குஜராத்தில் காங்கிரசு தோல்விக்குக் காரணம் இவைதான்

குஜராத் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து காங்கிரசு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது….

எங்களைப் பொறுத்தவரை குஜராத் முடிவுகள் சுயபரிசோதனை செய்ய வேண்டியதையும், கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் காட்டுகின்றன. ஏனெனில் குஜராத் தேர்தல் முடிவுகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன.

எங்கள் எதிர்பார்ப்புகளை விட மிகக் குறைவாக உள்ளன. இது குஜராத் கட்சி அமைப்பின் பாதிப்பு ஆகும். நமது அரசியலில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் பங்கு தெளிவாகிவிட்டது.

ஆம்ஆத்மி மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் பாஜவின் மறைமுகக் கூட்டாளிகள். அவர்கள் பா.ஜ.க வுக்கு ஆதரவாகத் தேர்தலில் களம் இறங்கி காங்கிரசு வாக்கு வங்கியைக் குறைத்துவிட்டன.

காங்கிரசை ஆதரித்த சமூகத்தினர் வெளியே வந்து வாக்களிக்கக் கூடாது என்பதற்காக குஜராத்தில் அச்சம் நிறைந்த சூழல் உருவாக்கப்பட்டது.காங்கிரசுக் கட்சியின் உள்ளூர்த் தலைமை, பிரச்சாரத்தில் உள்ள குறைபாடுகளாலும் இந்தத் தோல்வி ஏற்பட்டுள்ளது. அவற்றை நாங்கள் சரிசெய்ய வேண்டும். அடுத்த தேர்தலில் எங்கள் வாக்குகள் 40 சதவீதத்திற்கு உயரும்.

இமாச்சலில் எங்கள் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். 68 இல் 40 இடங்களை வெல்வது ஒரு வலிமையான பாஜவுக்கு எதிராக சாதிப்பது பெரிய விசயம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response