மது. புகைக் காட்சிகள் இல்லாத பசங்க படம்

சின்னநடிகர் பெரியநடிகர் என்கிற பேதமில்லாமல் எல்லார் படங்களிலும் மதுபானக்கடை விளம்பரம்போல மதுக்குடிக்கிற காட்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிற சூழல். இந்தக்காலத்திலும் அடங்காப்பசங்க என்கிற பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் அதுபோன்ற காட்சிகளே இல்லை என்று சொல்கிறார்கள். இத்தனைக்கும் வேலைஇல்லாமல் வெட்டியாக ஊர்சுற்றிக்கொண்டு இருக்கும் நான்குஇளைஞர்களின் கதையில் மதுபானக்கடை இல்லாமலிருக்கிறது வியப்பான செய்திதான். நால்வருக்கும் காதலிக்கும் ஆசைமட்டும் பிரதானமாக இருக்கிறது. அதனால் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்தாம் படத்தின் கதை. இந்தப்படத்தில் புகைபிடிக்கும்காட்சிகள், மது அருந்தும் காட்சிகள், இரட்டைஅர்த்தவசனங்கள் ஆபாசஉடைகள் என்று எதுவுமில்லை மாறாக இளைஞர்களின் மனதில் நல்லஎண்ணங்களையும் பிறர்க்கு உதவும் எண்ணங்களையும் உருவாக்கும் விதமாகப் படம் தயாராகியிருக்கிறது என்று சொல்கிறார் படத்தின் இயக்குநர் செல்வநாதன்.
இந்தப்படத்தில் கௌதம், பாவேந்தன், சுரேஷ்பாபு, சந்தோஷ் ஆகிய நால்வரும் கதாநாயகர்களாகவும் சத்யஸ்ரீ என்பவர் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடைபெற்றது. விழாவில் அபிராமிராமநாதன், எஸ்.வி.சேகர் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விரைவில் படம் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

Leave a Response