பின்நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது – அஜயன்பாலா

தமிழ் இலக்கிய வரலாற்றில் பின் நவீனத்துவப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் எம் ஜி சுரேஷ். இவர் இன்று (அக்டோபர் 3,2017) காலமானார்.

அவருக்காக இயக்குநர்,எழுத்தாளர் அஜயன்பாலா எழுதியுள்ள இரங்கற் குறிப்பு….

எம் ஜி சுரேஷ் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. பின் நவீனத்துவம் என்ற சொல், தமிழ்ச் சூழலில் உண்டாக்கிய அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கு சம்பந்தமே இல்லாத குழந்தை போன்ற சுபாவம் மிக்கவர். எண்பதுகளில் துவங்கி சிறுகதைகள் எழுதி வந்தவர் 90 களின் பிற்பகுதியில் தொடர்ந்து பின் நவீனத்துவம் க்யூபிசம் என தன் நாவல்களை அடையாளப்படுத்தி பரபரப்பை உண்டாக்கினார் .

அட்லாண்டிஸ் மனிதன், அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்,.யுரேகா என்றொரு நகரம் ,சிலந்தி ஆகியவை அவரது குறிப்பிடத்தகுந்த நாவல்கள்.

தமிழவன்,நாகார்ஜுனன், கோணங்கி , சாரு நிவேதிதா எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் எனப் பலரும் புனைவு மொழியில் பின் நவீனத்துவ படைப்புகளை உருவாக்கி வந்த காலத்தில் மிகவும் எளிமையான எழுத்தில் நாவலகளை எழுதியவர் . இதனால் இவரது படைப்புகள் கடும் விமரசனத்திற்கு ஆளான அதே சமயம் சுந்தர ராமசாமி மட்டும் எம் ஜி சுரேஷின் நாவல்களே உண்மையான பின் நவீனத்துவம் என கொண்டாடினார்.

இவற்றை விட பின் நவீனத்துவ கோட்பாடுகளையும் அறிஞர்களையும் எளிமையாக அறிமுகம் செய்யும் விதமாக இஸங்கள் ஆயிரம் என்ற நூலை எழுதினார்.

மருதா பதிப்பகம் பாலகுரு வெளியிட்ட இந்த புத்தகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மிகவும் சிக்கலான தத்துவங்களையும் , தெரிதா அல்தூசர், லக்கான் போன்ற ஆளுமைகளையும் அதில் சிற்ப்பாக அறிமுகம் செய்திருந்தார். ரவி எனும் அவருடைய நெருங்கிய நண்பரோடு இணைந்து பன்முகம் என்ற சிற்றிதழை கொண்டுவந்தார்.

வெறும் பத்ரிக்கையாளராக மட்டுமல்லாமல் திரைப்படத்துறையிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மாப்பசானின் நெக்லஸ் கதையை அடிப்படையாக வைத்து ஒரு திரைக்கதை எழுதி இயக்குனராவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்.

அப்போதெல்லாம் அடிக்கடி இந்தியா டுடே கல்யாணகுமாருடன் அடிக்கடி பார்ப்பேன். தங்கர்பச்சானுடன் அழகி படத்தின் திரைக்கதையில் பணி புரிந்தார். பட டைட்டிலில் அவர் பெயர் இடம் பெற்றிருந்தது.

சந்திக்கும் போதெல்லாம் சினிமா துறை பற்றி தீவிரமாக பேசுவார். மறைந்த நண்பர் ஓவியர் இயக்குனர் கிட்டான் எனும் கிருஷ்ண வேல் அவரோடு சேர்ந்து ஒரு திரைக்கதை எழுதியிருந்தார். இருவரும் என்னிடம் அதை வாசிக்கக் கொடுத்தனர். ஒரு தீவிரமான இசையமைப்பாளன் பற்றிய திரைக்கதை அது. ஆனால் அந்த திரைக்கதைக்கு தயாரிப்பாளர் தேடிக்கொண்டிருக்கும் போதே கிட்டான் இறந்தார் இதோ ஐந்து வருடங்கள் கழித்து எம் ஜி சுரேஷும் இறந்து விட்டார் அவர்கள் எழுதிய திரைக்கதையில் இறுதிக்காட்சி மகிழ்ச்சி முடிவு ஆனால் அவர்களைப் போல கருணையுடன் திரைக்கதை எழுதும் மனம் காலத்துக்கு இல்லை . மரணம் அவரது திரைப்பட கனவுகளுக்கும் மண் மூடிவிட்டது.

Leave a Response