
கத்துக்குட்டி,உடன்பிறப்பே,நந்தன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா.சரவணன் எழுதிய ‘சங்காரம்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால், மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்,ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன்,ஜூனியர் விகடன் ஆசிரியர் கலைச்செல்வன்,கவிஞர் வெயில்,நடிகர்கள் சசிகுமார்,சூரி,திருமதி கலா சின்னதுரை,தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவைப் பெற்ற தொடர்.. தற்போது’ சங்காரம்’ எனும் நூலாகத் தயாராகி இருக்கிறது.வன்முறையும்,பேரன்பும் கொண்ட கதை மாந்தர்களால் நிரம்பிய இந்த நாவலின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
கவிஞர் வெயில் பேசுகையில்….
ஜூனியர் விகடன் இதழில் ‘ஒரு கொலை 6 ஆயிரம் ரூபாய்’ என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது.இந்தக் கட்டுரையைப் படித்த சரவணன் திரைப்பட இயக்குநராக இருந்தாலும்,அவருடைய மனதில் எப்போதும் உறங்காத ஒரு பத்திரிக்கையாளராக என்னை அழைத்துப் பேசினார்.அந்தச் சந்திப்பில் நான் எழுதிய கட்டுரையை கடந்தும் பல விசயங்களைக் குறிப்பிட்டார்.
அப்போது அவர் ஒரு சம்பவத்தை சொன்னார்.அந்த சம்பவத்தை…அவர் சொன்ன விதத்தைப் பார்த்துவிட்டு, ஜுவிக்கு ஒரு தொடர் எழுதுங்கள் என்று அன்பாக கட்டளையிட்டேன்.அப்போது அவர்,நான் ஒரு சிறுகதை கூட எழுதியதில்லையே? எப்படி தொடரை எழுத முடியும்? என்றார். ஆனால் எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் அடிப்படையில் அவர் ஒரு கதை சொல்லி. அவருடைய கட்டுரையை நான் வாசித்திருக்கிறேன்.
பொதுவாக ஒரு பத்திரிகையாளருடைய கட்டுரையில் தகவல்களும், தரவுகளும் கொட்டிக் கிடக்கும்.ஆனால் சரவணனுடைய கட்டுரையில் உணர்ச்சியும் மேலோங்கி இருக்கும்.களத்திற்குச் சென்று மக்களைச் சந்தித்து தகவல் திரட்டி அதனுடைய சூடுகுறையும் முன்பாக வெப்பத்துடன் கட்டுரையை எழுதுவார்.அவருடைய எழுத்தில் ஒரு எழுத்தாளரின் இலக்கியத்துவம் மிகுந்த நடை இருக்கிறது.அதற்குத் தேவையான உணர்வும் இருப்பதால் அவரை நான் எழுதுங்கள் என்று சொன்னேன்.
ஒரு கதையை எழுதுவதற்கு இலக்கியப் பயிற்சி இருக்கவேண்டும்.இல்லையென்றால் ஒரு கதையை சுவைபட சொல்ல இயலாது.
சரவணனிடம் பெண்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்கிறது.இதன் காரணமாகக் கூட அவருடைய எழுத்து மேம்பட்டிருக்கலாம்.
இந்த நூலுக்கு பெயர் சூட்டியது தனிக்கதை.நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பைச் சொல்ல.. வரை கலை ஓவியரான பாண்டியன் என்பவர் சம்ஹாரம் எனச் சொல்ல… அதனை தமிழில் ‘சங்காரம்’ என பாரதிதாசன் குறிப்பிட்டதை.. இதன் தலைப்பாகத் தேர்வு செய்தோம்.சங்காரம் என்ற ஒரு சொல், அவருடைய எழுத்தில் மிகப்பெரிய வீச்சை உருவாக்கியது.
ஒவ்வொரு தொடருக்கான கட்டுரையை அவர் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் எழுதிக் கொடுத்து விடுவார், நிறைய அனுபவங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டு இருப்பவர்களால்தான் இப்படி சரளமாக குறுகிய நேரத்தில் தரமாக எழுத இயலும்.
இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் விசயத்தைச் சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால்,குற்றம் தான் அனைத்திற்கும் அடிப்படை.குற்றத்தை பற்றிய உளவியல் ரீதியிலான கவித்துவமான இலக்கியத் தரமான நூலாக நான் எப்போதும் பைபிளைத்தான் பார்ப்பேன்.
அதில் ‘மனிதன் எப்போது தன்னை மறைக்கத்தொடங்கினானோ… அப்போதே குற்றம் பிறக்கிறது’ என்றிருக்கும்.
பாலியல் குற்றமும், அதிகாரத்தைக் கைப்பற்றும் குணமும்தான் மனிதர்களின் பிரதான இரண்டு குற்றங்கள் என நான் பார்க்கிறேன்.
இதுதான் இந்த நாவல் முழுவதும் பரவிக் கிடக்கிறது.
டெல்டா மண்டலத்தில் செயல்படும் இரண்டு தாதாக்கள்.அந்த இரண்டு தாதாக்களுடைய இரண்டு காதல்கள். அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள்.விசுவாசிகள்.உறவினர்கள்.இந்த இரண்டு தாதாக்களையும் பயன்படுத்திக் கொள்கிற ஒரு அரசியல்வாதி.இந்த இரண்டு தாதாக்களையும் கொன்று விடவேண்டும் என நினைத்துச் செயல்படும் ஒரு காவல்துறை அதிகாரி.இதற்குள் நிகழும் சம்பவங்கள்தான் இந்த நாவலின் கதை.
இரண்டு தாதாக்களின் வன்முறை உலகத்தை எழுதியிருந்தாலும் இதில் மனித உணர்வுகளுக்கும்,அவனுடைய அக போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.இதன்மூலமாக நிறைய உணர்ச்சிகளைப் பற்றிப் பேசி இருக்கிறார்.இதில் சமூகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் சாதிய பிரச்சினையைப் பற்றியும் பேசி இருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களுடைய எழுச்சி என்பது எவ்வளவு நுட்பமானதாக இருக்கவேண்டும் என்பதையும் விவரித்திருக்கிறார்.இது விவாதிக்கப்பட வேண்டிய விசயமும் கூட.
வன்முறை அதிகம் பேசப்படும் இந்த நாவலில் காமமும்,ரொமான்ஸும் பேசப்பட்டு இருக்கும்.காமம்,வன்மம் எனும் இருபிரிவுகளிலும் சொல்லப்பட்டிருக்கும் கதை இது.
ஆண்- பெண் என இரு பாலின அரசியலை சரியாக சமநிகராகப் புரிந்து கொண்டிருக்கும் ஒருவரால்தான் காமத்தைக் கண்ணியமாக எழுத இயலும்.அந்தவகையில் இரா.சரவணன் மாஸ்டர் என்று சொல்லலாம்.
இந்த நாவலில் தன்பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றியும் விவரித்து இருக்கிறார்.இந்த சங்காரம் நாவல் உலகத்தில் உள்ள உறவுகளைப் பற்றிப் பேசக்கூடிய நாவலாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தை வாசித்தவர்களுக்கு வாசித்தபின் மரிக்கொழுந்து வாசம்தான் வீசும்.அந்த அளவிற்கு இந்த நாவலில் மரிக்கொழுந்து எனும் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
அத்துடன் இந்தக் கதாபாத்திரத்தில் சக மனிதர்கள் மீது ஒவ்வொருவரும் காரணமற்ற அன்பைச் செலுத்துவார்கள் என்ற பேருண்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
குற்றம் என்பது நமக்கு நாமே வகுத்துக் கொண்ட எல்லையை மீறுவது.இதனையே அதிகாரத்தில் இருப்பவர்கள் மீறும்போது எமக்குள் எழும் வெடிப்புதான் சங்காரம்.இந்த சங்காரம் தொடரும்.இது முடிவுறாத மானுடக் கதையாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார்.
கலைச்செல்வன் பேசுகையில்….
பேசுவது எப்படி ஒரு கலையோ அதேபோல் பேசாமல் இருப்பதும் ஒரு கலை.அந்தப் பட்டியலில் உள்ள நான் சரவணன் கேட்டுக் கொண்டதற்காக இங்கு அவரை வாழ்த்த வருகை தந்துள்ளேன்.
சரவணன்- இந்த மனிதர்களின் இருளடைந்த பகுதிக்குள் சரளமாக உலா வருகிற ஒரு நபர்.அவருடைய திரைப்படங்களில் சமூகப் பிரச்சனையை விவசாயிகளின் பிரச்சனையை குடும்ப உறவுகளின் சென்டிமென்ட் சார்ந்த பிரச்சனையை பேசி இருக்கிறார்.ஆனால்அவர் இப்படி ஒரு எழுத்தை வழங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவருக்குள் இருக்கும் எழுத்தாளருக்கு என் வாழ்த்துகள் என்றார்
முருகன் பேசுகையில்….
சரவணன் கட்டுரை எழுதும்போதே அது ஒரு இலக்கியமாக இருக்கும்.அதனால் அவர் இப்படி ஒரு நாவல் எழுதி இருப்பது வியப்பல்ல.ஒரு தொடரை நூறு அத்தியாயங்களுக்கு மேல் எழுதி ஏராளமான வாசகர்களைப் படிக்கவைப்பது என்பது எளிதான விசயம் அல்ல.ஒரு பத்திரிகையாளராக இருந்து கதை சொல்லும்போது அது சுவைபட இருக்கும்.
சரவணன் இந்த சிறிய வயதிற்குள் ஏராளமான மனிதர்களைச் சந்தித்து அவர்களின் அனுபவங்களைப் பொறுமையுடன் கேட்டிருக்கிறார்.அதனால்தான் இந்தக் கதை இவ்வளவு இன்ட்ரஸ்ட் ஆக வந்திருக்கிறது.
இந்தக்கதையில் சூரியையும்,மார்ட்டினையும் அவர் நேர் எதிராக நிறுத்துவது நன்றாக இருக்கும்.
இந்தக்கதை வன்முறை நிறைந்த கதை என்பதை மேலோட்டமாகப் பார்த்தால் சொல்லலாம்.அன்பு எப்படி எல்லா மண்ணுக்கும் பொருத்தமானதோ அதேபோல் வன்முறையும் எல்லா மண்ணிற்கும் பொதுவானதுதான்.
இந்தக்கதை சினிமாவாகவோ இணையத் தொடராகவோ உருவானால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடும்.இதுபோன்ற நூற்றுக்கணக்கான கதை சரவணன் இடத்தில் இருக்கிறது.எழுதுவதற்கு எங்களிடம் இடம் இருக்கிறது.அவர் தொடர்ந்து நிறைய எழுதவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில்….
சரவணனை பத்திரிகையாளராகத் தெரியும்.எழுத்தாளராகத் தெரியும்.இயக்குநராகவும் தெரியும்.அவர் எழுதிய இந்த நாவலை படிக்கும் போதுதான் அவருக்குள் இவ்வளவு பெரிய வன்முறையும்,காதலும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.இந்த நாவலில் ஆக்சன் சீனும் அதிகம் ரொமான்ஸ் சீனும் அதிகம்.இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தை வாசிக்கும்போதும் ஒரு ஆக்ஷன் படத்தை பார்ப்பதுபோல் இருந்தது.இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது சினிமாவிற்கான நிறைய காட்சிகளை எழுதி இருக்கிறார் என்பதைப் பார்த்தேன்.சினிமாவாக உருவாகும்போது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது என்னுடைய நம்பிக்கை.நாவலில் இருக்கும் சூரி மற்றும் மார்ட்டின் என இரண்டு கதாபாத்திரத்தை வைத்து சினிமாவை உருவாக்கலாம்.இதை திரைப்படமாக எடுத்தால் எங்களுடைய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் என்பதை இந்தத் தருணத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
திருமதி சத்யா கரிகாலன் பேசுகையில்….
புத்தகங்கள் நமக்கு நிரந்தரமான தோழர்கள் என புத்தகத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.மனித சமுதாயத்திற்கு நிரந்தரமான விடுதலையை புத்தகம் மூலம் அடைய முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அந்தவகையில் விடுதலைச் சிந்தனை கொண்ட எழுத்தாளரும்,இயக்குநரும்,சிறந்த நண்பருமான சரவணனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரவணிடமிருந்து இதுபோன்ற படைப்புகள் வருவது எனக்கு மகிழ்ச்சியே தவிர ஆச்சரியம் இல்லை.மனிதர்களை காதலிக்கக் கூடிய ஒரு கலைஞனுக்கு அதேமனிதர்கள் சிலநேரங்களில் பொருளாதாரத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் சில சல்லித்தனமான செயல்களைச் செய்யும் பொழுது அதை நுட்பமாக உணர்ந்த ஒரு படைப்பாளியின் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தப் புத்தகம்.
இவர் மனிதர்களிடத்தில் மட்டும் பற்றும் பாசமும் அன்பும் கொண்டவர் இல்லை.இயற்கை மீதும் பேரன்பும் காதலும் கொண்டவர் என்பது இந்தக்கதையில் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும்.
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு பூ பூக்கத் தான் செய்யும் என பிரபஞ்சன் குறிப்பிட்டதைப் போல்… ‘ தலையைல் காவு வாங்க ஒரு கூட்டம் காத்திருக்கும் நிலையில்..ஒருவன் காதலித்துக்கொண்டிருக்கிறான் என்பதே சமகால கவித்துவமாகத்தான் நான் பார்க்கிறேன்.
அத்துடன் இந்த நாவலில் காமத்தில் புரிதலின் அவசியத்தைக் குறித்து நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் சொல்லி இருக்கிறார்.
இந்தக்கதை அதிகார வேட்கையின் உச்சகட்டத்தை விவரிக்கும் வகையில் தொடங்கினாலும்..படிப்படியாக பெண் முடிவெடுக்கும் திறனை நோக்கி நகர்ந்து வருவதால் ஒரு பெண்ணாக இதைப் பார்க்கும்போது சரவணன் மீதான மரியாதை இன்னும் அதிகமாகிறது என்றார்.
நக்கீரன் கோபால் பேசுகையில்….
இந்தவிழாவை தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் உள்ள பிரம்மாண்டமான அரங்கத்தில் நடந்திருந்தால்,இன்னும் சில ஆயிரம் பேர் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருப்பார்கள்.
இந்தத் தொடரைப் பற்றி என்னுடன் பணியாற்றிய லே அவுட் ஆர்டிஸ்ட்டான பாண்டியன்,’கதை முழுவதும் இரத்தம்தான்’ எனச் சொல்வார்.டெல்டா என்ற உடன் நான் சரவணனிடம் மணல்மேடு சங்கர் என்பவரைப் பற்றிய விசயங்கள் இடம் பிடித்திருக்கிறதா..? எனக் கேட்டேன்.அவர் ஆமாம் என தலையாட்டினார்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் முருகனுடைய வாழ்வில் நடைபெற்ற சம்பவமும் ஒரு கதையாக எழுதலாம் என்றார்.
நடிகர் சூரி பேசுகையில்….
நேற்று முதல் நான் பதட்டத்தின் உச்சத்தில்தான் இருக்கிறேன்.சரவணன் போன் செய்து நூல் வெளியீட்டு விழாவிற்கு அவசியம் வரவேண்டும் எனச் சொன்னார்.எப்போது? எனக்கேட்டேன்.’நாளை’ என்றார்.யார் யாரெல்லாம் வருகிறார்கள்? எனக் கேட்டேன்.இங்கு மேடையில் வீற்றிருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களும் வருகிறார்கள் எனச் சொன்னார்.நான் சிறிதுநேரம் மௌனம் காத்துவிட்டு என்னை எதற்காக அழைக்கிறீர்கள்? எனக் கேட்டேன்.நீங்கள் வந்தால்தான் சிறப்பாக இருக்கும் என்றார்.புத்தகத்தை அனுப்பி இருக்கிறேன் படித்துவிட்டு விழாவிற்கு வாருங்கள் எனச் சொன்னார்.அப்போது அவரிடம் புத்தகத்தை படிக்கவா? அல்லது விழாவிற்கு வரவா? இரண்டில் ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள் என்று கேட்டேன்.விழாவிற்கு வாருங்கள் எனச் சொன்னார்.
விழாவிற்காகக் கிளம்பும்போது என் மனைவி இரண்டு பக்கத்தையாவது படித்துவிட்டுச் செல்லுங்கள் எனச் சொன்னார்.ஜோசியக்காரன் போல் புத்தகத்தில் ஒரு பக்கத்தை திடீரென்று எடுத்தேன்.அது 43 ஆவது பகுதி. மார்ட்டின்- காயத்ரி பற்றி எழுதி இருந்ததை உரக்க வாசித்துக் கொண்டிருந்தேன்.இருவருக்கும் இடையேயான அளவற்ற காதலை..கட்டுக்கடங்காத காதலை..அடாவடித்தனமான அந்த அன்பை ஒளிந்து இருந்து ஜன்னல் வழியாகப் பார்ப்பதுபோல் ஆகிவிட்டது.அவரது எழுத்து நடையை வாசிக்கும்போது உருவம் தெரிந்தது.அதுதான் அவருடைய சிறப்பு.
அண்ணன் சமுத்திரக்கனி படிப்பதற்காக இரண்டு புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார்.அவரைச் சந்திப்பதை இப்போது தவிர்த்து வருகிறேன்.ஏனென்றால் சந்திக்கும்போது புத்தகத்தைப் படித்துவிட்டாயா? எனக் கேட்டால் என்ன பதில் சொல்வது?
என்னைப் பொறுத்தவரை புத்தகத்தை நான் பொழுதுபோக்காக நினைத்துவிட்டேன்.நான் ஏன் அடிக்கடி புத்தகத்தைப் பார்த்தேன் என்றால் இந்தப் புத்தகத்தின் டைட்டிலை மறந்து விடக்கூடாது என்பதற்காகப் பார்த்தேன்.சங்காரம் என்பதை சிங்காரம் என்று பேசிவிட்டால் தப்பாகப் போய்விடும் அல்லவா..!
புத்தகம் சாதாரண விசயம் அல்ல.பல நாடுகளில் பல சரித்திரத்தை உருவாக்கி இருப்பது புத்தகங்கள்தான். எழுத்துகள்தான் சமூக சீர்திருத்தத்தை உருவாக்கியிருக்கிறது.சமூகத்திற்கு தேவையான பல நல்லவிசயங்களை புத்தகங்கள்தான் கொடுத்திருக்கிறது.எத்தனை ஆண்டு காலமானாலும் புத்தகங்கள் அழிவதில்லை.
இப்போதுதான் புத்தகத்தின் அருமையைத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.:மாமன்’படத்திற்கு கதை எழுதினேன். தற்போது என் தந்தையைப் பற்றிய சுயசரிதையை எழுதி வருகிறேன்.
இரா.சரவணன் இயக்குநர் மட்டுமல்ல அவருடைய சமூகத்திற்கான பங்களிப்பு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அவருடைய எழுத்தில் உருவான இந்தப்புத்தகம் விரைவில் திரைப்படமாக உருவாகும் என நான் நம்புகிறேன் என்றார்.
திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில்….
என்னுடைய நண்பர் 20 ஆண்டுகளுக்கு முன் இலக்கியவாதியாக அறிமுகமாகி இன்றுவரை நட்பைத் தொடரும்
இரா சரவணன் எழுதிய சங்காரம் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் புத்தகத்தை என்னுடைய இரண்டு நாள் பயணத்தின்போது கிடைத்த ஓய்வு நேரங்களில் ஓரளவு வாசித்திருக்கிறேன்.இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை.
இந்த நாவல் நாவலின் மையப்புள்ளி கதைக்களம் என்ன? கதை மாந்தர்கள் ஊடாக தொட்டுச்செல்லும் பாதை என்ன? இதைப்பற்றி எல்லாம் எனக்கு முன்னால் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள்.
சரவணன் இலக்கியவாதியாக உருவெடுத்துவிடுவார் என கவிஞர் வெயில் குறிப்பிட்டார்.அதற்கான அத்தனை அடையாளங்களும் இருபதுஆண்டுகளுக்கு முன்பே சரவணனிடம் இருந்தன.
என்னுடைய எல்லா எழுத்துக்கும் முதல் விமர்சனம் சரவணனிடம் இருந்துதான் வரும்.அவருடைய பாராட்டு எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது.
இலக்கியத்தில் உள்ள படைப்புகளில் கருப்பொருள் என்ன என்றால்…எப்போதும் அது சாமானிய மனிதனாகத்தான் இருக்கும்.
இந்தநாவலில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்கள் குறிப்பாக கீரை துறை என மதுரையில் உள்ள பகுதியில் பகுதியைச் சார்ந்த சம்மணச்சி எனும் கதாபாத்திரம் அதாவது மார்ட்டினின் தாய் கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது.அதேபோல் அனைவருக்கும் பிடித்த மரிக்கொழுந்து என்ற கதாபாத்திரமும் எனக்குப் பிடித்திருந்தது.
மார்ட்டினும்,அவரது தாயாரும் உரையாடும் உரையாடல் என்னைக் கவர்ந்திருந்தது.
சூரி-குற்றஉலகத்தில் இருந்து விலகி இருப்பதற்காகப் பட்டினி இருக்கும் விசயம் குறித்துப் பேசுவதும் என்னைக் கவர்ந்தது.
இந்தநாவலில் கதை மாந்தர்கள் பேசும் பல விசயங்களை என்னுடைய அனுபவத்தில் சந்தித்திருக்கிறேன்.
நான் மிகவும் மதிக்கின்ற அமெரிக்க நாவலாசிரியரான திம்மோ பிரெய்ன் ஒரு இராணுவ வீரராக வியட்நாமில் தன் வாழ்க்கையைக் கழித்தவர்.அவருடைய எழுத்துகள் அனைத்தும் போர் பற்றிய உண்மை சம்பவங்களாகத்தான் இருக்கும்.கதைகளால் நம்மைக் காப்பாற்ற இயலும் என ஒரு மேற்கோளை அவர் அடிக்கடி குறிப்பிடுவார்.இந்த நாவலை வாசிக்கும்போதும் அந்த உணர்வு ஏற்பட்டது.
நான் வாசித்தவரை இந்த நூல் பெண்களைப் பற்றிய கதைதான்.பெண்கள் என்றால் சூழலுக்குப் பலியாகிய பெண்கள்.இவர்களின் வாழ்வியல் இருந்து என்னால் பல விசயங்களை ஏற்றுக்கொள்ள முடிகிறது.
இந்த நாவலின் கதை அரசியல் – காவல்துறை – குற்ற பின்புலம் – இதனை சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறது. இதில் எம்முடைய எளிய அறம் சார்ந்த வாழ்க்கையை எப்படிக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அத்துடன் இதில் எழுத்தாளரின் கிராஃப்ட்டும்,கன்டென்டும் கரெக்டா செல்கிறது என புரிந்துகொண்டேன்.இதற்காக சரவணனுக்கு என்னுடைய அன்பான பாராட்டுகள்.
‘அருவா மனையும் ஒரு ஆம்பள போல..’என்ற ஒரு பெண்ணின் சொல்லாடலை கடந்து செல்ல எனக்கு வெகுநேரமானது.
லியோ டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ என்ற நாவலில் இடம்பெறும் மாஸ்லாவா எனும் கதாபாத்திரத்தை.. மரிக்கொழுந்து நினைவுபடுத்தினாள்.
எல்லாவகையான கதாபாத்திரங்களையும் இடம்பெறச் செய்து வாசிப்பவர்களுக்கு அவர்களுடன் இணைந்து பயணிக்க வைக்கும் வகையில் ஒரு புதினம் இருப்பதுதான் ஒரு புதினத்தின் மிகப்பெரிய வெற்றி என நான் கருதுவேன்.
இதில் நிறைய கிளைக் கதைகள் இருக்கின்றன.அதில் வரும் கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொரு குணமும், நிறமும் இருக்கிறது.
இது உங்களுடைய முதல்நாவல் என்றார்கள்.தொடர்ந்து எழுதுங்கள் என நான் கேட்கமாட்டேன்.ஏனென்றால் இது சிறந்தது.இது ஒன்றே உங்களது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் என்றார்.
நடிகர் சசிகுமார் பேசுகையில்….
2010 ஆம் ஆண்டில் எழுத்தாளர் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவின்போது இலக்கியவாதி தமிழச்சி தங்கபாண்டியன் அருகே அமர்ந்தேன்.அதன்பிறகு இன்றுதான் அவருடன் ஒன்றாக மேடையில் இருக்கிறேன்.அந்த மேடையிலும் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஏராளமான குறிப்புகளுடன் பேசுவதற்குத் தயாராக இருந்தார்.இன்றும் அவர் புத்தகத்தில் நிறைய குறிப்புகளை வைத்துப் பேசுவதற்குத் தயாராக இருந்தார்.அன்று அவரிடம் இருந்து ஒரு புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளும்போது அந்தப் புத்தகத்தை வாசித்துவிட வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.நான் இந்தமுறை சங்காரம் புத்தகத்தை முழுமையாகப் படித்துவிட்டேன்.
சரவணன் என் நண்பர் மட்டுமல்ல.அவர் தனக்காக எதுவும் எப்போதும் கேட்டதில்லை.அவரை 2010 ஆம் ஆண்டில்தான் சந்தித்தேன்.அன்று அறிமுகமான நட்பு இன்றுவரை தொடர்கிறது.எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என்னுடன் தோளுக்குத் தோளாக நின்று உதவுபவர்.நான் மனதளவில் உடைந்து போயிருந்தபோது ஆறுதல் சொல்லித் தேற்றியவர் சரவணன்.
சங்காரம் நாவலைப் படித்த ப்பிறகு இது நன்றாக இருக்கிறது இதைத் திரைப்படமாக உருவாக்குவோம்.இந்தக் கதையில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சொன்னேன்.உடனே அவர் இதில் சூரி ஹீரோவாக நடிக்கவேண்டும் என்பதற்காக ஒரு கதாபாத்திரத்திற்கு சூரி என்றே பெயர் வைத்திருக்கிறேன் என்றார்.நிச்சயமாக இந்த நாவல் திரைப்படமாக உருவான மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.சுப்பிரமணியபுரம் படத்தைப்போல் இந்த சங்காரம் நாவலும் படமாக உருவாகி வெற்றி பெறும்.என்னைப் பொறுத்தவரை சங்காரம் நாவலை ஒரு திரைக்கதை புத்தகமாகத்தான் நான் பார்க்கிறேன்.
இந்த சங்காரம் நாவலைப் படித்தவுடன் சூரி – மார்ட்டினுக்கு என்ன ஆச்சு? மரிக்கொழுந்துக்கு என்ன ஆச்சு? என்ற கேள்வி.. எல்லார் மனதிலும் எழும் என்றார்.
எழுத்தாளர் இரா.சரவணன் பேசுகையில்….
இந்தப் புத்தக வெளியீட்டுவிழா வேண்டாம் என்றுதான் திட்டமிட்டிருந்தேன்.ஆனால் என்னுடைய நண்பரும் நடிகருமான’சசிகுமார் இப்படி ஒரு விழா வேண்டும்.சங்காரம் பெரிய அளவில் பேசப்படுவதற்கு ஒரு விழாவை முன்னெடுக்க வேண்டும்’என வலிந்து சொன்னதால் இதில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டேன்.அதன்பிறகு இந்த விழாவை என்னுடைய நண்பரும் பத்திரிகையாளருமான கலைச்செல்வனுக்கான விழாவாக முன்னெடுப்போம் என நானும் கூற இப்போது இந்த விழா நடைபெறுகிறது.
பிரபலமான வாரஇதழின் ஆசிரியராக இருந்தாலும் எந்த ஒரு அரசியல்வாதியையும் நேரில் சந்திப்பதை தவிர்ப்பதுடன் மட்டுமல்லாமல் பேசுவதையும் குறைத்து நிதானமாகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் கலைச்செல்வன் இந்தவிழாவிற்கு வந்து வாழ்த்திப் பேசியதை நான் வெற்றியாகக் கருதுகிறேன்.
நக்கீரன் கோபால் கலந்துகொண்டால் அது குடும்பவிழாதான்.
நான் விகடனை விட்டு வெளியேறுகிறேன் என்றால் பத்திரிகை துறையில் இருந்து வெளியேறுகிறேன் என்பதுதான் உண்மை என அங்கிருந்து பணியாற்றி விடைபெற்ற இறுதிநாளன்று தெரிவித்தேன்.என்னுடைய எல்லாவற்றுக்கும் விகடன்தான் உரம்.
ஆனால் திரைவிழா எனும் நிகழ்வில் நக்கீரன் கோபாலைச் சந்தித்தபிறகு அவசரப்பட்டு வாக்குறுதி வழங்கிவிட்டோமோ..! என எண்ணி இருக்கிறேன்.அந்த அளவிற்கு நக்கீரன் கோபால் என்னை ஈர்த்தார்.அதனால் இந்தவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என அவரை மட்டும் நான் நேரில் சென்று அழைப்பு விடுத்தேன்.
ஒரு சிறுகதை கூட எழுதாத என்னை நிர்பந்தத்தின் பெயரில் ஒரு தொடர்கதை எழுத வைத்த நண்பர் கலைச்செல்வன்,வெயில் மற்றும் வேலுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி.
2025 எனக்கு மிகக் கடுமையான போராட்டங்களையும், சங்கடங்களையும் நெருக்கடிகளையும் கொடுத்தது. இதிலிருந்து என்னை மீட்டு இந்த விழா மேடைவரை இழுத்து வந்தது நண்பர் வெயிலின் அறிவுரைதான்.இதற்கு மாற்றாக இந்த 2025 தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு சிறந்த நண்பனாக மாற்றி இருக்கிறது.
இந்த நாவலின் முகப்புரையில் ‘சமர்ப்பணம் என் மரிக்கொழுந்து’ என இருக்கும். இதைப் பார்த்த வாசகர்கள் பலரும் என்னிடம் யார் அந்த மரிக்கொழுந்து? எனக் கேட்டனர்.அது இந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் மட்டும்தான்.
சங்காரத்தை எழுதத் தூண்டியது ஒரே ஒரு சம்பவம் தான்.அது எழுத்தாளர் வெயில் குறிப்பிட்ட சம்பவம்தான். அந்த சம்பவத்தை நிகழ்த்திய ஒரு இளைஞன் என்னுடைய நண்பர்தான் அவர்தான் அதனை விவரித்தார்.நாங்கள் ஆறு பேர் ஒருவனை வெட்டி வீழ்த்துவதற்காக கையில் அருவாளுடன் அவனை விரட்டிச் சென்று கொண்டிருக்கிறோம்.ஓடிக்கொண்டிருந்தவன் ஒரு இடத்தில் யு டேர்ன் போட்டு எங்களை எதிர்த்து நின்றுவிட்டான். நாங்கள் பயந்துவிட்டோம் இதுபோல் ஓடிக்கொண்டிருப்பவர்கள் யாரும் திடீரென்று எதிர்த்து நிற்பதில்லை.அவன் நின்றதால் நாங்கள் பயந்தோம்.அப்போது அந்த இளைஞன் என்னைக் கொலை செய்யாதீர்கள் என்று கெஞ்சப் போவதில்லை.உங்களிடமிருந்து தப்பிக்கவும் முடியாது.தாராளமாக வெட்டுங்கள்.ஆனால் அதற்குமுன் நீங்கள் யார்? நான் உங்களை இதற்கு முன் பார்த்ததே இல்லை.என்னைக் கொலை செய்யக்ஷ் சொன்னது யார்? எனக் கேட்டான். கேட்கும் தருணத்தில் அவன் மீது அரிவாள் வெட்டு விழுகிறது.அவன் இறந்து போகிறான்.அந்த இளைஞரிடம் அவன் சாவதற்கு முன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கலாமே? எனக் கேட்டேன்.அப்போது அந்த இளைஞன் எனக்குத் தெரியாதே என பதில் அளித்தார்.சாகிறவனுக்கு எதற்காகச் சாகிறோம் என்று தெரிவதில்லை. கொல்பவனுக்கு ஏன் கொல்கிறோம்? என்றும் தெரியாது.கூலிக்கு வேலை செய்வதுபோல் கூலிக்குக் கொலை செய்கிறார்கள்.இந்த கொடூரம் இந்த அளவிற்கு இந்த மண்ணில் பரவி இருக்கிறது.இது ஆபத்தானது.இந்த ஆபத்தை மக்களுக்குப் புரியவைக்க வேண்டும் என நினைத்தேன்.
குறிப்பாக யார் வேண்டுமானாலும் யாராலும் கொல்லப்படலாம்.அற்பத் தொகைக்காகக் கூடக் கொலை செய்யப்படலாம் எனும் அபாயச் சூழலை சொல்லவேண்டும் என நினைத்தேன்.
இப்படி கதை இருந்தாலும் இந்தநூலில் இடம்பிடித்திருக்கும் கார்த்திகா – மரிக்கொழுந்து – சுமதி – என நிறைய பெண் கதாபாத்திரங்கள்தான் ஒவ்வொரு சூழலையும் தீர்மானிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.ஏனெனில் பெண்களை ஒருபோதும் கணிக்க இயலாது.
ஒரு பெண் சிரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்.வெறுப்பதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கும்.. உளவியல் பகுப்பாய்வு செய்தாலும் பெண்களின் மனதை ஒருபோதும் கண்டுபிடிக்க இயலாது.அதனால் பெண்மீது நம்பிக்கை வையுங்கள்.காதல் செய்யுங்கள்.அன்பு செலுத்துங்கள்.
இந்த சங்காரம் வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் பேசினார்.


