ஜேசிடி பிரபாகரின் செயல் தவறான முன்னுதாரணம் ஆகக்கூடாது – சசிகலா அறிக்கை

அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று,தற்போது ராஜினாமா செய்துள்ள 4 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான பணிகள் தொடங்கி உள்ளது என்றார். இதையடுத்து பதவி விலகிய ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா ஆகிய 4 பேருக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ்க்கு 1 வாரத்தில் பதில் அளிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த 4 உறுப்பினர்களின் பதிலைப் பொறுத்து,அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதிநீக்க நடவடிக்கை தொடங்குவது குறித்து சபாநாயகர் இறுதி முடிவு எடுப்பார்.

இந்நிலையில்,இதுதொடர்பாக அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழக சட்டமன்ற சபாநாயகர்,புதியதாக அமைந்த அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது இன்றைக்கு நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதால் எந்தவித பயனும் இல்லை.இது தமிழக சட்டமன்ற மாண்புகளைக் காப்பாற்றிட எவ்வாறு உறுதுணையாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது? என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக சட்டமன்றம் இந்திய ஜனநாயக வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியமும்,சமூக மாற்றத்திற்கான பல முன்னோடிச் சட்டங்களை இயற்றிய பெருமையும் கொண்டது.ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலம் முதலே தனித்து நின்று,முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்தது நம் தமிழகம்.அரசியல் சலசலப்புகள்,ஆட்சிக் கலைப்புகள்,குடியரசுத் தலைவர் ஆட்சி என எத்தனையோ சிக்கல்களைக் கடந்து,தமிழக சட்டமன்றம் கடந்துவந்த பாதைகள் கரடு முரடானதாக இருப்பினும்,பல அரிய வியத்தகு சிறப்புகளை உள்ளடக்கியது.

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் பல சிறப்பு வாய்ந்த சபாநாயகர்களை தமிழக சட்டமன்றம் கண்டு இருக்கிறது. அதாவது,திரு.ஜெ.சிவசண்முகம் பிள்ளை முதல் பல திறமைவாய்ந்த சபாநாயகர்கள் அலங்கரித்த இருக்கைதான், தமிழக சட்டமன்ற சபாநாயகரின் இருக்கை.ஒரு சபாநாயகர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கவேண்டும். இந்தப் பதவி மிகவும் மதிப்புமிக்க பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற சபாநாயகர் அவர்கள் தமிழக சட்டமன்றப் பேரவையின் மாண்பை,அதன் மதிப்புமிக்க சிறப்பைத் தொடர்ந்து காப்பாற்றிடவேண்டும்.புதிதாக அமைந்த அரசுக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஆதரவு அளித்த அதிமுகவைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் தங்களது பதவியை ராஜினாமா செய்து,அதை உடனடியாக சபாநாயகர் அவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் சம்பந்தப்பட்ட அந்தத் தொகுதிகளை காலியானதாக அன்றே அறிவிப்பும் செய்துவிட்ட நிலையில்,இன்றைக்கு சம்பந்தப்பட்ட 4சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது நடைமுறைக்கு உகந்ததாக தெரியவில்லை.இது எத்தகைய பலனை அளிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.இதுபோன்ற விசயங்களை தகுந்த சட்ட வழிகாட்டுதலுடன் அணுகுவதுதான் சரியான நடவடிக்கையாக அமையும்.இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான ஒரு முன்னுதாரணமாக அமைத்துவிடக்கூடாது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response