
மே 10,2026 ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
அப்போது இதுபற்றிப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,இனிமேல் இதுபோல நடக்காது என்று விளக்கமளித்தார்.
இந்தச் சூழலில்,இன்று 23 தமிழக அமைச்சர்கள் பதவியேற்ற விழாவிலும்,அதேபோல மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து,இரண்டாவது முறையாக தவெக அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில் மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கும் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
சென்ற முறை இதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்டபோது, ‘இனி அவ்வாறு நடக்காது’ என்று கூறிய தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?
என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து,அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது, இதுபற்றி நாங்கள் முதலமைச்சரிடம் கேட்டோம்.அவர்,ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் இதுதான் நடைமுறை என்று கூறிவிட்டார்கள்.அதனால் இப்படி நடந்தது என்று பதிலளித்தார் எனக்கூறினார் பெ.சண்முகம்.
இதன்மூலம்,தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இதுதான் நடைமுறை என்று விஜய்யே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதனால், தமிழுணர்வாளர்களும் தமிழ் மக்களும் கொதித்துப் போயுள்ளனர்.
விஜய் ஒப்புதலோடு நடந்திருக்கிறது.இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுப்பூர்வமான சிக்கல்,இதை அலட்சியப்படுத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.


