
இன்றுகாலை, கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில்,160 பேர் காயமடைந்துள்ளனராம். அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தைத் தொடர்ந்து கட்டான பகுதியிலுள்ள தேவாலயத்திலும் பல குண்டுகள் வெடித்துள்ளன.
அங்கு பலர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து கொழும்பில் இரு நட்டத்திர விடுதிகளிலும் இன்று காலை இரண்டு குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கொழும்பு சங்கரில்லா நட்சத்திர விடுதியின் மூன்றாவது மாடியிலும், சினமன் கிரேண்ட் விடுதியிலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
இதில் வெளிநாட்டுப் பயணிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு அருகிலும் மற்றுமோர் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக இதுவரை ஐந்து இடங்களில் இன்று காலை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சற்றுநேரத்தில்,ஆறாவது தடவையாகவும் மற்றுமோர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆறாவது குண்டு வெடிப்பு சம்பவம் கொழும்பு கிங்ஸ்பெரி நட்சத்திர விடுதியில் நடந்துள்ளது.
இதுவரை இடம்பெற்ற இந்த 6 குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 160 க்கும் மேற்பட்டோர் படுகயாமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகயாமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் சினமன் கிரேண்ட் நட்சத்திரவிடுதியில் நடிகை ராதிகா தங்கியிருந்தாராம். இப்போதுதான் அங்கிருந்து வந்தேன், அங்கும் குண்டு வெடித்த செய்தி கேட்டு அதிர்ச்சியாக இருக்கிறது என்று ராதிகா கூறியுள்ளார்.


