திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. மே.4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடுகள் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரசுக் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுகவுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, கொமதேகவுக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச்.18,2026) இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொகுதிப்பங்கீடு இறுதியானதை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன். அப்போது அவர் கூறியதாவது……

கடந்த முறையைவிட இத்தேர்தலில் எங்களுக்குக் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று திமுகவிடம் கோரினோம். ஆனால் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.பெரியண்ணன் மனப்பான்மையில் திமுக ஒருபோதும் நடந்தது இல்லை. தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் திமுக நிர்பந்திக்கவில்லை. கட்டளையிடவில்லை.அழுத்தம் தரவில்லை. மாறாக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள கோரிக்கை வைத்தனர்.அதன்அடிப்படையில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இத்தேர்தலில் ஒற்றுமையைச் சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதால் ஓரணியில் சேர்ந்துள்ளோம் என்றார்.

2021 தேர்தலில்,பவானிசாகர் (தனி),திருப்பூர் வடக்கு,வால்பாறை (தனி),சிவகங்கை,திருத்துறைப்பூண்டி (தனி),
தளி ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தளி, திருத்துறைப்பூண்டி ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றது.

Leave a Response