விஜய்யின் செயல் அருவெறுப்பானது – ஏராளமானோர் விமர்சனம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இவர்களைக் கண்டுகொள்ளாமல் விஜய் சென்றுவிட்டார்.இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தன.அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரிடம் காணொலிக் காட்சியில் பேசி கரூருக்கு வருவதாக விஜய் ஆறுதல் கூறினார்.அதோடு, தலா ரூ.20 இலட்சம் நிவாரண நிதியை நேரில் வந்து கொடுப்பதாகக் கூறினார்.

ஆனால், கடந்த 18 ஆம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 இலட்சம் தவெக சார்பில் வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில்,நேர்ச்சி நடைபெற்று 30 நாளுக்குள் 41 பேரின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூற முடிவு செய்யப்பட்டது. ஆனால், கரூர் செல்லாமல் திடீரென 30 ஆவது நாளில் 41 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்துச் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக பாதிக்கப்பட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தவெக நிர்வாகிகள் பேசினர்.

இதையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் 41 பேரின் குடும்பத்தினரைச் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 27 ஆம் தேதி) காலை நடக்கிறது.

இதற்காக அந்த விடுதியில் மொத்தம் 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையில் ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித் தனியாகச் சந்தித்து விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

இதற்காக, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த 41 பேரின் குடும்பத்தினரிடம் தவெக நிர்வாகிகள் நேரிலும், தொலைபேசியிலும் சென்னை வர விருப்பமா? எனவும், எத்தனை பேர் வருகிறீர்கள்? எனவும் கேட்டறிந்தனர்.

இதில் கரூரில் உள்ள 27 குடும்பங்களில், 22 குடும்பத்தினர் சென்னை வர விருப்பம் தெரிவித்திருந்தனர். இதில் 5 குடும்பத்தினர் வர சம்மதிக்கவில்லை. இதனால் 22 குடும்பத்தினரை மட்டும் அழைத்துச் செல்வதற்காக 5 சொகுசு பேருந்துகள் சென்னையில் இருந்து கரூருக்கு நேற்று காலை சென்றது. சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்வது சர்ச்சையாகும் என்பதால் பேருந்துகளை கரூர் மாநகருக்கு வெளியில் வெண்ணைமலையில் இருந்து புறப்படும் வகையில் இரகசியமாக தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, கரூர் ஏமூர் புதூர் பகுதியில் உயிரிழந்த 5 பேர்களின் குடும்பத்தினரை நேற்று காலை 10 மணியளவில் சென்ற தவெக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வாகனங்களில் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைவரும் வெண்ணைமலை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு காலை 11.55 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டனர்.

இதில் முதற்கட்டமாக, இறந்தவர்களின் 22 குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காலையில் புறப்பட்டு சென்றதாகவும், மீதி உள்ள 5 குடும்பத்தினரை இரவில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதே போல் ஈரோடு, திருப்பூர், சேலம், மதுரையை சேர்ந்த 8 குடும்பத்தினரின் உறவினர்களை தவெக நிர்வாகிகள் தனித்தனியாக அழைத்துச் சென்றனர்.

பொதுவாக பெரிய விபத்து ஏற்பட்டு பலர் இறக்க நேர்ந்தால் அவர்களது வீடுகளுக்கே அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதுதான் வழக்கம். கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண நிதியையும் வழங்கினர்.

ஆனால் அரசியல் வரலாற்றில் புதுமையாக நடிகர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கே வரவழைத்து ஆறுதல் கூற உள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறுகிறார். இதற்காக கரூரில் இருந்து 5 சொகுசு பேருந்துகள் புறப்பட்டுச் சென்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இருந்து 2பேர் அல்லது 3 பேர் தான் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தவெகவினர் தெரிவித்து இருந்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்ற தவெகவினர், விஜய்யைப் பார்க்க சென்னைக்கு எத்தனை பேர் வருகிறீர்கள் என்று கேட்டனர்.

விஜய்யை நேரில் பார்க்க கூப்பிடுகிறார்கள் என்ற ஆர்வத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 5பேர், 10 பேர் வருவதாக தெரிவித்தனர். இதனால் 5 சொகுசு பேருந்துகளை ஏற்பாடு செய்து, சென்னைக்கு சுற்றுலா செல்வது போல அழைத்துச் சென்றுள்ளனர்.

நடிகர் விஜய் நேரில் செல்லாமல் பாதிக்கப்பட்ட எளியவர்களை நேரில் வரவழைப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதுபற்றிக் கேட்கப்பட்டது.அதற்கு, கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை பேருந்து வைத்து மாமல்லபுரம் அழைத்துச் செல்வதற்கு பதிலாக தனி விமானம் மூலம் அழைத்துச் செல்லலாமா? இது ஒரு கேள்வியா? விஜய் அவர்களை சந்திப்பது அவருடைய விருப்பம். நான் அதைப் பற்றி பேசுவதை அருவருக்கிறேன் என்று கூறினார்.

Leave a Response