ஈழத்தமிழ் மக்கள் போராட்டத்துக்கு நடிகர் நாசர் ஆதரவு தருவார் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

நாசர் என்ற பெயரில் நான் விரும்பியவர் புரட்சியாளர் எகிப்து நாட்டின் மேனாள் குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர். நீல நதியின் குறுக்கே அமைந்த அசுவான் ஏரி் அவரின் பெயரால் நாசர் ஏரி எனப் புகழ்பெற்றது.

அந்தப் பெயரையே கொண்ட நாடக, திரைப்பட, சின்னத்திரை நடிகர் நாசர் நடிப்பு என்னை நெடுங்காலம் ஈர்த்து வந்தது. மேடையிலோ திரையிலோ அவர் தெரியமாட்டார். அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவார்.

இந்திய மத்தியப் பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற கசுராகோ பற்றிய திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் 300 திரைப்படங்களுக்குக் கூடுதலாக நடித்துள்ளார். நடிப்புக்காக இந்திய அரசு, ஆந்திர அரசு, தமிழக அரசு வழங்கிய விருதுகள், பட்டங்கள் பெற்றவர்.

அவரும் அவரது துணைவியாரும் அவர்தம் மக்களும் புத்தக விரும்பிகள். ஆண்டுதோறும் சென்னைப் புத்தகக் காட்சிக்குத் தன் இல்லத்தாருடன் வருவார். காந்தளகம் அரங்கிற்கு வருவார். ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களை வாங்குவார்.

ஈழத்தில் தமிழ் மக்கள் விடும் கண்ணீர் அவருக்குக் கண்ணீரை வரவழைக்கும். நீதிக்காகப் போரடும் மக்களாக ஈழத் தமிழரைக் கண்டார். ஆழ்ந்து புரிந்து அப்போராட்டத்துக்கு ஆதரவு தருவார்.

ஓவியர் புகழேந்தி எழுதிய பிரபாகரனின் பன்முக ஆளுமை பற்றிய நூலை அவர் வெளியிட நான் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில் கருத்தாளமாக, இனிமையாக, எளிமையாகப் பேசினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவராக 1344 வாக்குகள் பெற்று நாடக, திரைப்பட, சின்னத்திரை நடிகர் நாசர் வெற்றிபெற்றுள்ள செய்தி மகிழ்ச்சியைத் தந்தது.

தனக்கு மாறான கருத்துக் கொண்டவர்களையும் தன் இயல்பான எளிமையான சிரிப்பால் கவரும் அவர், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கூறியன: “எங்களுக்கு யாரையும் தோற்கடிக்கும் எண்ணம் இல்லை. தேர்தலில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியிருப்போம். அவற்றை மறந்து எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம். இனிப் பிளவுபட்டு இருக்க மாட்டோம். முந்தைய சங்க ஆட்சியின் குறைகளைப் பேச மாட்டோம்.”

Leave a Response