
நாஞ்சில் சம்பத் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, தி.மு.க.-காங்கிரசு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை செய்தார். 2019 மார்ச் மாதம் 27 ஆம் தேதி தவளகுப்பம் பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். அப்போது புதுச்சேரி காங்கிரசு வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்துப் பேசும் போது, புதுச்சேரி ஆளுநர் கிரண்பெடிக்கு எதிராகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி உள்துறைச் செயலாளர் சுந்தரேசன் தவளகுப்பம் காவல்நிலையத்தில் நிலையத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நாளை (சனிக்கிழமை) நேரில் ஆஜராகுமாறு புதுச்சேரி காவல்துறையினர் நாஞ்சில் சம்பத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். கொரோனா பீதி இருப்பதால் தற்போது ஆஜராக முடியாது, காலஅவகாசம் வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் பதில் அனுப்பியதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தைக் கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி காவல்துறையினர் ஈடுபட்டனர். நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊர் குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மணக்காவிளை ஆகும். மணக்காவிளையில் உள்ள வீட்டில் நாஞ்சில் சம்பத் இருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து புதுச்சேரி காவல்துறையினர் நேற்று காலையில் அந்த வீட்டுக்கு வந்தனர்.
பின்னர் உங்களைக் கைது செய்கிறோம் என நாஞ்சில் சம்பத்திடம் தெரிவித்தனர். இதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். இதற்கிடையே நாஞ்சில் சம்பத்தைக் கைது செய்ய புதுச்சேரி காவல்துறையினர் வந்திருப்பதாக தி.மு.க.வினருக்குத் தகவல் கிடைத்ததும், அவர்கள் நாஞ்சில் சம்பத் வீடு முன்பு திரண்டனர்.
அதே சமயத்தில் தனது வழக்குரைஞர்களுடன் கலந்து பேசி உரிய பதில் சொல்வதாக காவல்துறையிடம் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். இதனையடுத்து நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் வழக்குரைஞர் மகேஷ் மற்றும் சில வழக்குரைஞர்கள் அங்கு வந்தனர். சம்மனை வாங்கிப் படித்துப் பார்த்தனர். பின்னர் 21 ஆம் தேதி வரை (அதாவது நாளை) கால அவகாசம் இருக்கும் போது, கைது செய்ய முயற்சிப்பது ஏன்? என எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தப் பரபரப்புக்கு இடையே திருவட்டார் காவல் ஆய்வாளர் ரவீந்திரன் தலைமையிலான காவல்துறையினரும் நாஞ்சில் சம்பத் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் புதுச்சேரி காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் நாஞ்சில் சம்பத்தைக் கைது செய்யும் நடவடிக்கையை கைவிட்டு புதுச்சேரி காவல்துறையினர் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில், நான் திராவிட இயக்கத்தின் குரலாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் பேசி வருகிறேன். யாரும் சொல்லாத கருத்துகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து அதை அறப்போராட்டமாக நடத்தி வருகிறேன். அதனால் கடந்த ஒரு வருடத்துக்கு முன் நடந்த வழக்குப் பதிவுக்கு இப்போது கைது செய்ய நினைக்கிறார்கள். இந்த மாதிரியான நடவடிக்கை மூலம் என்னை முடக்கி விட முடியாது என்றார்.


