
சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா சார்பில், சிறை தலைமைக்கண்காணிப்பாளர் சோமசேகரிடம் நேற்று ஒரு மனு வழங்கப்பட்டது.
அதில், தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை நேரில் சென்று பார்க்க 15 நாட்கள் அவசர “பரோல்” வழங்குமாறும் கோரி இருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட சோமசேகர், அதன் ஒரு பிரதியை தனது மேல் அதிகாரிகளுக்கு அனுப்பினார். சசிகலா மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவருக்கு “பரோல்” வழங்கலாமா? என்பது குறித்து சட்ட ஆலோசனையும் கேட்கப்படும் என்று அவர் கூறினார்.
அந்த மனுவின் இன்னொரு பிரதி சென்னை நகர காவல் ஆணையருக்கும் அவர் அனுப்பிவைத்தார். அங்கு தங்கி இருக்கும்போது சசிகலாவுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்காக இந்த தகவல் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சசிகலாவின் “பரோல்” மனு மீது இன்னும் 2 அல்லது 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று சோமசேகர் முதலில் கூறி இருந்தார். இதனால் சசிகலாவுக்கு “பரோல்” கிடைத்துவிடும் என்று அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் சசிகலாவின் “பரோல்” மனுவை பரிசீலனை செய்த, சோமசேகர் திடீரென்று அதை நிராகரித்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், “சசிகலாவின் “பரோல்” மனுவில் விவரங்கள் முழுமையாக இடம் பெறவில்லை. விவரங்களில் சில குறைபாடுகள் இருக்கின்றன. அதனால் மனுவை நிராகரிக்கிறேன். எனவே தேவையான பிரமாண பத்திரங்கள் மற்றும் முழு விவரங்களுடன் மீண்டும் புதிதாக “பரோல்” மனுவை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. வழக்கறிஞரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பவானி பாலமுருகன் இதுகுறித்துச் சொன்னது….
சிறைவாசிகளுக்கு உள்ள உரிமைகள் சசிகலாவுக்கும் கிடைக்கப் பெறவேண்டும்.தனது மரணபடுக்கையில் உள்ள கணவரைக் காணும் வாய்ப்பு பரோல் மூலம் அவருக்கு வழங்கப்படவேண்டும். தமிழகத்தில் நிழவும் அரசியல் மாச்சர்யங்களின் அடிப்படையில் சிறைவாசியான சசிகலாவுக்கு எந்த நியாயமான உரிமையும் மறுக்கப்படக்கூடாது. பரோலை அரசியல் பழிவாங்கும் செயலுக்கு மறுப்பது மனித உரிமை பார்வையில் ஏற்புடையதல்ல. கர்நாடக சிறைத்துறை ,சென்னை மருத்துவமனை நடராஜன் உடல்நிலை குறித்து வெளியிட்ட தரவுகள் அடிப்படையில் மீண்டும் புதிய பரோல் மனுவை அவசரமாய் பரிசீலிக்க வேண்டும்.தமிழக காவல்துறையினர் இந்த பரோல் பிரச்சனையில் நடுநிலை,மனிதத் தன்மையோடு நடந்துகொள்வது அவசியம். சாமானிய பொதுமக்களின் பார்வையும் இதுவே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


