
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைக்கப்பட்ட கண்ணகி சிலையை, மார்ச் 14 இரவு, மர்ம நபர்கள் அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர். இது, தமிழ் ஆர்வலர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், அரசுக்கு ஆபத்தான காரணமா என்ற சந்தேகங்களை கிளப்பி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 2008ம் ஆண்டு, கலெக்டராக சகாயம் பொறுப்பெற்றார். நாமக்கல் மாவட்டத்தை அழகுபடுத்தவும், சுற்றுலா தலமாக மாற்றவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த, 2009ம் ஆண்டு கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, முதன் முறையாக மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, வில்வித்தை போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவற்றுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, கொல்லிமலைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில், தாவரவியல் பூங்காவில், கிங்காங், கரடி போன்ற சிலைகளும், வண்ண ஓவியங்களும் உருவாக்கப்பட்டன. நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மங்கரடு, 50 அடி உயரம் கொண்டது. பாறைகள் சூழ்ந்து காணப்படும் மங்கரடை அழகுபடுத்தி, மெருகூட்ட நினைத்த கலெக்டர் சகாயம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், கண்ணகி சிலை அமைக்க முடிவு செய்து, 2 அடி பீடத்தில், 8 அடி உயரத்தில் கான்கிரீட் சிலை அமைக்கும் பணி முடித்து, 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள், மங்கரடில் இருந்த கண்ணகி சிலையை அடித்து நொறுக்கி சூறையாடி உள்ளனர். இது, தமிழ் ஆர்வலர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளதுடன், நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, சீரணி அரங்குக்கு எதிரே, கடந்த, 1968ம் ஆண்டு அமைக்கப்பட்ட கண்ணகி சிலை, கடந்த, 2002ம் ஆண்டு, அப்போதைய, அ.தி.மு.க., அரசால் அகற்றப்பட்டு, அரசு அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த சிலை, ஒரு கை சிலம்புடன், தலைவிரி கோலமாக, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கும் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. சிலையை அகற்றியதற்கு வாஸ்து சாஸ்திரம் காரணமா என்ற வினாவுக்கு, சிலையின் அடிபீடம் சேதமடைந்து இருப்பதாக காரணம் கூறப்பட்டது. தற்போது, நாமக்கல் கலெக்டர் அலுவலக கரட்டில் இருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்ட சம்பவம், அரசுக்கு ஆபத்தாகக் கருதப்பட்டதா என, பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகிறது.
இந்தச் சந்தேகத்தை தினமலர் நாளேடு எழுப்பியிருக்கிறது.
