கள்ளிச்செடி கூட வளரும் தமிழகத்தில் பாஜக வளராது – சீமான் திட்டவட்டம்


காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தம்பி ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின் முதல் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 16-09-2017 (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில், சென்னை, சாலிக்கிராமம், தசரதபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

முன்னதாக பா.விக்னேசு-வின் உருவப்படத்திற்கு சீமான் அவர்கள் சுடரேற்றி மாலை அணிவித்து, மலர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பா.விக்னேசு அவர்களின் நினைவு கொடிகம்பத்தில் புலிக்கொடியை ஏற்றிவைத்தார்.

‘சமர்பா’ குமரன் தமிழ் இன்னிசை பாடல்களுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது.

அவ்வயம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர்.

இறுதியாக சீமான் அவர்கள் நினைவுரையாற்றினார். அவர் பேசுகையில்,

கொடைகளில் சிறந்த கொடை எனப் போற்றப்படுவது பிறர் கேட்காமல் தானம் கொடுப்பதுதான். அவற்றிலும் சிறந்தது கேட்கும் திறனற்றவைகளுக்குக் கொடையாகக் கொடுப்பது என்கிறார்கள். அதனால்தான் தமிழ்க்கொடை வள்ளல்களில் பாரியும், பேகனும்தான் சிறந்த கொடை வள்ளல்களாகப் போற்றப்படுகிறார்கள். இவையாவற்றையும் விட சிறந்த கொடை உயிரையே கொடையாகக் கொடுப்பது. அப்படிப் பார்த்தால் தம்பி விக்னேசு தலைசிறந்தக் கொடை வள்ளல் ஆவான். உயிரையே கொடையாகக் கொடுப்பது தமிழர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. அது தமிழன் பரம்பரைப் பழக்கம். அவனுக்கு முன்பாக தம்பி முத்துக்குமார் தன்னுயிரை ஈந்தான். ஈழ நிலத்திலே நடத்தப்படுகிற இனப்படுகொலைக்கு எதிராக தமிழின இளைஞர்கள் போராடாது, திரையரங்குகளிலும், கேளிக்கை விடுதிகளிலும் கிடக்கிறார்களே என அவர்களை உசுப்புவற்காக தனது உடலிலே நெருப்பைக் கொட்டி செத்தான். அவனுக்கு முன்பாக அவனினும் மூத்தவன் தம்பி அப்துல் ரவூப். தனது மூன்று அண்ணன்மார்களின் உயிரைக் காக்க தங்கை செங்கொடி. அவனுக்குப் பிறகு தம்பி விக்னேசு, தற்போது தங்கை அனிதா என நீளுகிறது தமிழினக் கொடை வள்ளல்களின் பட்டியல்.

தம்பி விக்னேசு காவிரி நதிநீர் உரிமைக்காகச் செத்தான். ஆளுகிற ஆட்சியாளர்கள் காவிரியிலே தண்ணீரைப் பெற்றுத்தராது வஞ்சித்தார்கள். காவிரியில் தண்ணீர் வந்தால் விவசாயிகள் விவசாயம் செய்வார்கள். நிலத்தைவிட்டு வெளியேற மாட்டார்கள் என்பதால், காவிரியில் தண்ணீர் வராது பார்த்துக் கொண்டார்கள். நாம் தமிழர் ஆட்சியிலே தண்ணீர் வளத்தில் உள்நாட்டிலேயே தன்னிறைவு பெறுவோம். உள்நாட்டிலேயே நீர்நிலைகளை வெட்டி நீர்வளத்தை சேமித்து நீர்ப்பாசனத்தை உருவாக்குவோம்.

தமிழின உரிமைகளை மறுத்து வஞ்சித்து வருகிற தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவைத் தேர்தல் களத்தில் வஞ்சம் வைத்து பழிதீர்ப்போம். பாஜக வளரும் என்கிறார்கள். கள்ளிச்செடி கூட வளரும். ஒரு காலத்திலும் தமிழகத்தில் பாஜக வளராது.

தமிழர்கள் யாரும் இனி உயிரைக் கொடையாக கொடுக்கவேண்டாம்; சாதி, மத உணர்சிகளை சாகடித்துவிட்டு தமிழன் என்ற இன உணர்வை மட்டும் கொடுத்து “நாம் தமிழர்” என்று எழுந்து வாருங்கள்! அடிப்படை, அமைப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றி அமைப்போம் என்று குறிப்பிட்டார்.

நீட் தேர்வால் மருத்துவராகும் கனவு கலைக்கப்பட்டதில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவை ‘தலித்’ ‘திராவிடன்’ ‘இந்தியன்’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்திருந்தால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தலித் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், திராவிட மாநிலங்களில் ஏன் ஒருவரும் போராடவில்லை; ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பினரும் அனிதாவை தன் மகளாக, தங்கையாக, தோழியாக நினைத்து அவள் மரணத்திற்காக நீதிகேட்டு போராடிவருகிறார்கள். இதுதான் தமிழ்த்தேசியம்! மறுக்கப்படும் தமிழர்களின் உரிமைக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராடவேண்டிய வரலாற்றுத்தேவையிருக்கிறது. அதை முன்னெடுத்து செல்லவே நாம் தமிழர் கட்சி என்னும் மக்கள் புரட்சி படையைக் கட்டியெழுப்பி வருகிறோம்.

தமிழனே இங்கு ஒடுக்கப்பட்டுத்தான் கிடக்கிறான்! அடிமைப்பட்டிருக்கும் தமிழினம் மீட்சியுறாமல் விடுதலைபெறாமல் அதற்குள் இருக்கும் சாதிய விடுதலை, பெண்ணிய விடுதலை, பொருளாதார விடுதலை, வர்க்க விடுதலை, ஊழல் இலஞ்சம் உள்ளிட்ட எந்த விடுதலையும் சாத்தியமில்லை!

இவ்வாறு சீமான் தொடர்ந்து பேசினார்.

Leave a Response