
தமிழக அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தணிக்கைச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, அரசு அச்சகம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஒதுக்கீடு ஆகியவற்றின் அமைச்சர் பொறுப்பு ராஜ்மோகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பதிவில் விஷால் கூறியிருப்பதாவது….
முதல்வர் ஜோசப் விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சகங்களை ஒதுக்குவதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.ஆனால் ராஜ்மோகன் திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது.உண்மையில் பெரும் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திரைப்படத்துறைக்கு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியதுள்ளது.
நமது திரைப்படத்துறையின் கோரிக்கைகளையும்,குறைகளையும்,குறிப்பாகத் தயாரிப்பாளர்கள்/தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுப்பதையும்,ஒரு அமைப்பாகவோ அல்லது ஒரு சங்கமாகவோ,நான் அல்லது நாங்கள் எப்படி முன்வைப்பது? அடிமட்டத்திலிருந்து இந்தத்துறையின் ஒரு அங்கமாக இருந்து,கடந்த 30 ஆண்டுகளாக இந்தத்துறையின் ஒருபகுதியாக இருக்கும் நமது முதல்வரை விட,நமது துறையில் என்ன நடக்கிறது என்பது பற்றி குறைந்த அல்லது அனுபவமே இல்லாத ஒருவரிடம் இதை எப்படிச் செய்வது?
முதல்வரே, தயவுசெய்து மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு,
1.தயவுசெய்து அரசு டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துங்கள்.இது அரசுக்கு வருவாயைக் கொண்டுவருவதோடு,ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் செலுத்தும் பார்வையாளர்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.
2.தயவுசெய்து உள்ளாட்சி வரியை ரத்து செய்யுங்கள்.ஏனெனில்,”ஒரே இந்தியா ஒரே வரி” என்ற விதிக்கு எதிராக இரண்டு வரிகளை விதித்துள்ள இந்தியாவின் ஒரேமாநிலம் நாம்தான்.
3.சிறு திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தற்போதைய சொற்ப மானியத்தை,தயவுசெய்து அதிகரிக்க வேண்டும்.
இதை முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கையாக அளிக்கலாம் என்பது எனக்குத் தெரியும்,ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அமைச்சர் ராஜ்மோகனை நான் இழிவுபடுத்தவில்லை,இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.முதலமைச்சர் எங்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கமுடியும்.எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.


