
எதிர்வினை என்றால், ரஜினி, லைகா இரு தரப்புக்கும் இருக்க வேண்டும். லைகா வை மட்டும் கண்டும் காணாமல் விட்டுவிடுவது நேர்மையற்ற போக்காக்கிவிடும்.
தமிழீழத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் 150 வீடுகள் கட்டிக்கொடுக்கப் பட்டுள்ளன. அந்த வீடுகளை மக்களுக்கு ஒப்படைக்கும் விழா 2017 ஏப்ரல் 9 ல் நடப்பதாகவும் அதில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பங்கேற்பதாகவும் செய்திகள் வந்தன.
இலட்சக்கணக்கான மக்களை இனப்படுகொலையாகப் பலியாக்கிவிட்டு, அதற்கான சர்வதேசச் சுதந்திர விசாரணைகளையும் தடுத்துவிட்டு, கண் துடைப்பாகச் சிலருக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக நடத்தப்படும் இலங்கை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க வேண்டாம் என்று, பல தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். அவற்றை ஏற்று, ரஜினி அந்த விழாவிற்குச் செல்லவில்லை என அறிவித்துள்ளார்.
விழாவை ஏற்பாடு செய்தது லைகா மொபைல்ஸ் என்ற நிறுவனம் இராஜபக்சேயின் மருமகனின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அந்த நிறுவனம் தயாரித்த ‘கத்தி’ படத்திற்குக் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டன. (தோழர் சீமான் ஒருவர் மட்டும் கத்தி படத்தை ஆதரித்தார்.)
கத்தி படத்திற்குப் பிறகு அந்த லைகா நிறுவனம் இதே தமிழ்நாட்டில் பல படங்களைத் தயாரித்தது. பல படங்களை வியாபாரம் செய்துள்ளது. விசாரணை, வெற்றிவேல், துருவங்கள் பதினாறு, எமன், குற்றம் 23, நானும் ரவுடிதான், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, தெலுங்கில் உருவான கைதி எண் 150 ஆகியவை லைகா மொபைல்ஸின் படங்களாகும். ஞானம் புரடக்சன்ஸ் என்ற பெயரில் ஏற்கனவே, பிரிவோம், சந்திப்போம் என்ற படத்தையும் அவர்கள் தயாரித்திருந்தார்கள்.
குறிப்பாக ‘விசாரணை’ படம் உலகத்தரத்தில் வந்த முதல் படம் ( உண்மை தான் ) என்று அனைத்துத் தமிழீழ ஆதரவாளர்களாலும் பாராட்டப்பட்டது. இந்தப் படம் ரஜினியின் மருமகனுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட படம்.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில், ரஜினியின் மருமகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘வடசென்னை’ அடுத்து வர உள்ளது. ரஜினியே நடித்துள்ள ‘2.O’ படமும் வர உள்ளது. இவை மட்டுமல்ல, கமலஹாசன் நடிப்பில் ‘சபாஷ் நாயுடு’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘இப்படை வெல்லும்’ ஆகிய படங்களும் விரைவில் திரைக்கு வரஉள்ளன.
விழாவில் ரஜினி பங்கேற்பதே தவறு என்றால், அந்த விழாவை நடத்துவது மிகப்பெரும் தவறு அல்லவா? ரஜினி இந்த விழாவுக்குப் போகக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ள எவரும், லைகா நிறுவனம் இப்படி ஒரு விழாவை நடத்தக்கூடாது என கூறியதாகத் தெரியவில்லை. அப்படிக் கூறியிருந்தால் முழு மனதுடன் வரவேற்கலாம்.
இந்த விழாவே தமிழர்களை ஏமாற்ற நடக்கும் விழா என்று தானே ரஜினியைப் போக வேண்டாம் என்கிறோம்? அப்படிப்பட்ட ஏமாற்றும் விழாவை ஏற்பாடு செய்த லைகா மொபைல்ஸ்க்கு எதிராக, “ஏப்ரல் 9 விழாவையே நடத்தக்கூடாது” என்று எவரும் இதுவரை அறிக்கை வெளியிடவில்லை. தமிழர்களை ஏமாற்றும் விதமாக ஒரு விழாவை நடத்தினால், லைகா நிறுவனப் படங்களைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் எவரும் அறிவிக்கவில்லை.
கத்தி படத்தைத் தாண்டி லைகா வின் வேறு எந்தப் படத்திற்கும் இன்றுவரை எதிர்ப்பு வராதது ஏன்? இந்த விழா தொடர்பாகவும் லைகா நிறுவனத்துக்கு எதிராகவும் எதிர்வினை ஆற்றாதது ஏன்? லைகா நிறுவனம் பற்றிய செய்திகள் அந்த அறிக்கைகளில் உள்ளன. மறுக்கவில்லை.
ஆனால் லைகா நிறுவனத்திற்கு நமது எதிர்வினை என்ன? என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. எதிர்வினை என்றால், ரஜினி, லைகா இரு தரப்புக்கும் இருக்க வேண்டும். லைகா வை மட்டும் கண்டும் காணாமல் விட்டுவிடுவது நேர்மையற்ற போக்காக்கிவிடும்.
அதி.அசுரன்


