
இதுவொரு ரியாலிட்டி ஷோ. ஒரு விஷயத்தை ஒத்துக்கிட்டு உள்ளே வந்திருக்கீங்க. திடீர்னு சில விஷயங்களுக்கு முரண்டு பிடிச்சா எப்படி? சிறுபிள்ளைத்தனமா இருக்கு. வெளியே போய் உங்க தொழில்லயும் இப்படித்தான் இருப்பீங்களா, நீங்கள்லாம் குழந்தைங்களா.. கொஞ்சி, கெஞ்சில்லாம் சொல்லிப் பார்த்துட்டேன்.- கமல்.
கமல் கோபமாக வெளியேறிச் சென்றதும் முதலில் பதறிப் போனவர் வையாபுரி. அந்தப் பதட்டத்தை உடனே வழிமொழிந்தவர் சிநேகன். மற்றவர்களின் பாவங்களுக்காக சிலுவையைச் சுமந்த இவரின் பாவமன்னிப்பு உண்மையிலேயே ஆத்மார்த்தமானதாகத் தெரிந்தது. அதில் போலித்தனம் தெரியவில்லை.
பழைய போட்டியாளர்களின் பிழைகளுக்காக புதிய போட்டியாளர்களிடமும் பேசாமல் இருப்பது முறையல்ல என்றுணர்ந்த கமலின் ஞானம் காரணமாக அவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தரப்பட்டது.
தன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார் சுஜா. ‘இதுவரை வெளியில் இருந்து பார்த்ததற்கும் உள்ளே சென்று பார்த்ததற்கும் வித்தியாசமாகத் தெரிந்த நபர் யார்?’ என்கிற கேள்விக்கு ‘சிநேகன்’ என்று பதில் அளித்தார். ‘விஷூவலா பார்க்கும் போது அவருடைய ஆறுதல் நடவடிக்கைகள் சந்தேகமாகத் தெரிந்தன. ஆனால் உள்ளே வந்து பார்க்கும் போது அவர் உண்மையாகவே ஆறுதல் சொல்கிறவராகத் தெரிகிறார்’
நமக்கும் சுஜாவின் இந்த பதில் உதவக்கூடும். சிநேகனை பலமுறை அப்படித்தான் நாமும் சந்தேகப்பட்டிருக்கிறோம். சுஜாவின் பதிலைத் தாண்டியும் ‘தடவியல் நிபுணர்’ என்று சிநேகனை கமல் வர்ணித்தது ஒருவகையில் ரசிக்கத்தக்க குறும்பு என்று தோன்றிற்று.
‘இந்த வீட்டிற்கு எவர் மறுபடியும் வந்தால் சந்தோஷமடைவீர்கள்? என்ற கேள்விக்கு தயக்கமே இல்லாமல் ‘ஓவியா’ என்றார் சுஜா. முன்னணி நடிகரின் பெயரை உச்சரித்துமே அவரின் ரசிகர்கள் என்றல்லாது பொதுவாகவே எழும் பலத்த கைத்தட்டல்களைப் போலவே அம்மணிக்கு ஓவியா புரட்சிப்படையின் அன்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.


