
கடந்த திமுக ஆட்சியில் மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் சொல்லப்பட்டன.
இப்போதைய முதல்வர் அதை ஒரு முக்கிய குற்றச்சாட்டாக வைத்தார்.அவர் ஆட்சிப்பொறுப்பேற்று நான்கு மாதங்கள் ஆகிவிட்ட போதும் அதை தடுக்க முடியவில்லை.
இதுபோன்ற கூடுதல் வசூலில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் கூடுதல் வசூல் புகார்கள் மட்டும் முடிவுக்கு வரவில்லை.டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறும் விதம்,அரசு நிர்ணயித்த விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் இருந்தும், கூடுதல் வசூல் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒரு சில ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா கடைகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறதா கூடுதல் வசூல் குறித்து வரும் புகார்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அரசு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக பணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. ஆனால், நடவடிக்கை எடுத்தும் ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் வசூல் செய்வதாக புகார்கள் தொடர்வது, அரசின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பாகவே உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதற்கிடையே, பணமாக கூடுதல் தொகை கேட்பதைத் தாண்டி, தற்போது யூபிஐ மற்றும் க்யூஆர் கோடு மூலமாகவும் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மதுபாட்டிலின் விலையைவிட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.30 வரை தொகையை சில இடங்களில் டிஜிட்டல் முறையில் செலுத்துமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதனால், அரசு நிர்ணயித்த விலையைவிட பெறப்படும் இந்த கூடுதல் தொகை யாருடைய கணக்கிற்கு செல்கிறது டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரியாமல் தனிப்பட்ட யூபிஐ கணக்குகள் அல்லது க்யூஆர் கோடுகள் பயன்படுத்தப்படுகிறதா இதை அதிகாரிகள் கண்காணிக்கிறார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வது மட்டுமே தீர்வல்ல, கூடுதல் வசூலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டாஸ்மாக் விற்பனையை படிப்படியாக டிஜிட்டல் முறைக்கு கொண்டு வருவதாக அரசு கூறி வரும் நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையே கூடுதல் வசூலுக்குப் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கையில் பணம் வாங்கினால் கண்காணிக்க முடியும் என்ற நிலையில், யூபிஐ பரிவர்த்தனைகளுக்கும் கணக்கு இருக்கும். அப்படியிருக்கும்போது, கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வருவது டாஸ்மாக் நிர்வாகத்தின் கண்காணிப்பு முறையில் உள்ள குறைபாட்டை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கூடுதல் வசூல் புகார் வந்தவுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு கடையிலும் தனித்தனியாக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைவிட, கூடுதல் வசூலுக்கு பின்னால் இருக்கும் நிர்வாகக் குறைபாடுகளை கண்டறிந்து நிரந்தரமாக தடுப்பதே முக்கியம் எனக் கூறப்படுகிறது. டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் கிடைத்து வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் விற்பனை நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது அவசியம்.
அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு மதுப்பிரியர்கள் தள்ளப்படுவதாக புகார்கள் எழும்போது, அதை வெறும் ஊழியர்களின் தவறாக மட்டும் பார்க்காமல், டாஸ்மாக் நிர்வாகத்தின் கண்காணிப்பு தோல்வியாகவும் அரசு பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் வசூல் என்ற புகார் தொடர்வதும், தற்போது யூபிஐ மூலமாகவும் கூடுதல் தொகை பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுவதும் தமிழக அரசின் டாஸ்மாக் கண்காணிப்பு முறைக்கு எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.நடவடிக்கை எடுத்ததாக அறிவிப்பது மட்டும் போதாது,கூடுதல் வசூலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
– மா.பாகன்


