
தமிழ்நாடு அரசால் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக ஆதி திராவிடர் நலத்துறை உருவாக்கப்பட்டது.பல்லாண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (Adi Dravidar and Tribal Welfare Department) என்ற பெயர்,அதிகாரப்பூர்வமாக சமூக நீதித் துறை (Social Justice Department) என மாற்றப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை (Government Order – G.O. Ms. No. 35) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் (M. Sai Kumar) வெளியிட்டுள்ளார்.
இந்தத்துறைக்கு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) முக்கியத் தலைவர்களில் ஒருவரான வன்னிஅரசு புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார்.அவர் பதவியேற்ற தருணத்திலேயே,சமூக நீதித் துறை அமைச்சர் என்றே தமிழக அரசால் குறிக்கப்பட்டார்.அப்போதே இந்தத் துறையின் பெயர் மாற்றப்படப் போகிறது என்ற பரவலான பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 166-ன் கீழ் (Article 166 of the Constitution of India) வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில்,ஆளுநரின் ஒப்புதலுடன் இந்த அதிகாரப்பூர்வப் பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மனிதவள மேலாண்மைத் துறை மூலம் ஜூலை 6, 2026 தேதியிட்டு இந்த அதிரடி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவல் விதிமுறைகள் 1978-ன் (Tamil Nadu Government Business Rules, 1978) முதல் அட்டவணையில் உள்ள பழைய பெயர் நீக்கப்பட்டு, இனி சமூக நீதித் துறை என்ற புதிய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.வெறும் பெயர் மாற்றம் மட்டுமின்றி, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார, கல்வி மற்றும் சமூக உரிமைகளை ‘சமூக நீதி’ என்ற பரந்த பார்வையின் கீழ் கொண்டு வருவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அக்கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவிக்குமார் இதுகுறித்து எழுதியுள்ள கட்டுரை….
தமிழ்நாட்டு அமைச்சரவையில் எஸ்சி வகுப்பைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக இடம்பெற்றிருப்பது இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் நடந்திராத சாதனையாகும். “இப்போதுதான் எஸ்சி சமூகத்தின் மக்கள் தொகைக்கு இணையான பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் கிடைத்துள்ளது” என்பதை முதலமைச்சரிடம் பேசும்போது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் நமது பாராட்டுகளுக்கு உரியவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அமைச்சரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திரு வன்னிஅரசு அவர்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.இது ஆதி திராவிடர் சமூகத்தினரிடையே சொல்லவொண்ணா மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை என்ற அமைச்சகத்தின் பெயர் சமூகநீதித்துறை என மாற்றப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியானது. அது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதி திராவிடர் நலத் துறையின் பெயரை மாற்றவேண்டும் என வலதுசாரி சார்புகொண்ட சிலர் கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்தி வந்தனர்.ஆனால் இதற்கு முன்பிருந்த அதிமுக,திமுக அரசுகள் அதற்கு இணங்கவில்லை.அதற்குக் காரணம்,ஆதி திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் அல்ல என்பதும்; அந்தப் பெயரைத்தான் பயன்படுத்த வேண்டும் என 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதுமாகும்.
தமிழ்நாட்டின் எஸ்சி பட்டியலில் முதலாவதாகவும் அதிக எண்ணிக்கை கொண்டதாகவும் குறிக்கப்பட்டுள்ள பிரிவு ஆதி திராவிடர் என்பதாகும்.அதைப் பார்க்கும்போது ஆதிதிராவிடர் என்பது ஒரு சாதியின் பெயர் என்றே பலரும் கருதுவர்.ஆனால் அதுவொரு சாதியின் பெயர் அல்ல.1922 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை ஆண்டுகொண்டிருந்த நீதிக்கட்சி ஆட்சியின்போது ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றைய தலைவர்களாயிருந்த பெருந்தலைவர் எம்.சி.ராஜா,மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் போராடிப்பெற்ற ‘சாதி கடந்த அடையாளம்’ அது.அதற்குமுன் ஆதி திராவிடர் என்ற பெயரில் எந்தவொரு சாதியும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை.
புரட்சியாளர் அம்பேத்கர் முன்வைத்த சாதிஒழிப்பு என்ற செயல்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனில் பட்டியலின மக்கள் ஒன்றுபட வேண்டும் அதற்கு அவர்கள் தமக்கிடையிலான பாகுபாடுகளைக் களைந்துகொள்ளவேண்டும்.உட்சாதிப் பிரிவுகள் என்பவை சனாதன இந்துமதத்தின் சூழ்ச்சி.அது தொடரும்வரை அந்தப் பிரிவுகளின் அடிப்படையிலான வேற்றுமைகளும் பாகுபாடுகளும் தொடரவேசெய்யும்.அதனால்தான் உட்சாதி அடையாளங்களை முன்னிறுத்தக்கூடாது என அம்பேத்கர் வலியுறுத்தினார்.அம்பேத்கரின் கருத்தியல் வழிநின்று பார்த்தால் எஸ்சி மக்கள் தம்மைச் சாதிகடந்த ஒரு அடையாளத்தின்கீழ் திரட்டிக்கொள்வது உடனடி அவசியம் என்பதை உணரலாம்.இதை அம்பேத்கர் பிறப்பதற்கு முன்பே புரிந்துகொண்டிருந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள் ஆவர்.அதனால்தான் சாதி கடந்த அடையாளமாக ‘ஆதி திராவிடர்’ என்ற பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தம்மை அமைப்பாகத் திரட்டிக்கொண்டு செயல்பட்டுள்ளனர்.அவ்வாறு உருவான அமைப்புகளில் புராண அடையாளமோ,மத அடையாளமோ அற்ற ஒரு ‘சமயச் சார்பற்ற’ (secular ) வகையினமாக முன்வைக்கப்பட்டது ஆதி திராவிடர் என்பதே ஆகும்.அதை முன்வைத்த தலைவர்களின் அரசியல் முதிர்ச்சியும், தொலைநோக்குப் பார்வையும் போற்றுதலுக்குரியவை.அது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்குமான முன்னுதாரணம் ஆகும்.
சமூக நீதி அமைச்சகம் என்பதும் நன்றாகத்தானே இருக்கிறது என சிலருக்குத் தோன்றலாம்.ஒன்றிய அரசில் வரலாற்று ரீதியாக,1985-ஆம் ஆண்டுவரை பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) தொடர்பான விவகாரங்கள் அவற்றின் முக்கியத்துவம் கருதி உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்தன.1985 இல் அவற்றுக்கென நலத்துறை எனத் தனித்துறை உருவாக்கப்பட்டது.1998-ஆம் ஆண்டில், அப்போதைய வாஜ்பாய் அரசாங்கம் அதை சமூக நீதித் துறை எனப் பெயர் மாற்றம் செய்தது;1999-ஆம் ஆண்டில் தனியே பழங்குடியினர் விவகார அமைச்சகத்தையும் உருவாக்கியது.
இப்போது சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் என அது பெயரிடப்பட்டிருக்கிறது.அது,சமூகத்தின் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலைப் பிரிவினரான — பட்டியல் சாதியினர்,பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள்,மூத்த குடிமக்கள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோரின் — நலன்,ஆகிய பொறுப்புகளைக் கவனிக்கிறது.
இந்திய நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 17 % இருக்கும் எஸ்சி சமூகத்தினருக்கென தனி அமைச்சகம் இல்லாத நிலையில் அம் மக்களின் நலன்கள் பெரிதும் புறக்கணிக்கப்படுகின்றன.அதேநிலை எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் ஏற்படக்கூடும்.
ஆதி திராவிடர் என்ற சாதி கடந்த சமயச் சார்பற்ற அடையாளத்தை கொச்சையாகப் புரிந்துகொள்பவர்கள்தாம் அதை மாற்றவேண்டும் எனக் கோருகிறார்கள்.அந்த கோரிக்கையை இந்த அரசு ஏற்றுக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோரின் நலன்களை முதன்மையாகக் கருதித்தான் சமூகநீதி என்ற சொல்லாட்சிப் பயன்படுத்தப்படுகிறது.எதிர்காலத்தில் இந்தத் துறைக்கு இந்தச் சமூகத்தின்மீது அக்கறையற்ற எவர் வேண்டுமானாலும் அமைச்சராகலாம் என்ற எண்ணத்தையும் அது ஏற்படுத்துகிறது.இப்போது சமூக நீதி அமைச்சகத்தின்கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை செயல்படுகிறது என்றாலும் இன்னும் சில காலத்தில் அந்தப்பெயரும்கூட மாற்றப்படும் ஆபத்து உள்ளது.
எனவே,இந்தப் பெயர் மாற்ற முடிவை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சீராய்வு செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.


