மு.க.ஸ்டாலின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலாசகரான இவர், தேர்தலில் வெற்றி பெற கட்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்திருந்தது. இதனை விமர்சிக்கும் வகையில் பிரசாந்த் கிஷோர் பேசினார். இந்தச் சட்டங்களுக்கு நிதீஷ் குமார் ஆதரவாக இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிஷோர் விமர்சனம் செய்தது அக்கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அக்கட்சியினர் கிஷோரை குற்றம் சாட்டிப் பேசி வந்தனர். இதுபற்றி நிதீஷ் குமார் கூறும்பொழுது, அமித் ஷா கட்சியில் சேர்க்கும்படி கூறியதனாலேயே கிஷோர் கட்சியில் சேர்க்கப்பட்டார் என கூறினார். ஆனால், இதற்கு கிஷோர் மறுப்பு தெரிவித்ததுடன், நிதீஷ் குமாரை ஒரு பொய்யர் என்று கூறினார். இது கட்சிக்குள் மீண்டும் சலசலப்பினை உண்டாக்கியது.

இந்நிலையில் அக்கட்சியில் இருந்து கடந்த ஜனவரி 29 ந்தேதி கிஷோர் நீக்கப்பட்டார். இதுபற்றி பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நன்றி நிதீஷ் குமார் அவர்களே. பீகாரின் முதல்வராக நீங்கள் பதவியைத் தக்க வைத்து கொள்ள எனது வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு ஆசி வழங்கட்டும் என கிண்டலாக பதிலளித்து உள்ளார்.

இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்களை நடத்தி வரும் தி.மு.க.வுடன் அவர் கைகோர்த்து உள்ளார்.

இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை இந்தியன் பி.ஏ.சி. (இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி) அமைப்புடன் இணைந்து தி.மு.க. சந்திக்க உள்ளது. அதன் உதவியுடன், தமிழகம் முன்பு பெற்றிருந்த பொலிவை மீண்டும் பெறுவதற்கான நம்முடைய திட்டங்கள் வடிவம் பெறும் என தெரிவித்து உள்ளார்.

அவரது இந்தப் பதிவுக்கு, இந்த வாய்ப்பினை வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி என அந்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உங்களது திறமையான தலைமையில், தமிழகம் மீண்டும் வளர்ச்சி மற்றும் வளம் சார்ந்த பாதையில் பயணிக்கவும் மற்றும் 2021 தேர்தலில் வெற்றி பெற உதவுவதற்காக, தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுடைய தமிழக அணி ஆர்வமுடன் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

மு.க.ஸ்டாலினின் இந்த முடிவுக்கு பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஒரிஜினல் சங்கி ஸ்டாலின் என்கிற குறிச்சொல்லை உருவாக்கி சமூகவலைதளங்களில் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகிறார்கள்.

Leave a Response