
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ‘மராட்டிய தமிழர்கள் நிதியுதவி செய்யுங்கள்’ என இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி பொன்.அன்பழகன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மராட்டிய மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரும், ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான மராட்டிய மாநில ஒருங்கிணைப்பாளருமான இந்திய ஆட்சிப்பணி அதிகாரி பொன்.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
உலகத்திலேயே முதல் தரம்மிக்க அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழியான தமிழைத் தவிர மற்ற செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு இருக்கைகள் உள்ளன. அங்கு தமிழ் இருக்கை ஒன்றை நிறுவுவதற்கான அனுமதியை அமெரிக்காவில் வாழும் மருத்துவத்துறை டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இதற்கான செலவு சுமார் 40 கோடி ஆகும். இதில், 6 கோடியே 70 லட்சத்தை தங்கள் சொந்த சேமிப்பில் இருந்து வழங்கி உள்ளனர்.
மீதியுள்ள 33 கோடிக்கும் அதிகமான நிதியை உலகத்தமிழர்களிடம் நன்கொடையாகத் திரட்டி வருகின்றனர். இந்த முயற்சிக்கு துணை நிற்கும் வகையில் மராட்டிய மாநில தமிழ் ஆர்வலர்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் எனப் பலரிடமும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
இதில், தொழில் அதிபர்கள் முத்துக்கருப்பன் செட்டியார், டென்சிங், வருமான வரித்துறை ஆணையர் ராஜன், எழுத்தாளர் சுபாஸ் சந்திரன், இலெமுரியா அறக்கட்டளை தலைவர் குமணராசன், தோகா வங்கி நிர்வாக தலைவர் சேதுராமன் சாத்தப்பன் உள்ளிட்டோர் தங்கள் நிதியினை ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதவிர பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அதிபர் பாலசுப்பிரமணியம் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார்.
இவ்வாறு சேரும் நிதி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தினரால் தமிழ் இருக்கைக்காகத் தொடங்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் நேரடியாகவும், மும்பை இலெமுரிய அறக்கட்டளை மூலமாகவும் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரையில் ரூ.11 லட்சம் வரை நிதி அனுப்பப்பட்டுள்ளது. நிதியைப் பெற்றதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒப்புகைச் சீட்டு நிதி அளித்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
நமது மொழியின் பாதுகாப்பிற்காகவும், வருங்கால தலைமுறை தமிழ் மொழியைக் கற்பிக்கவும், உலகின் பிற நாடுகளிலும் தமிழின் பெருமை அறியப்படவும் தமிழர்கள் அனைவரும் உதவ முன் வர வேண்டும். மராட்டியத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், அதிகாரிகள் அனைவரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய நிதியளிக்க விரும்புவோர் 9820281623, 9322514970, 8108999901, 9821512858 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் நிதியினை சேர்ப்பது குறித்த விவரங்களை பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


