
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ‘மாண்டஸ்’ புயல் சின்னம் காரணமாக – கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அலுவலர்கள் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனைத்துத் துறை அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று (08.12.2022) தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ்’ புயலானது மேலும் வலுவடைந்து கடும் புயலாக தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இது வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என்றும், மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்று ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையைக் கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
9-12-2022 காலை 5.30 மணி முதல் 09-12-2022 இரவு 11.30 வரை வேதாரண்யம் முதல் பழவேர்காடு வரை உள்ள கடலோரப் பகுதிகளில் 3.5 மீட்டர் முதல் 5.2 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும் என்று இந்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.புயல் மற்றும் கன மழை நேரங்களில் பழைய கட்டடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புயல் கடக்கும் நேரத்தில் கட்டங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ரும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இப்புயலின் தாக்கம் காரணமாக நாளை, திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.


