
கர்நாடகத்தில் அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அந்த மாநில தொழில் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடகம் தகவல், உயிரித் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குகிறது. இதுபோன்ற நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் உண்மையில்லை.
அனைத்துத் துறைகளிலும் கன்னடர்களுக்கு, குறிப்பாக கன்னடம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் அதிக அளவு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தகவல், உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைப்பதற்கு கன்னடர்கள் தங்களுக்கு சொந்த நிலங்களை வழங்கியுள்ளனர்.
அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டாயமாக வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.
கர்நாடகத்தில் எந்தக்கட்சி ஆட்சி நடந்தாலும் கன்னடர்களுக்கு முன்னுரிமை என்று தெளிவாகச் சொல்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பது எப்போது என்பதுதான் அனைவரின் கேள்வி.


