
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து, மத்திய அரசின் நீதி விசாரணை வேண்டி, பன்னீர்செல்வம் அணி சார்பில் நேற்று, தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மதுரையில் மாநகர், புறநகர் அதிமுக சார்பில் பழங்காநத்தத்தில் நடந்த உண்ணாவிரதத்திற்கு சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் தலைமை வகித்தார். கோபாலகிருஷ்ணன் எம்பி, சரவணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் முத்துராமலிங்கம், தவசி, ஓஎஸ் அமர்நாத், பாண்டியம்மாள், பொன்னம்பலம், ராமசாமி, சுந்தர்ராஜன், முன்னாள் மேயர் பட்டு ராஜன், முன்னாள் மண்டலத் தலைவர் சாலைமுத்து உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
அப்போது, இது, காசு கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல; தானாக சேர்ந்த கூட்டம். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., மூலமாகவோ, வேறு அமைப்புகள் மூலமாகவோ, மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.செப்., 22ல், போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும். பிரதமர் மோடி வந்து பார்த்திருந்தால், வெளிநாட்டு சிகிச்சைக்கு கூட ஏற்பாடு செய்திருக்கலாம் என்றெல்லாம் பேசினர்.
ஆனால் அந்த உண்ணாவிரதத்துக்கு பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டி வந்தனர். இதை மதுரையில் செயல்படும் எழுத்தாளர் மதிவாணன் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய பதிவில்,
தடைகளை மீறி நடந்த பெண்கள் தின நிகழ்வு- வாடிப்பட்டி, மதுரை
ஓ பன்னீர் செல்வத்தின் போராட்டம், எடப்பாடியின் மதுரை வருகையால் இதர அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. ஆளுக்கு ரூபாய் 200 என்று லாரிகளில் ஆள் ஏற்றினர் ஓ பி அஇஅதிமுகவினர். இப்பிரச்சனைகளையும் மீறி 130 பெண்கள் திரண்டனர். வாடிப்பட்டி பேரூராட்சி முன்பு கழிப்பறை, வீடு, உணவு, குடிநீர், பேரூராட்சி பகுதிகளிலும் வேலையுறுதித் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தை பெண்கள் தின நிகழ்வாகக் கட்டமைத்தனர் என்று எழுதியுள்ளார்.


