
வெத்துவேட்டு என்கிற பெயருடன் வெட்டியாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் நாயகன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடியான மாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்தாம் இந்தப்படம்.
படிப்பை முடித்துவிட்டு வேலைக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு ஊர்க்கோடியில் நண்பர்களுடன் உட்கார்ந்து சீட்டாடுவதையே வேலையாக வைத்திருக்கிறார் நாயகன் ஹரிஷ். பிளாக்பாண்டி கோபால், மணி போன்ற நண்பர்களும் அதையே செய்கிறார்கள். எந்நேரமும் சீட்டாடுவது குடிப்பது அல்லது பெண்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது என்று பொழுதுபோகிறது. ஊரிலுள்ள எந்தப்பெண்ணைப்பற்றிப் பேச்சு வந்தாலும் அந்தப்பெண்ணுக்கும் தனக்கும் தொடர்பு இருக்கிறது என்கிற அர்த்தத்தில் அவள நான் முதல்லயே பாத்துட்டேன் என்று பெருமை பேசிக்கொண்டேயிருக்கிறார்.
படிப்பை முடித்துவிட்டு அந்த ஊருக்கு நாயகி மாளவிகாமேனன் வந்துசேர்ந்ததும் ஹரிஷ் அவரை விரட்டி விரட்டிக் காதலிப்பார் என்று பார்த்தால் அவரைப் பற்றியும் தப்புத்தப்பாகப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறார். மாளவிகாமேனன் குளிக்கப்போகும்போது பின்னாலேயே வயல்வெளியில் இருக்கும் கிணற்றடிக்குப் போவதோடு நண்பர்களைப் பார்க்கச் சொல்லிவிட்டு இயந்திரஅறைக்குள் நாயகியுடன் போய்வருகிறார்.
நாயகி கர்ப்பமாகிறார். அந்தக்கர்ப்பத்துக்குக் காரணமானவர் என்று சொல்லி நாயகனுக்கு மணமுடித்துவைத்துவிடுகிறார்கள். உண்மையில் கர்ப்பத்துக்கு அவர் காரணமில்லை என்பதும் என்ன நடந்தது என்பதையும் சொல்வதுதான் இந்தப்படம்.
அந்தஊரில் ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால் ஊர்ப்பஞ்சாயத்தில் அந்தஊரைச் சேர்ந்த இணைக்ஷளஞர்களையெல்லாம் சட்டையைக் கழற்றி நிற்கவைத்துவிட்டு சம்பந்தப்பட்ட பெண்ணைக் கூப்பிட்டு உன் கர்ப்பத்துக்குக் காரணம் யார் என்று கேட்கிறார்கள். அந்தப்பெண் யாரைக் கைகாட்டுகிறாரோ அவரைக் கட்டாயப்படுத்தி அந்தப்பெண்ணிக் கழுத்தில் தாலிகட்டவைத்துவிடுகிறார்கள். எந்தநாட்டில் இந்தஊர் இருக்கிறது என்று தெரியவில்லை. எல்லா இளைஞர்களையும் சட்டையைக் கழற்றிவிட்டு நிற்கச் சொல்தும் அவர்களின் பெற்றோரும் அதை ஆட்சேபிக்காமல் ஏற்றுக்கொள்வதும்… நம்பவே முடியாத காட்சிகள்.
மாளவிகாமேனன் நன்றாக இருக்கிறார். நன்றாக நடித்துமிருக்கிறார். அழுத்தமாக நாயகனை அவர் பார்க்கும் பார்வையில் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே பெரியஅனர்த்தத்தைக் கொண்டுவந்துவிடுகிறார். திட்டமிட்டு கர்ப்பமான அவர், அதற்குக்காரணமான காதலன் மறைந்தபிறகு இன்னொருவனைப் பலிகடாவாக்குவது எப்படிப்பார்த்தாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாதது. காதலிக்குக் களங்கம் எற்பட்டால் உண்மையாகக் காதலிப்பவன் அதைச் சரிசெய்யவேண்டுமாம். நல்லாயிருக்கும்மா உங்க நியாயம்.
ஆடுகளம்நரேன், இளவரசு, ஸ்ரீரஞ்சனி, சுஜாதா, தென்னவன் கஞ்சாகருப்பு உட்பட ஏராளமான நடிகர்கள் பட்த்தில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். அவர்களிடைய பாத்திரங்கள் விளக்கமாகக் காட்டப்படவில்லை. எடுத்துக்காட்டாக எந்நேரமும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு மகனையும் மனைவியையும் கிண்டல் செய்துகொண்டே உட்கார்ந்திருக்கிறார்.
நாயகியின் கதையைக் கேட்டதும் மனம்மாறி அவரை ஏற்றுக்கொள்கிறார் நாயகன். இந்தக்கதையை கல்யாணம் முடித்த அடுத்தநிமிடமே கேட்டிருக்கலாம் ஆனால் படம் முடிகிறவரை இழுத்திருக்கிறார்கள். அதற்குச் சரியான காரணங்களும் சொல்லப்படவில்லை. நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் எல்லாம் சரியாகச் செய்திருந்தும் அடிப்படைக்கதை சரியாக அமையாதது தான் பெரும்சோகம்.
