வை ராஜா வை — திரைப்பட விமர்சனம்

பின்னால் நடப்பவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் சிறப்பு சக்தியுள்ள நாயகன் கவுதம்கார்த்திக் அதனாலேயே எவ்வளவு சிக்கல்களைச் சந்திக்கிறார் என்பதுதான் படத்தின் ஒற்றைவரிக்கதை. மிகச்சுவாரசியமாகச் சொல்லியிருக்க வேண்டிய இந்தக்கதையை அனுபவமின்மை காரணமாக மிகச்சொதப்பலாக்கியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யாஆர்தனுஷ்.

நாயகனாக நடித்திருக்கும் கவுதம்கார்த்திக் நடுத்தரக்குடும்பத்து இளைஞன் வேடத்துக்குக் கொஞ்சம் அன்னியமாகவே தெரிகிறார். அம்மா அப்பாவிடம் நடந்துகொள்ளும் விதம் அக்கா மீது காட்டும் பாசம் ஆகியன காட்சியமைப்பில் இயல்பாக இருக்கின்றன. அதைத் தன்நடிப்பினால் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வலிமை இன்னும் கவுதமுக்குக் வரவில்லை. அக்காவின் கல்யாணம் நடக்கும் நேரத்தில் மிகப்பெரிய நிகழ்வின்போது கூட உணர்ச்சிகளைக் காட்டாமல் சாதாரணமாக நிற்கிறார்.

நாயகியாக பிரியாஆனந்த். செடி கொடி மரங்கள் மீது பரிவுகாட்டுகிறவர் என்று சொல்லுகிறார்கள். சில இடங்களில் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு நிற்பதைத் தவிர கதைக்கும் அவருடைய ஆர்வத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.படத்தில் அவர் நாயகி என்பதால் கவுதமோடு நடனமாடுவதும் சில காட்சிகளில் வந்து போவதுமாக இருக்கிறார். சின்னவேடமொன்றில் நடித்திருக்கும் டாப்ஸி தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்துக்கு உண்மையாக இருக்கிறார். அவருடைய நடைஉடை பாவனைகள் மிகவும் ஒயிலாக இருக்கின்றன.

நாயகனின் அக்காவாக நடனஇயக்குநர் காயத்ரிரகுராம் இருக்கிறார். அவருடைய திருமணத்துக்காகப் பணம் தேவை அதற்காக நாயகன் சூதாட்டத்துக்கு ஒப்புக்கொள்கிறார் என்பதெல்லாம் அரதப்பழசு. படத்தில் நாயகனுக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கிறார் விவேக். சில இடங்களில் சிரிக்கவைப்பதோடு அவர் வேலை முடிந்துவிடவில்லை. திரைக்கதையில் நீக்கமற நிறைந்துமிருக்கிறார்.

மட்டைப்பந்தாட்டப் போட்டியின்போது நாயகன் சொல்வதெல்லாம் நடப்பதும் அதன் காரணமாக ஒருகோடி ரூபாயை சூதாட்டத்தில் வெல்லும் காட்சிகளில் கொஞ்சம் அதிகமாகவே நடித்திருக்கிறார் விவேக். வில்லனாக நடித்திருக்கும் டேனியல்பாலாஜி, வழக்கமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நாயகனோடு வருகிற இன்னொரு நகைக்சுவைநடிகர் சதீஷ், சில இடங்களில் சிரிக்கவைக்கிறார்.

நாயகன் கவுதமின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் வசந்துக்கென்று சிறப்பம்சம் எதுவும் இல்லை. வழக்கமான அப்பா வேடமாக இருக்கிறது. கோவா மற்றும் பெரியகப்பல் ஆகியனவற்றில் படம் பிடித்திருக்கிறார்கள். கப்பலில் சூதாட்டம் என்பதும் அதற்காக நாயகனை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது எதிர்பார்க்கப்பட்டதாகவே இருக்கிறது. இதனால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கிறது என்பது போலவே படத்தைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

மனைவிக்காக கவுரவத் தோற்றத்தில் வருகிற தனுஷ¨ம், ஒரு பாடலுக்கு ஆடியிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவும் படத்துக்கு உதவியாக இருக்கப்போவதில்லை. யுவனின் இசையில் பாடல்களும் பெரிதாக இல்லை, பின்னணிஇசையிலும் சோபிக்கவில்லை. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தன்னுடைய வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்.

படத்தில் காதலர்கள் இருக்கிறார்கள் காதல் இல்லை, குடும்பம் இருக்கிறது பாசம் இல்லை, வில்லன் இருக்கிறார் சரியான சண்டைகளோ புத்திசாலித்தனமான காட்சிகளோ இல்லை. அழகான நாயகிகள் ஒன்றுக்கு இரண்டுபேர் இருந்தும் ரசிக்கத்தக்க காட்சிகளே இல்லை, ஒன்றுக்கு நான்கு நகைச்சவை நடிகர்கள் இருந்தும் வாய்விட்டுச் சிரிக்க ஒரு காட்சியும் இல்லை, பெரியதயாரிப்பு நிறுவனம், பெரியதொழில்நுட்பக்கலைஞர்கள்,

நல்லநடிகர்கள் ஆகியன கிடைத்தும் தேவையானவற்றை எடுக்கும் சுதந்திரம் இருந்தும் படத்தை ரசிக்கிற மாதிரி கொடுக்கமுடியாதது இயக்குநர் ஐஸ்வர்யாஆர்தனுஷின் குற்றமே,

Leave a Response