கன்னட கொடி வேண்டாம் என அறிக்கைவிடத் தயாரா? – பாஜவுக்கு சித்தராமையா சவால்

கர்நாடக மாநிலத்திற்கு என தனிக் கொடியினை வடிவமைத்து, அதனை சட்டபூர்வமாக ஏற்பதற்கான பரிந்துரைகளை வழங்கக் கோரி, ஒன்பது நபர் அதிகாரப்பூர்வ குழுவினை அமைத்துள்ளது கர்நாடக மாநில அரசு.

ஏற்கனவே, அதிகாரப்பூர்வமற்ற வகையில் ‘மஞ்சள் – சிவப்பு’ கொடியினை அம்மாநில மக்களும் அரசும் ‘கன்னட நாட்டின் கொடியாக’ பயன்படுத்தி வரும் நிலையில், அரசாங்கத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ கொடியினை வடிவமைக்க இப்போது அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு செயல்படுத்தப்படும் போது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அடுத்ததாக, மாநிலத்திற்கு என தனி கொடி உள்ள மாநிலமாக கர்நாடகம் விளங்கும்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா, ‘மாநில அரசுகள் மாநிலத்துக்கான கொடியினை வைத்துக்கொள்ளக் கூடாது என இந்திய அரசியல் சட்டத்தில் எந்தத் தடையும் குறிப்பிடப்படவில்லை என்பதால், கன்னட நாடு கொடியினை வடிவமைத்து கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்கும்.

பா.ஜனதா தலைவர்கள் இந்த வி‌ஷயத்தில் அரசுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார்கள்.துணிவிருந்தால் கர்நாடகத்திற்கு தனிக் கொடி வேண்டாம் என்று பா.ஜனதா அறிக்கை விடட்டும்.

தனிக் கொடி குறித்து அரசியல் சாசனத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை பா.ஜனதா தலைவர்கள் அறிந்து கொண்டு பேச வேண்டும். கர்நாடகம் தனிக் கொடியை உருவாக்குவது என்பது தேசிய ஒற்றுமைக்கோ அல்லது தேசிய கொடிக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் இந்த முன் மாதிரியை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.

Leave a Response