுகிறது. அது பற்றிய அச்சம் மக்களுக்குப் பெருமளவில் இருக்கிறது. அதை மேலும் ஊதிப்பெரிதாக்கும் வேலையை எல்லோரும் செய்கின்ற இந்த நேரத்தில் கவிஞரும் சித்தமருத்துவருமான குட்டிரேவதி சொல்வதைக் கேளுங்கள்…..

களமிறங்குவோம்! டெங்கு காய்ச்சலை வெல்வோம்!

டெங்கு காய்ச்சல் பரவலாகி எல்லோரையும் அலறவைக்கிறது. ஒரு சேனலில், சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் இறந்தோரை மட்டும் வரிசையாகப் பட்டியல் இட்டு காட்டி, ‘திகில்’ கூட்டுகிறார்கள். உண்மையில், எல்லோரும் பயமுறுத்துவது போல நாம் அவ்வளவு அச்சப்படத்தேவையில்லை, தேவையான அக்கறையும் சிகிச்சையும் இன்றி உயிரை இழக்கவும் தேவையில்லை.

சமீப சில ஆண்டுகளாக, நாங்கள் எதற்கும் அணுகும் மருத்துவர், சக்திவேல். இவர் அக்குபங்சர் மருத்துவர் என்றாலும் மூலிகை மற்றும் சித்தமருத்துவத்திலும் உடலின் நுட்பமான இயங்குமுறைகள் குறித்தும் முழுமையான அறிவும் மதிநுட்பமும் கொண்டு செயல்படும் எளிமையான மருத்துவர்.

இவரிடம் டெங்கு நோய்க்கு சிகிச்சை பற்றிக் கேட்டபோது அவர் கூறியதாவது: டெங்கு வந்தவர்கள், தீவிர வயிற்றுவலியிலும் தலைவலியிலும் அவதியுறுவார்கள். இதற்கு, சில சிறியாநங்கை இலைகள் (அல்லது இரண்டு வெற்றிலை) + பலா இலை ஒன்று (பெரிய இலை என்றால் பாதி இலை) + குப்பை மேனி இலைகள் சில + கொய்யா இலைகள் சில இவற்றுடன் கொஞ்சமாய் உப்பு சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்கவைத்து மூன்று வேளையும் கொடுக்க, வயிறு உளைந்து உடனே மலம் வெளியேறும். உடலில் தெம்பையும் புத்துணர்ச்சியையும் உணரமுடியும்.

ஐந்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு, 20 மிலி வரை கொடுக்கலாம். ஐந்து வயதுக்கு மேலே உள்ளவர்கள் 30 மிலி வரை அருந்தவேண்டும். மூன்று வேளையிலேயே உடலின் சங்கடங்கள் குறைவதை உணரமுடியும். இளைப்பாறலாக, சாத்துக்குடி சாறு குடிக்கலாம். நிறைய நோயாளிகள் முற்றிலுமாக இதிலிருந்து வெளியேறியதைக் கண்டோம்.

இந்த டெங்கு காய்ச்சலை காரணமாக வைத்து, எல்லா தனியார் மருத்துவமனைகளும் மக்களிடம் பணத்தை, உயிரையும் பறிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். தயவு செய்து, உடனே காப்பு நடவடிக்கையாக, இம்மருந்தை நாடும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

டெங்கு என்றதும் அச்சப்படவேண்டாம், அலட்சியமாகவும் இருக்கவேண்டாம். நோய் பெரியது என்று பூச்சாண்டி காட்டக் காட்ட, நாமும் வைத்தியத்தை, மருத்துவமனைகளையும் பெரியதாக நினைத்து அவற்றை நோக்கிச் செல்கிறோம். தன் உடலையும் நோயையும் மருத்துவத்தையும் பற்றி நாமே தெள்ளத்தெளிவாக அறிந்து வைத்துக் கொள்ளுதல் நோயிலிருந்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் பேணுவதற்குப் பெரிதும் உதவும்.

இவ்வாறு அவர் கூறுகிறார்.

Leave a Response