ரஜினிக்கு ஆதரவு திருமாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது


இலக்கை அறிந்து இலட்சியத்தை அடைவோம்.

இவ்வார ஆனந்த விகடனில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் திருமாவளவன் அவர்களின் பேட்டியும், அதன் தொடர்ச்சியாக நியூஸ் 18 ஊடகத்திற்கு அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் அண்ணன் வன்னியரசு பேட்டியும் எந்த அமைப்பில் இருந்தாலும் விசிக மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.

இந்நிலையில் தமிழர்களில் சிலர் நடிகர் ரஜினிகாந்தை விடுத்து , பிரச்சனையின் மையப்புள்ளியை மறந்து அண்ணன் திருமாவளவனை விமர்சிக்க தொடங்கி இருப்பது …ஆரிய –இந்துத்துவ கூடாரங்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.இதை த்தான் அவர்கள் எதிர்பார்த்தது.

ஆதிக்கம், சுரண்டல் போன்ற அரசியல் சொல்லாடல்களை அண்ணன் வன்னியரசு நடிகர் ரஜினிகாந்திற்கு ஆதரவான ஒரு நிலையில் இருந்து பயன்படுத்தியது எனக்கு ஆச்சர்யம்.

மேலும் முருகனுக்கு காவடி எடுக்குறாரே அண்ணன் சீமான் என்ற போது அது இந்துத்துவ பிள்ளையாருக்கு எதிரான கலக நடவடிக்கை இல்லையா என்பதும் சாய்பாபா எதிர் வைகுண்டர் , ஜான்சிராணி எதிர் வேலுநாச்சியார், மராட்டிய சிவாஜி-எதிர் பூலித்தேவன்,மருதுபாண்டியர்,தீரன் சின்னமலை, வீரன் சுந்தரலிங்கனார் என்றெல்லாம் நீளும் தமிழ் முன்னோர் ,விவேகானந்தர் எதிர் வள்ளலார், இராமன் எதிர் இராவணன் ,சவார்க்கார் எதிர் வ உ சி , என நீளுகின்ற முரண் பட்டியலை உருவாக்கி , தமிழ் மண் மீது இது நாள் வரை நிகழ்ந்த கருத்துத் திணிப்புகளை தகர்த்து தமிழின மேன்மையை உறுதிப்படுத்தும் இறுதிவேலை இல்லையா என்பதும் அண்ணன் வன்னியரசுக்கு தெரியாமலில்லை. இருந்தும்…அண்ணன் திருமாவளவன் சொல்லி விட்ட சொற்களுக்காக வார்த்தை சூதாட்டம் ஆட வேண்டிய நிலையில் அண்ணன் வன்னியரசு . புரிகிறது.

முதலில் ரஜினிகாந்த் பற்றிய சில சில நினைவூட்டல்கள்.

இதுவரை வருவேன், வந்துடுவேன் என்றெல்லாம் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கிற ரஜினி காந்த் போல இல்லாமல் நிஜமான ஒரு சூப்பர் ஸ்டார் ஒருவர் 50 வருடங்களுக்கு தமிழ் மண்ணில் அதுவும் சென்னையில் 40 வருடங்கள் வசித்தார். பல படங்களில் நடித்தார். ஆனால் அவர் தன் மாநிலத்திற்கு சென்று தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியையும் பிடித்தார். அவர் என்.டி.இராமராவ். தமிழ் மண்ணில் 40 வருடங்கள் வசித்த காரணத்தை காட்டி தமிழகத்தை ஆள அவர் முயலவில்லை.

இன்று பச்சைத்தமிழன் என்று பரபரப்பு காட்டும் ரஜினிகாந்தின் முன் வரலாறு தமிழின எதிர்ப்பு கொண்டது.

நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களுடன் தொடர்பு,நட்பு இத்யாதிகள் உண்டு..ஆனால் மராட்டிய பால்தாக்கரே தான் அவருக்கு கடவுள்.

தன் மகளின் திருமணத்தின் போது தலைப்பாகை கட்டி மராட்டிய முறையில் திருமணத்தை நடத்தி தன்னை மராட்டியனாக காட்டிக் கொண்டவர் ரஜினி.

தமிழ்த் திரையுலகினர் ஒன்று திரண்டு காவிரி நதிநீர் சிக்கலின் போது இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் காவிரி நீர் தர மறுக்கிற கன்னடனுக்கு நெய்வேலி மின்சாரத்தை தராதே என்று போராடிய போது மறு நாளே நதி நீர் இணைப்பிற்காக போராடுகிறேன் என்று உண்ணாவிரதம் இருந்து எழுந்து வந்த உணர்வலையை தடம் மாற்றி தனக்கான வேலையை சரியாகச்செய்தவர் ரஜினிகாந்த்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தது,தொடர்ச்சியாக தமிழக வாழ்வாதார பிரச்சனைகளில் கருத்து தெரிவிக்காமல் கமுக்கமாக இருந்தது..

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அவமானப்படுத்தி தொடர்ந்து இயங்கி வந்த சோ -வின் துக்ளக் விழாவில் ஆண்டு தோறும் தவறாமல் பங்கேற்று தனது இந்துத்துவ-தமிழின எதிர்ப்பு முகத்தை அப்ப்பட்டமாக காட்டிக் கொண்டது என்றெல்லாம் ரஜினி முகம் வெளிப்படையானது,

கன்னட நடிகர் இராஜ்குமார் கடத்தப்பட்ட போது பாய்ந்து பதறித் துடித்து, நக்கீரன் கோபாலை தொடர்பு கொண்டு மிகப்பெரிய ஆட்டம் ஆடிய அந்த நுண் உணர்வு கொண்ட ரஜினி

இசைப்பிரியாவிற்காகவோ, பாலச்சந்திரனுகாகவோ பேச வில்லை என்பதும், அந்நாட்களில் இவரது தமிழின விரோத போக்கினை அம்பலப்படுத்தி தமிழின நடிகர் சத்யராஜ் பேசியதை நாமெல்லாம் மறந்திருக்க முடியாது,

வீரப்பனாரை வஞ்சகமாக கொன்ற காவல்துறையை பாராட்டி ஜெயலலிதாவிற்கு தைரிய லட்சுமி பட்டம் கொடுத்து பரவசப்பட்டவர் இந்த ரஜினிகாந்த்.

இந்நிலையில்.. கொல்லைப்புறமாக தமிழ்நாட்டின் அரசியலை கைப்பற்ற நினைக்கிற பாஜகவின் கரத்தின் கொடும்வாளாக மாறத் துடிக்கிற ரஜினியை..விசிக வின் தலைவர் அண்ணன் திருமாவளவன் முன் நிறுத்துவதன் அரசியல் எதனாலும் சீரணிக்க முடியாது..

கடந்த சில வருடங்களாக தமிழ்ச்சமூகம் இதுவரை அடைந்து வந்திருக்கிற இழிவுகளுக்கு எதிராக போராட முன் வருகிற இக்காலக்கட்டத்தில் தான், ஜல்லிக்கட்டு என்கிற தமிழரின் பண்பாட்டிற்கு தடையை சாதி,மத பேதமற்று தமிழினம் தகர்த்தெறிந்து தனக்கான அடையாளங்களை, உரிமைகளை பாதுகாக்க துடிக்கிற இவ்வேளையில் தான் ..பாஜகவின் இந்துத்துவ ஆயுதமாக ரஜினி வெளிப்படுகிறார்.

பூர்வீகக்குடிகளான தமிழர்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரங்களை அடையும் பயணத்தில்..இடைமறித்து தடம் மாற்றும் வேலையை செய்ய வந்த மராட்டிய மாந்தீரிகர் தான் இந்த ரஜினி.

எதிரி கரங்களில் சிக்குண்ட என் வீட்டுக் கொள்ளி என் கூரையை எரிக்க பயன்படுவது போல.. என் உதிரத்து அண்ணன் ஆரிய- தமிழினப் பகை முடிக்க வந்த ரஜினியின் கரத்தில் வீபிடணாய் மாறி நிற்கிற விபரீதம் நிகழ்ந்து விடக் கூடாது என்கிற அச்சத்தில் நாமெல்லாம் பதறுகிறோம்.

சோவின் ஆதரவாளர்,பாபாவின் பைத்தியம், இமயமலையின் சாமியார் என காவி முகத்தை காட்டித்திரியும் ரஜினிகாந்த் – தன்னை திரையில் பெரியாரிய,அம்பேத்கரிய முகமாய் காட்ட கபாலியில் தேர்ந்தெடுத்ததும் ரஞ்சித் என்கிற ஒரு தமிழனைத் தான்,.

திட்டமிட்டு நகர்வுகள் நடக்கின்றன. இதுவரை தமிழன் எதிர் மராட்டியர் என்கிற நிலையை ஊடகங்களும்,மத்திய அரசின் நுண் அரசியல் ஆற்றலாளர்களும் தலித் எதிர் மற்றவர்கள் என மாற்ற முயல்கிறார்கள்.

இதை புரியாத நாம் வழக்கம் போல் அண்ணன் திருமாவை விமர்சித்து விட்டு…ரஜினியை மறந்து போகிறோம். அண்ணன் திருமாவளவனின் அரசியல் சறுக்கல்கள் தமிழ் மண்ணிற்கு புதிதானதல்ல. கடந்த 2009-ல் அண்ணன் திருமா அவர்கள் ஈழ அழிவிற்காக சாகும் வரை உண்ணாநிலை முடிவெடுத்த போது தமிழினத்தின் தலைவராக முன் நிற்க நேர்ந்த பொன்னான வாய்ப்பு வந்தது. அதை தனது திறமையால் முறியடித்து அவரது வாயாலேயே சோனியா காந்தி வாழ்க என்று முழங்க வைத்து, இராஜபக்சேவோடு கைக் குலுக்க வைத்தது அன்றைய முதல்வர் கருணாநிதி. அதன் பிறகு இனத்தை அழித்த காங்கிரசிற்காக ஓட்டுக் கேட்டு.. கடைசியில் விஜயகாந்தை நம்பி நின்று, இன்று ரஜினியின் வருகைக்காக காத்து நிற்பதில் வந்து நிற்கிறது அண்ணன் திருமாவின் அரசியல் விரக்தி.

ஒரு சாதி மறுப்பாளனாக அண்ணன் திருமாவின் மீது எனக்கு எண்ணற்ற அன்பும், மதிப்பும் உண்டு.

ஆனால் தன்னுடைய முடிவுகளால் சமகாலத்தில் ஒரு தேசிய இனத்தின் ஓர்மைக்கு நேருகிற தீங்கிற்கு அவர் துணைப்போகிறாரே என வேதனையும் உண்டு,

அண்ணன் வழக்கம் போல அவரது முடிவுகளை எடுக்கட்டும், அது அவரது அரசியல் முடிவு. அதை நினைத்து நாம் கவலைப்படத்தான் முடியுமே ஒழிய, அவரைப் பற்றி சிந்திக்க வைத்து, அவரை எதிர்க்க வைத்து அந்த இடுக்கில் நுழைந்து விட துடிக்கும் ஆரிய- இந்துத்துவ சூழ்ச்சியை நாம் அனுமதித்து விட முடியாது.

வழக்கம் போல் அண்ணன் திருமா தன் முடிவுகளால் சறுக்கட்டும். எதிரிக்கு ஆதரவை பெருக்கட்டும்.

அதில் நமக்கென்று எந்த கவலையும் இல்லை. ஆனால் நாம் உறுதியாக நிற்போம்.

எதிரியின் சூழ்ச்சியை அறிவோம். நகர்வை புரிந்துக் கொள்வோம்..

அர்ஜீனனை தவிர மற்றவர்களை தாக்க மறுக்கும் கர்ணனைப் போல நமக்கு முன்னே நிற்கும் அண்ணன் திருமாவை தவிர்த்து.. எதிரியின் இலக்கை அடிப்போம்.

தமிழர்கள் தங்களுக்குள்ளாக பிளவுண்டு எதிரிக்கு வழிவிட்டார்கள் என்கிற துயர் வரலாற்றை இத்தோடு முடிப்போம்.

இலக்கை அறிந்து இலட்சியத்தை அடைவோம்.

-மணி செந்தில்,
மாநில இளைஞர் பாசறை,
நாம் தமிழர் கட்சி.

Leave a Response