ஒன்றிய அமைச்சர் மீது பிணையில் வரமுடியாத வழக்கு – கேரள பரபரப்பு

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

இதனிடையே, குண்டுவெடிப்பு தொடர்பாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு கூறியிருந்தது. இருப்பினும், எர்ணாகுளம் குண்டுவெடிப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெறுப்பூட்டும் தகவல்களை ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிவேற்றி இருந்தார்.

சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியல் என ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்திருந்தார். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

கேரள காங்கிரசுக் கமிட்டி அளித்த புகாரின் பேரில் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கொச்சி காவல்துறையின் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒன்றிய அமைச்சர் உட்பட 200-க்கும் மேற்பட்ட வலைதளப் பதிவுகள் வெறுப்பூட்டும் வகையில் இருந்தன. இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், கலவரத்தைத் தூண்டுதல், சாதி, மதம், மொழி உள்ளிட்ட உணர்ச்சியைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கொச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். ராஜீவ் சந்திரசேகர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிந்தது. ஒன்றிய அமைச்சர் தவிர மேலும் 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒன்றிய அமைச்சர் மீது கேரளமாநில அரசு வழக்குப் பதிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response