பார்ப்பனர்கள் எப்போது மருத்துவம் படிக்கத் தொடங்கினாரகள் தெரியுமா?


மனுதர்மக் கல்விமுறைக்கு மெக்காலே கல்விமுறை முடிவு கட்டுவதற்கு முன் மருத்துவக் கல்வி பயின்ற பார்ப்பனர்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லி விடலாம். பிரித்தானிய ஆட்சியின் தொடக்கத்திலும் பார்ப்பனர்கள் முக்கியமாக ஐ.சி.எஸ். போன்ற நிர்வாகப் பதவிகளுக்குத்தான் பெரிதும் ஆசைப்பட்டார்கள். ஆனால் அலோபதி மருத்துவத் தொழில் காசு கொழிக்கும் தொழிலாக வளர்ந்த போதுதான் அவர்கள் மருத்துவக் கல்வியின் மீது கண் வைத்தார்கள். அது முதல் இத்துறையில் முற்றுரிமை செலுத்த அனைத்து வகையிலும் முயன்றார்கள். இப்போதும் இத்துறையின் மீது சற்றே தளர்ந்துள்ள தங்கள் பிடியை மீண்டும் இறுக்க எல்லா வகையிலும் முயன்று வருகின்றார்கள்.

தொன்மைத் தமிழகத்தில் பார்ப்பனர்கள் மருத்துவர்களாக இருந்ததில்லை. அரச குடும்பத்துக்கான அரண்மனை மருத்துவராகக் கூட இருந்ததில்லை. ஏன்? ஏனென்றால் மருத்துவர் நோயாளியைத் தொட்டுப் பார்க்காமல் சிகிச்சையைத் தொடங்கக் கூட முடியாது. காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்க்க வேண்டும். நாடிபிடித்துப் பார்க்க வேண்டும். சத்திரியர், வைசியர் உள்ளிட்ட சூத்திரர்களையும் சாதிகெட்ட பஞ்சமர்களையும் தொட்டால் தீட்டாகி விடுமல்லவா? அதிலும் இரத்தமும் சீழும் வடியும் காயத்துக்குக் கட்டுப்போட எப்படி ஐயர் மனம் ஒப்பும்? பார்ப்பனர்கள் மருத்துவத் தொழிலுக்கு ஆசைப்படாமைக்கு இதுவே காரணம்.

அதே மருத்துவத் தொழில் ஆங்கிலக் கல்வியோடும் அயல்நாட்டுப் பயணத்தோடும் இணைந்து வந்த போது காசுக்காகவும் செல்வாக்குக்காகவும் ஆசாரங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு ஸ்தெடஸ்கோப்புடன் கிளம்பி விட்டார்கள்.

சங்கர் நேத்ராலயாவின் தலைவர் டாக்டர் பத்ரிநாத் குறித்து நன் கேள்விப்பட்ட ஒரு செய்தி: அவர் கண் மருத்துவரான பின் வெளிநாடு சென்று தொழில் செய்யத் தீர்மானித்து காஞ்சி மகா பெரியவரிடம் ஆசிபெறச் சென்றாராம். மகா பெரியவர் அவரிடம் சொன்னாராம்:

“ஏன், இந்த நாட்டில் எல்லாருக்கும் கண் நன்னாருக்கோ? கடல் கடந்து போய்த்தான் மருத்துவம் பார்க்கணுமோ?”

சந்திரசேகரேந்திர சுவாமிகளின் கட்டளையை ஏற்றுத்தான் சங்கராச்சாரியாரின் பெயரிலேயே சங்கர் நேத்ராலயாவை பத்ரிநாத் தொடங்கினாராம். மகா பெரியவருக்குப் பின் வந்த பெரிய சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கடல்கடந்து சீனம் சென்றதற்கு சங்கரராமன் காட்டிய எதிர்ப்புஅவர் கொல்லப்படுவதற்கு ஒரு காரணமாயிற்று.

உடலுழைப்பு சாராத நிர்வாகத் துறையும் நீதித் துறையும் பார்ப்பனர்கள் பெரிதும் நாடிய துறைகளாக இருந்த நிலை மாறி, ஓரளவு உடலுழைப்பு சார்ந்த பொறியியலும், ஆசாரங்களைக் கைவிட வேண்டிய மருத்துவமும் அவர்களை ஈர்த்தமைக்குக் காசுபண, செல்வாக்கு நாட்டம் தூண்டுதலாயிற்று.

அப்படியானால் தொன்மைத் தமிழ்நாட்டில் மருத்துவத் தொழில் செய்தவர்கள் யார்? அது ஒரு குலத் தொழில். அத்தொழிலைச் செய்தது மருத்துவர் குலம். மருத்துவர் என்பது இன்றும் கூட நாவிதர்களின் குலப்பெயர். நாவிதர்கள் மழித்தலும் சிரைத்தலும் தவிர மருத்துவமும் செய்து வந்தார்கள். அவர்களே அரண்மனை மருத்துவர்கள். இராச இராச சோழன் தன் தலைமை மருத்துவனுக்கு “இராச இராசப் பெருநாவிதன்” என்று பட்டம் கொடுத்தானாம். (செய்தியில் பிழை இருப்பின் திருத்தலாம். பேராசிரியர் மணி அல்லது இறைநெறி இமயவன்?)

இன்றும் கூட நாவிதர் சங்கம் மருத்துவர் சங்கம் என்றே அழைக்கப்படுகிறது. தோழர் இரவிந்திரநாத் தலைமையில் ” சமூக நீதிக்கான டாக்டர்கள் சங்கம்” இயங்கி வருகிறது. ஏன் டாக்டர்கள் என்று சொல்ல வேண்டும்? மருத்துவர்கள் என்று சொல்லலாமே? என்று நான் கேட்ட போது அவர் சொன்னார்: “மருத்துவர் சங்கம் என்றால் சாதிச் சங்கம் என்று நினைத்து விடுவார்கள்.”

ஆகவே குலக் கல்வி முறைப்படி மருத்துவக் கல்வி பயில ஆகக் கூடுதலான தகுதி மருத்துவர் எனப்படும் நாவிதருக்குத்தான் உண்டு. ஆனால் அதிகாரச் செல்வாக்கையும் ஆங்கிலக் கல்வியையும் பயன்படுத்திப் பார்ப்பனர்கள் மருத்துவக் கல்வியில் முதன்மை பெற்று விட்டார்கள். இதற்கு அவர்கள் கையாண்ட ஒரு தந்திரம்தான் மருத்துவக் கல்லூரியில் சேர சமற்கிருத அறிவை ஒரு தகுதியாக்கியது. நீதிக் கட்சி அரசாங்கம்தான் இந்தத் தகுதியை நீக்கிற்று.

சமூக நீதிக்கான போராட்டத்தின் வலிமையால் கிடைத்த இட ஒதுக்கீட்டினால்தான் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஓரளவுக்கேனும் மருத்துவக் கல்வியில் இடம்பெற்று, சாதித்தும் காட்டியுள்ளார்கள். பார்ப்பனருக்கு இந்த சமூக நீதிச் சாதனை எப்போதும் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கிறது. நேரடியாகவோ சுற்றடியாகவோ இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட அவர்கள் புதுப்புது வழிகளில் முயன்று வருகின்றார்கள். அன்று சமற்கிருதக் கல்வி போல் இன்று ஆங்கிலக் கல்வி அவர்களுக்கு ஒரு கைக்கருவி. அதனால்தான் தாய்மொழிவழிக் கல்வியை எதிர்த்தது வருகிறார்கள். தமிழ் வழி மருத்துவக் கல்விக்குப் பிடிவாதமாக எதிர்ப்புக் காட்டி வருகிறார்கள். இதற்கான முயற்சிகளையே எள்ளி நகையாடி வருகிறார்கள். காங்கிரசு, பாசக தலைமைகளின் கொள்கைகள் இறுதி நோக்கில் பார்ப்பனர்களின் நலன் காக்கும்படியானவை.
மண்டல் குழு எதிர்ப்பில் அவர்கள் ஒரே நிலைப்பாடுதான் மேற்கொண்டார்கள்.

பார்ப்பன நலனுக்கும் உலக மயத்துக்கும் இந்திய மயத்துக்கும் உள்ள தொடர்பை நான் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. தேசிய இன உரிமைகள் ஒடுக்குண்ட மக்களின் நலனுக்கு உகந்தவை என்பதும் அவ்வாறே. ஒவ்வொன்றையும் இந்திய மயமாக்குவது பார்ப்பன-பனியா நலன்களுக்கு ஏற்றது. நீட் வழிப்பட்ட இந்தியமயமும் இப்படிப்பட்ட ஒன்றே. இது உடனே வெளிப்படையாகப் புலப்படாமல் போகலாம். ஆனால் காலப்போக்கில் இது மிகத் தீவிரமாக வெளிப்படும். இந்திய அளவிலான சிபிஎஸ்இ பாடத்திட்டம் சார்ந்த தகுதித் தேர்வுக்கும் மாநிலப் பாடத்திட்டம் சார்ந்த தகுதித் தேர்வுக்குமான வேறுபாட்டில் மொத்தத்தில் பார்ப்பனர்களின் கல்வி நலனுக்கும் மற்றவர்களின் கல்வி நலனுக்குமான முரண்பாடு பொதிந்துள்ளதா இல்லையா?

ஆகவே நீட் ஆதரவு என்பது இந்திய மய ஆதரவு. இந்திய மய ஆதரவு என்பது பார்ப்பன முதன்மைக்கும் பார்ப்பனியத்துக்குமான ஆதரவு. நீட் எதிர்ப்பு என்பது இந்தியமயத்துக்கான எதிர்ப்பு, மாநில உரிமை எனப்படும் தேசிய இன உரிமைக்கான ஆதரவு. ஒருபுறம் இந்தியமயமும் பார்ப்பன, பார்ப்பனிய நலனும் கைகோத்து நிற்கின்றன. மறுபுறம் மாநில உரிமை எனப்படும் தேசிய இனவுரிமையும் சமூக நீதியும் கைகோத்து நிற்கின்றன. நீட் போராட்டக் களத்தில் இதுதான் சமூக ஆற்றல்களின் அணிவகுப்பு.

எனவே நீட் எதிர்ப்புப் போராட்டத்தை இந்திய வல்லாதிக்க எதிர்ப்புப் போராட்டமாகவும், பார்ப்பன மேலாண்மைக்கு எதிரான போராட்டமாகவும் புரிந்து கொள்வதில் பிழையில்லை. இந்தப் போராட்டத்தின் இன்றைய குறியீடு அனிதா!

கோரிக்கை முழக்கம் எளிமையானது: நீட்டை ஒழிக்க அனிதா சட்டம் இயற்றுக!

இந்தக் கோரிக்கைக்குப் பின்னாலிருக்கும் சமூக உண்மைகளும் ஆற்றல்களும் முயன்று புரிந்து கொள்ள வேண்டியவை.

Leave a Response