அவசரகதியில் தொகுதி மறுவரையறை ஏற்கமுடியாது – மு.வீ திட்டவட்டம்

இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும்,தொகுதி மறுவரையறை செய்வதற்குமான திருத்த மசோதாக்களுக்கு மத்திய கேபினட் ஏப்ரல் 8 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இந்த மசோதாவை சட்டமாக்க ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 ஆம் தேதிவரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை ஒன்றியஅரசு கூட்டியுள்ளது.நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 விழுக்காடு பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான ஆதரவு உள்ளது.

ஆனால், பெண்கள் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையோடு கட்டாயமாக இணைக்கும் ஒன்றியஅரசின் நிலைப்பாடு, பெண்கள் உரிமையை ஒரு அரசியல் மூடுபனியாக பயன்படுத்தும் முயற்சி என்று குற்றம்சாட்டுகிறேன்.இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் சூழலில் இத்தகைய அவசர நடவடிக்கை அரசியல் இலாப நோக்கத்துடன் செய்யப்படுகிறது.பாஜக பெண்கள் இடஒதுக்கீட்டை ஒரு அரசியல் ஆதாயத்திற்காக முன்னெடுத்திருக்கிறது.தொகுதி மறுவரையறை கூட்டாட்சி சமநிலையைப் பாதிக்கக்கூடாது.அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது.

2026 ஆம் ஆண்டு புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகே தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்ட மாநிலங்கள் பிரதிநிதித்துவ இழப்பைச் சந்திக்காத வகையில் பாதுகாப்பு வழங்கவேண்டும்.சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் அனைத்துக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தில் இது முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.

பெண்கள் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையிலிருந்து பிரித்து உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அவசரமாகத் திணிக்க முயல்வது ஏற்க முடியாதது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response