உலகத்தமிழர்களுக்கு தேனிசை குடும்பத்தின் அன்பான வேண்டுகோள்

தன் இன்னிசை மிக்கக் குரலால் உலகமெல்லாம் வாழ்கிற தமிழர்களுக்கு உணர்ச்சியூட்டித் தட்டியெழுப்பிய பெருமைக்குரியவர் தேனிசை செல்லப்பா ஆவார்.

பாரதி, பாவேந்தர், காசி ஆனந்தன் ஆகியோரின் தமிழுணர்வுப் பாடல்களை அவர்கள் எத்தகைய உணர்வுடன் பாடினார்களோ, அதே உணர்வைக் கோடிக்கணக்கான தமிழர்களுக்குக் கொண்டுசென்ற பெருமைக்குரியவர் அவர்.

குறிப்பாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான தனது இசைத்திறனை முழுமையாக ஒப்படைத்தவர் அவர். விடுதலைப்புலிகளின் பாசறைகளிலும், உலகெலாம் வாழ்கிற ஈழத்தமிழர்களின் இல்லங்களிலும், சுருங்கக் கூறின் உணர்வுள்ள தமிழர்களின் இல்லங்கள் தோறும், இன்றுவரை ஒலிக்கும் அவரது பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன், அவரைத் தமிழீழத்திற்கு அழைத்துத் தனது கரத்தால் அவருக்குப் பொற்பதக்கம் அணிவித்துப் பாராட்டினார்.இந்தப் பெருமையைப் பெற்ற ஒரேயொரு இசைக்கலைஞர் தேனிசை செல்லப்பா மட்டுமே என்கிறார்கள்.

தன் இசைத்திறனைத் தொழிலாகப் பயன்படுத்தாமல் மக்களைத் தட்டியெழுப்பும் தொண்டாகப் பயன்படுத்திய அவரது புகழ் என்றும் நின்று நிலவும் என உலகத்தமிழர்களால் போற்றப்படுபவர்.

இவ்வளவு பெருமைக்குரிய அவர்,ஏப்ரல் 28 அன்று இயற்கையுடன் கலந்துவிட்டார்.

அதன்பின்,தமிழீழம் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் மக்கள் அவருக்கு உணர்வுப்பூர்வமாக அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில், தேனிசை செல்லப்பா அவர்களின் குடும்பத்தினர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில்,

தயவுசெய்து அப்பாவிற்கு நினைவஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில் அவருடைய அசல் (ஒரிஜினல்) புகைப்படத்தைப் பயன்படுத்தாமல் செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களைப் பயன்படுத்தி எங்கள் மனதைப் புண்படுத்தாதீர்…
செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் உருவாக்கப்பட்ட பாடல்களையும் புகைப்படங்களையும் அப்பா தேனிசை செல்லப்பா அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை….

அன்புடன்
தேனிசை குடும்பத்தினர்…..

இவ்வாறு அவர்கள் கூறியிருக்கின்றனர்.

Leave a Response