வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க விழா – கவிஞர் சுகிர்தராணியின் குற்றச்சாட்டும் பேரவையின் விளக்கமும்

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை   மற்றும் நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் ஆகியன இணைந்து நடத்தும்  (FeTNA)2016 ஆம் ஆண்டு தமிழ் விழா, நியூஜெர்ஸி மாநிலம் ட்ரென்டன் நகரில். ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. 4   ஆம் தேதி வரை இந்த விழா நடந்தது.

தனித் தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டமாக இந்த ஆண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இவ்விழாவில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து நடிகர் ஜெயம்ரவி, கவிஞர் சுகிர்தராணி உட்பட பலர் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் திட்டமிட்டபடி அவர்கள் விழாவில் பங்கு பெறவில்லை.

விழாவுக்கு அழைத்துவிட்டு முறையாகத் தொடர்புக்கு வராமல் இருந்து என்னை அவமானப்படுத்திவிட்டனர் என்று கவிஞ்ர் சுகிர்தராணி தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருந்தார். ஜூலை இரண்டாம்தேதி பதிவிடப்பட்ட  அவருடைய பதிவில்….

FeTNA வட அமெரிக்க தமிழ்ச்சங்கம் நியூஜெர்ஸிக்கு என்னை விருந்தினராக அழைத்திருந்தார்கள்.மூன்றுவார காலம் விடுப்பு எடுக்கச் சொன்னார்கள்.பள்ளியிலும் விடுப்புக் காலத்தில் மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி இருந்தது.அதையும் செய்துவிட்டு இரண்டு மாதமாக கல்வி இயக்குரகம்,காவல் நிலையம் என அலைந்து திரிந்து படாத பாடுபட்டு அரசிடமிருந்து NOC வாங்கிவிட்டேன்.விசாவுக்கு அவர்களே ஏற்பாடு செய்தார்கள்.இடையே என்ன நடந்ததோ தெரியவில்லை.பத்து நாட்களாக சென்னையிலுள்ள ட்ராவல் ஏஜெண்ட் என் அழைப்பை எடுக்கவில்லை.நியூஜெர்ஸியிலிருந்தும் இதுவரை என்ன நடந்தது என்றோ ஒரு சிறு வருத்தமோகூட எனக்குத் தெரிவிக்கவில்லை. FeTNA நிர்வாகிகளின் பொறுப்பற்ற தனத்தையே இது காட்டுகிறது. ஒரு கவிஞராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்னை அவர்கள் தாமாகவே அழைத்து இவ்வாறு செய்து என்னை அவமானப்படுத்தியதாகவே உணர்கிறேன்.நான் நியூஜெர்ஸி சென்றிருப்பதாக நினைத்துப் பேசிக் கொண்டிருக்கும், நியூஜெர்ஸி செல்லவில்லையா எனக் கேட்டுக்கொண்டிருக்கும் அன்பு நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் என் அன்பு.மற்றபடி FeTNA விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகள்.

என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேரவையின் முன்னாள் செயலர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்….

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கவிஞர் சுகிர்தராணி அவர்களுக்கு

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் நீங்கள் கலந்து கொள்ளமுடியாமைக்கு வருந்துகிறேன்.

எனது பெயர் சிவா…பேரவையின் முன்னாள் செயலர், தொடர்பாளர், முன்னாள் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க தலைவரும் கூட….

எல்லா ஏற்பாடுகளும் நல்லப் படியாகவே நடந்தது, பேரவை விழாவிற்கு பல தினங்கள் முன்பே அமெரிக்க தூதரகத்தில் முறைப் படி முன் அனுமதி சந்திப்பு ஏற்பாடும், அதற்கு அடுத்தடுத்து செய்ய வேண்டிய சில ஏற்பாடுகள் “சென்னை எஜட்ண்டுகள்” சரியாக செய்ய வேண்டிய பணி தாமதத்தல் சில தவறுகள் நடந்து விட்டன. உங்களுக்கும் மட்டும் அல்ல, கிட்டதட்ட 15 நபர்கள் கலந்துக் கொண்டு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நாடகம் “கங்கை கொண்ட சோழன்” – அனைத்து கலைஞர்களும் வர முடியாமல் போய்விட்டது!!! நடிகர் ஜெயம் ரவியும் வர முடியாமல் போய்விட்டது!!! இதனால் விழா குழுவினர்கள் மிகுந்த வருத்தோடு இருந்தார்கள், என்ன செய்வது, எப்படி அணுகுவது என்ற பரபரப்பில் உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது!

இந்த முழு தவறுக்கும் பேரவை வருந்துகிறது. இது தான் உண்மை!

உங்களை “அவமானம்” படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட பேரவைக்கு இல்லை! பேரவைக்கு அதுப் போல எந்தவித நோக்கமும் யார் மீதும் எப்பொழுதும் இருந்தது இல்லை! என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிகிறேன்…

உங்களது ஆதங்கம் புரிகிறது. உங்களது கோபம் புரிகிறது! ஆனால் நீங்கள் சற்று அவசரப் பட்டு பேரவை பற்றி தவறாக எழுதி விட்டீர்கள்!!! இதனால் பேரவையை சிலர் மிக தவறாக புரிந்து கொள்ள நேரிடும் அல்லவா!

பேரவையின் மாண்பு பற்றி தெரிந்து கொள்ள கவிஞர்கள் குட்டி ரேவதி, கவிஞர் தமிழச்சி தங்கப் பாண்டியன், கவிஞர் தாமரை, கவிஞர் அறிவுமதி, கவிஞர் நா முத்துகுமார் இவர்களிடம் அவசியம் கேட்டு பாருங்கள்!

நந்தன் கதையை மேடை ஏற்றியது பேரவை…
சக்தி கலை குழுவை மேடை ஏற்றியது பேரவை….
மணிமாறன், மகிழினி பறையை மேடை ஏற்றியது பேரவை….
கூத்தாட்ட, பறை, கலைஞர்களை மேடை ஏற்றியது பேரவை…..

தமிழ்ச் சங்கப் பேரவைக்கு என்று மிகப் பெரும் மாண்பும், மரியாதையும் அமெரிக்க தமிழர்களிடம் மட்டும் அல்ல, உலக தமிழர்களிடம், குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல், கலைத் துறை, இலக்கியத் துறை நண்பர்களிடம் கேட்டு பாருங்கள்…..பேரவை பெருமை உரைப்பார்கள்!!!!

உங்களுக்கு நடந்தது மிக தவறு! பேரவை வருந்துகிறது!
இனி இதுப் போல தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறோம்!!!

ஆனால் உங்களை போல சமுதாய மாற்றத்தை விரும்பும் எழுத்தாளர்களை பேரவை என்றும் அவமான படுத்தியது இல்லை என்பதை மிக அடக்கத்தோடு சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளேன்.

என்று கூறியிருக்கிறார்.

Leave a Response