
கடந்த வாரம் உச்நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணையின்போது பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், கரப்பான்பூச்சிகளைப் போன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு எந்த வேலையும் இருப்பதில்லை;எந்தத் தொழிலும் செய்வதில்லை.அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும்,சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும்,தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களாகவும் மாறி அனைவரையும் தாக்கத் தொடங்குகிறார்கள் எனக் கூறியிருந்தார்.
அதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக உருவாக்கப்பட்டது ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’.இந்தப்பெயரில் தொடங்கப்பட்ட சமூகவலைதளப் பக்கத்தில் திரிணமூல் காங்கிரசு பாமஉக்களான மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் ஆகியோர் இணைந்னர். அன்றிலிருந்து அந்தக்கட்சியும், லோகோவும் இணையத்தில் மிகவும் பிரபலமானது.
இந்திய இளைஞர்கள் பலரும் இந்தப்பக்கத்தில் குவிந்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கரப்பான்பூச்சிகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல.. அதுபோலத்தான் நாங்கள்.. என்று அவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இதற்கிடையில்,நீதிபதியும்,நான் இந்திய இளைஞர்கள் என்று பொதுப்படையாகச் சொல்லவில்லை,சில இளைஞர்கள் போலிபட்டங்களுடன் உலா வருகின்றனர்.அவர்களைத்தான் சொன்னேன் என்று விளக்கமளித்தார். ஆனாலும், இளைஞர்கள் ஓய்வதாக இல்லை.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியானது தலைமையும், தொண்டர்களும் கொண்ட நிஜமான அரசியல் கட்சி அல்ல. மாறாக, சமுதாயச் சீர்கேடுகளை கேள்விக்கு உள்ளாக்கும் கட்சி.இதில் சேருபவர்களுக்கு சில தகுதிகள் இருக்கின்றன.வேலைவாய்ப்பற்றவர்கள்,அதனால் சோம்பேறிகளாகி எப்போதும் ஆன்லைனில் கிடப்பவர்கள் ஆனாலும் தரமான அரசியல் பார்வைகளை, சமூகக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர்கள் இதில் இணையலாம்.
இதைத் தொடங்கியவர்,அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் மாணவரும்,அரசியல் தொடர்பு உத்தியாளருமான 30 வயதே ஆன அபிஜீத் திப்கே.இவர்தான் சிஜேபி சமூகவலைதளப் பக்கத்தைத் தொடங்கினார்.
சிஜேபி என்ற இணையக் கட்சியை உருவாக்குவது விளையாட்டாக ஆரம்பமானது என்கிறார் அவர்.அமெரிக்கா செல்லும் முன் அவர் ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஜேபி-யை கூகுள் ஃபார்ம் ஆக ஆன்லைனில் இறக்கிவிட்டு,நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒரு தளத்தை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அந்த கூகுள் ஃபார்மில் சிஜேபி-யை ஆமோதித்து கையொப்பமிட்டனர். #MainBhiCockroach ( நானும் ஒரு கரப்பான்பூச்சி) என்ற குறிச்சொல் அவர்களை வெகுவாக ஈர்த்தது. இந்த இயக்கம், வீதிக்கும் வந்தது. வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் கரப்பான்பூச்சி வேடமணிந்து ஆதரவு தெரிவித்தனர்.
மே 21 நிலவரப்படி சிஜிபி இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியாக உயர்ந்தது. பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்துக்கான பின்தொடர்பாளர்களை விட இது அதிகமானது.
இந்தச் சூழலில் சிஜேபி-யின் எக்ஸ் கணக்கிலும் 2 இலட்சம் பின் தொடர்பாளர்கள் வர, அது தற்காலிகமாக முடங்கிப் போனது. பின்னர் அது மீட்டெடுக்கப்பட்டது. சில மணி நேரங்களிலேயே எக்ஸ் கணக்கு மீட்கப்பட அதன் கீழே, ‘மீண்டும் வந்தது கரப்பான்பூச்சி – எங்களை ஒழித்துவிடலாம் என நினைத்தீர்களா?’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
அதேபோல் சிஜேபி இன்ஸ்டா பக்கத்தை முடக்க செய்ய முயற்சி நடந்ததாக அபிஜீத் தீப்கே கூறியிருக்கிறார். இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படத்தில், தாமரையை கரப்பான்பூச்சி உண்பதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. வெறும் 4 நாட்களில் பாஜக இன்ஸ்டா எண்ணிக்கையை கடந்ததை இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.அதோடு இந்தப்பக்கத்தை பாஜகதான் முடக்கியது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
இணையத்தில் திடீரென நடந்திருக்கும் இந்த எழுச்சியால் பிரதமர் மோடியும் ஆளும் பாஜகட்சியும் மிரண்டு போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.


