சாதித் திமிர் பெரியசாமி சாட்டை சுழற்றிய நிர்வாகம் – பெரியார் பல்கலை பரபரப்பு

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நிலவி வந்த சாதீய மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசுக்கும் துணைவேந்தர் நிர்வாகக் குழுவிற்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மனமார்ந்த நன்றி என்று சொல்லி கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கையில……

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததானக் குற்றச்சாட்டு மர்மமான முறையில் நீடித்து வருகிறது.பதிப்புத் துறையின் இயக்குநராக இருந்தபோது பல்கலைக்கழக மானியக் குழு ஒதுக்கிய நிதியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்த சேலம் இலஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் இவர் பட்டியலின ஆராய்ச்சி மாணவர்களை ஜாதியைச் சொல்லி திட்டுவதான புகார்கள் அளித்தனர்.தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளியான பேராசிரியரின் பட்டியலின ஜாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு தேசிய பட்டியலின ஆணைய உத்தரவின் படியான மாவட்ட நிர்வாகத்தின் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் கல்வியியல் துறை பட்டியலினப் பேராசிரியர் ஒருவரை “பட்டுப் புடவை கட்டி வந்து மினுக்குவதால் ஒன்றும் ஆகாது, நான் நினைத்தால் கல்வியியல் துறையை இழுத்து மூடிவிடுவேன்” என்று மிரட்டிய குற்றச்சாட்டும் நிலுவையில் உள்ளது.கல்வியியல் துறை உதவிப் பேராசிரியர் ஒருவரை தரக் குறைவாக இழிவாக திட்டி உள்ளார்.தொகுப்பூதியப் பணியாளரை ஒருமையில் தரக் குறைவாக பேசி உள்ளார்.இது குறித்தெல்லாம் பற்றி முன்னாள் துணை வேந்தர் ஜெகன்னாதனிடம் புகார் அளித்தும் அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

முன்னாள் ஆசிரியர் சங்கத் தலைவரை “சில்லறைப் பயல் விளங்க மாட்டான் அவன்” என்று பலர் முன்னிலையில் தரக் குறைவாக பேசியும் உள்ளார். தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட 19 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இவர் துறைத் தலைவராக இருந்த காலத்தில் ஆய்வை முடிக்காமல் இடை நின்று விட்டனர். இப்படி இவர் மீதானக் குற்றச்சாட்டுகள் நிறைய உள்ளன.

இங்ஙனம் பாதிக்கப்பட்டவர்கள் துணைவேந்தர் நிர்வாகக் குழுவிடம் எழுத்து பூர்வமாகவும் நேரிடையாகவும் புகார் அளித்ததைத் தொடர்ந்து நிர்வாகக்குழு கோவை வேளாண்மை பல்கலைக் கழக முன்னாள் புல முதல்வரும் பேராசிரியருமான மணியன் தலைமையில் மூன்று நபர் கொண்ட உள்ளக விசாரணைக் குழுவை அமைத்தது. அந்தக் குழு புகார் அளித்தவர்களிடம் இரண்டு நாள் நேரடியாக விசாரணை செய்தனர். மேலும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஆடியோ ஆதாரங்களையும் பெற்று ஆய்வு செய்தனர். விசாரணையின் முடிவில் பேராசிரியர் பெரியசாமி மீதுள்ள குற்றச்சாட்டிற்கு முகாந்தரம் உள்ளதாக நிர்வாகக் குழுவிடம் அறிக்கை அளித்தது. அதனைப் பரிசீலனை செய்த நிர்வாகக் குழு பெரியசாமியைப் பணி இடை நீக்கம் செய்து உத்திரவிட்டது. மேலும் விரிவான துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்திரவு சாதீய அடக்குமுறை மற்றும் வன்முறைக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிலவிய ஜாதிய பாகுபாடு, சமூக நீதிக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுத்து நிறுந்தக் கோரி திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. நேரடியாக போராட்டங்களும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் பாஜக ஆசிரியர் அணியின் துணைத்தலைவரும், சாதிய ஒடுக்குமுறைகளை மேற்கொண்டவருமான பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இங்ஙனம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமியை பணி இடை நீக்கம் செய்ய உத்திரவிட்ட தமிழக அரசுக்கும் துணை வேந்தர் நிருவாகக் குழுவிற்கும் திராவிடர் விடுதலைக் கழகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் பெரியசாமி மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விரிவாக விசாரணை நடத்த நீதிபதி, கல்வியாளர்களைக் கொண்ட உயர் மட்ட விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்.

மேலும் கல்வித் தகுதி சான்றிதழ் மோசடி போன்றவற்றை முறையாக விசாரணை செய்து அவரைப் பணி நீக்கம் செய்வது ஒன்றுதான் சரியான முடிவாக அமையும்.

இனிமேலாவது சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் சமூக நீதி பாதுகாக்கப்படும் என்பதையும், பல்கலையில் ஜாதி ஆணவப் போக்குகள் ஒடுக்கப்படும், அதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் மகிழ்ச்சியுடன் நன்றி கூறுகிறது.”

– கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
30.08.25

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொளத்தூர் மணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர் பெரியசாமி, பாஜகவில் இருப்பவர். கொங்கு வேளாள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர், அதனாலேயே மற்றோரை அவமரியாதை செய்து வந்தார் என்று சொல்லப்படுகிறது.

இவரை நிரந்தரமாக நீக்க வேண்டுமென பலர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Leave a Response