
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….
அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் அம்பேத்கர்,பெரியார் மற்றும் ஜவகர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது.இது உள்நோக்கத்தோடு நடந்துள்ளதா? என கேள்வி எழுகிறது.இதற்கு பொறுப்புள்ள அதிகாரிகள்,அமைச்சர்கள் உரிய விளக்கத்தை அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிழைகள் நடக்காத வகையில் பார்த்துக் கொள்ளவேண்டும்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல.இதுவரை வழங்கி வந்த பாதுகாப்பை வழங்கவேண்டும்.அதற்கான ஏற்பாடுகளை தமிழகஅரசு மேற்கொள்ளவேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன் வைத்துள்ள விமர்சனம்,கோரிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அப்படியே வழிமொழிகிறது.தோழமைக் கட்சிகளைப் புண்படுத்தாத வகையில் அரசு செயல்பட வேண்டும்.
தவெக தலைமையிலான இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தலித் மக்களுக்கு இன்னும் பல சட்டப்பூர்வ உரிமைகள் நிறைவேற்ற வேண்டி உள்ளன.இந்தியா முழுவதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற அதிகாரிகளின் கருத்துகளால் பல நல்ல திட்டங்கள் முடங்குகின்றன. ஆட்சியாளர்கள் விரும்பினாலும் அதிகாரிகள் சில இடங்களில் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியாக,தலித் மக்களின் மேம்பாட்டுக்காக அரசு செய்யவேண்டிய அவசியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியும்,கோரிக்கைகளை வலியுறுத்தியும் உரிய தீர்வுகளைப் பெற விசிக தொடர்ந்து குரல் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.


