
சென்னை நீலாங்கரையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு அவருடைய கணவர் சபரீசன் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதுபோல அண்ணா நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மோகனின் வீடு, அவருடைய மகனும், சபரீசன் நண்பருமான கார்த்தி மோகனின் அண்ணாநகரில் உள்ள அலுவலகம் மற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா என்பவரின் வீடு, சேத்துப்பட்டு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை வருமானவரித்துறை சோதனை தொடங்கியது.
இதில், 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை தொடங்கியவுடன் வீட்டில் இருந்து எவரும் வெளியே செல்லவும், வெளியில் இருந்து எவரும் வீட்டுக்கு உள்ளே வரவும் அனுமதிக்கப்படவில்லை. சோதனை நடந்த இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அவருடைய கணவர் சபரீசன் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடக்கிறது என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. உடனடியாக திமுக சட்டத்துறையைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி மற்றும் சைதாப்பேட்டை தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சபரீசன் வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே விட மறுத்து விட்டனர்.
சோதனை நடந்த இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக அண்ணாநகர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்ய நுழைந்தபோது நான் பரப்புரைக்குச் செல்ல இருப்பதால் தன்னை வெளியே செல்ல அனுமதிக்கும்படி மோகன் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் மோகனை பரப்புரைக்குச் செல்ல வருமானவரித்துறையினர் அனுமதித்தனர். ஆனால் அவருடைய மகன் கார்த்திக் மோகனை வெளியே செல்ல வருமானவரித்துறை அனுமதிக்கவில்லை. அதேபோல் அவருடைய மனைவி அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது அவரை உள்ளே விட வருமானவரித் துறையினர் அனுமதிக்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அவரை அனுமதித்தனர். தகவலறிந்ததும் அப்பகுதிக்கு வந்த தி.மு.க.வினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள, கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரும், மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜியின் வீட்டில் காலை 11 மணியளவில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் இருந்தவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியாட்கள் யாரும் வீட்டின் உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சோதனையின்போது செந்தில்பாலாஜியின் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது தம்பி அசோக்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ராயனூரில் உள்ள தி.மு.க. மேற்கு நகர பொறுப்பாளர் தாரணி சரவணன் வீட்டிலும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கொங்கு மெஸ் சுப்ரமணி வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
வருமானவரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சையில், தஞ்சை ஒன்றிய தி.மு.க. செயலாளர் முரசொலி என்பவரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து, வருமானவரி துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
வருமானவரித் துறையின் கீழ் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்களின் அடிப்படையில், திருவண்ணாமலை தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.3.7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.91 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அவருடைய கணவர் சபரீசன் அலுவலகம், அவரது நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனையில் ஒரு சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இதைப்போன்று திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை மற்றும் கரூர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆவணங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை சோதனை நிறைவடையாத நிலையில் எவ்வளவு ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது கூற இயலாது. ஓரிரு நாட்களில் முழு விவரம் தெரியவரும். தொடர்ந்து விசாரண நடந்து வருகிறது. சோதனையும் தொடர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு வருமானவரித்துறை உயர் அதிகாரிகள் கூறினார்கள்.
திமுக தலைவர் மகள் செந்தாமரை வீட்டில் தொடர்ந்து 12 மணிநேரம் சோதனை நீடித்தது.சோதனை முடிந்த பின்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது…..
திமுக தலைவரின் மகள் வீட்டில் சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 11 மணி நேரம் துருவித் துருவி சோதனை நடத்தியும் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். சோதனையின் போது ரூ.1.36 லட்சம் மட்டுமே இருந்தது. அதற்கான வங்கி பரிவர்த்தனையை காண்பித்ததும் திரும்பிக் கொடுத்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.


