மாகொழுந்து, கார்த்திகைப்பூக்கள், ஆவாரம்பூ ஆகியன கலந்த தொகுப்பு

இயக்குநரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ், தன்னுடைய தனிப்பட்ட மற்றும் திரையுலக அனுபவங்களை விக்னேஷ்வராகிய நான் என்கிற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். அப்புத்தகம் பற்றி கவிஞர் ராஜ்குமார் எழுதியுள்ள உணர்வுரை….

கார்த்திகை பூக்களை காடு மேடு என பொங்கல் நாளில் தேடாத இடமே இருக்காது. கார்த்திகை பூக்கள் பூசணிக்காட்டில் இருக்கும், அறுகம்புல் படர்ந்த மேகாட்டில் இருக்கும், கள்ளிச்செடியின் கீழ் ஒரு கொத்து பூத்திருக்கும், அங்க இங்க தேடி எப்படியும் ஊர்க்காரங்க கார்த்திகை பூக்கள் என்னும் சிறுபூளை பூக்களை அவரவர் வீட்டின் முற்றத்தில் காட்டுவோம். கார்த்திகை பூக்களோடு ஆவாரம் பூக்கள், ஆவாரம் பூக்களை பூனைக்கண் கொண்டு தேடவேண்டியதில்லை. வண்டித்தடம், ஓடும் ஆத்தங்கரை ஓரம், எந்த வேலியிலும் மஞ்சள் கொத்து உள்ளங்கையில் அகப்படும்.
கார்த்திகை பூக்கள், ஆவாரம் பூக்கள், மாஇலை மூனும் கோர்த்து கட்டினால் தான் எங்களூரில் காப்புக்கட்டு என்பார்கள். தை பொங்கலுக்கு கட்டாயம் வீடு தவறாமல் கட்டியிருப்பார்கள்.
வெங்கடேஷ் சார் வாழ்வில் ஒரு பகுதி மா கொழுந்தும், காதலில் கார்த்திகை பூக்களையும், ஷங்கர் நட்பில் ஒரு கொத்து ஆவாரம்பூக்களையும் கலந்து காந்திருந்து கட்டிய தொகுப்பு தான் “விக்னேஷ்வரனாகிய நான்”.
“ஓலையக்கா கொண்டையிலே ஒரு சாடு தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலைநெறையா முக்காடு” எங்க ஊரின் காணும் பொங்கல் பாட்டு இது. வெங்கடேஷ் சார் தன் வசந்த வாழ்வின் நுட்பமான நாட்களை தொகுத்து கூடை நிறைய தாழம்பூக்களை கொடுத்திருக்கிறார்.
இதன் ஒரு கரையில் இயக்குநர் ஷங்கரும், இயக்குநர் வசந்தபாலனும் இந்த பெருநதிக்கு கோழிக்கொண்டை அல்லது வாடாமல்லி போல அன்பை அள்ளி அள்ளி வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்கள்.
இதுவரை இயக்கிய படங்களின் எண்ணிக்கை 21 அடுத்த வருடம் முடிவதற்குள் 25 முடிந்திருக்கும். ஒரு தோராயமான கணக்கல்ல இது சினிமாவின் கட்டாயமான கணக்கு.
காடெல்லாம் திரிந்து வெங்கச்சாங்கல் பொறுக்கி கன்னிமார் வைப்போம், ராசு ஊசி பட்டாம் முளைக்குது பாரு பொங்கல் வருதுனு அர்த்தம் என கண்ணம்மா அப்பத்தா சொல்லும், ஆமாம் இந்த புத்தகம் சர்க்கரை பொங்கல். இனிப்பு கெட்டியான இந்த பொங்கலை உள்ளங்கை நிறைய ஏந்தி சாப்பிட்ட தேக்க இலை வாசத்தோடு உள்ளிற்ங்கும்.
எத்தனை காளைகள் ரேக்ளா ரேசில் நின்னாலும், பொள்ளாச்சி சுத்து வட்டாரத்தில் பங்காளி குளத்துக்காட்டு பாப்பு கயிறு பிடித்து ஏறி நிற்கும் சவாரி வண்டியை பார்க்க கண்கொட்டாமல் ஒரு கூட்டம் பாப்பனோட காளையாம் களத்துலனு சொல்வாங்க. எத்தனையோ சினிமாவில் புக்கு வந்தாலும் இது ஏ.வெங்கடேஷ் புக்குனு சாட்டைவாரை தூக்கி நிற்கிறார். ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரு வேகம் இருக்கும், அந்த வேகம் தான் ஏ.வெங்கடேஷ் என்கிற டபுள் பேரல் துப்பாக்கி.

Leave a Response