
சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் கொடுமையாகிவிடும் என்பது சாதாரணமனிதர்களுக்கு, ஒரு கலைஞனுக்கு சாகும்நாள் தெரிந்துவிட்டால் சமுதாயத்துக்கு நல்ல கலைப்படைப்பு கிடைக்கும் என்பதைச் சொல்லுகிற படமென்றும், சாவு எப்போது என்று தெரிந்துகொண்ட கலைஞன் சாகாவரம் பெற்றவனாக நடிக்கமுடியும் என்பதன் மூலம் கலைஞர்களுக்கு மரணமில்லை என்று சொல்கிற படமென்றும், வாழ்க்கை என்பது நிலையானதல்ல என்கிற நிலையாமைத் தத்துவத்தைச் சொல்லுகிறபடமென்றும், இவற்றில் எப்படி வேண்டுமானாலும் இந்தப்படத்தைச் சொல்லலாம்.
உண்மையில் கமல் இருப்பது போலவே படத்தில் மனோரஞ்சன் என்கிற பார்த்திரம் படைக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான நடிகராக வாழ்ந்துகொண்டிருக்கும் கமலுக்கு நடிகனாக நடிக்கச் சொல்லித் தரவேண்டுமா என்ன? திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படத்தை அவருடைய சொந்தமகனே மொக்கை என்று சொல்வதை மறைந்திருந்து கேட்கும் காட்சியில் தொடங்கி, மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் ஆண்ட்ரியாவோடு காதல், (அவர்கள் மொழியிலேயே சொல்வதென்றால் கள்ளக்காதல்) படப்பிடிப்புத்தளத்தில் நடந்துகொள்ளும் விதம் என்று எல்லாவற்றையும் நன்றாகச் செய்திருக்கிறார்.
ஓருசில காட்சிகள்தாம் என்றாலும் கமல், ஆண்ட்ரியா காதல் ரசனைக்குரியதாக இருக்கிறது. அறுவைசிக்கிச்சைக்குத் தயாரா என்று ஒரு மருத்துவர் கமலைக் கேட்க அவர் ஆண்ட்ரியாவிடம் நான் தயாரா என்று கேட்டுவிட்டு முத்தம் கொடுத்துக் கண்ணடிக்கும் காட்சி கமலின் முத்திரைக்காட்சி என்று சொல்லலாம்.
மரணம் வந்துவிட்டது என்று தெரிந்தவுடன், பதட்டம் அடைந்தாலும் படத்திலும் குருநாதராகவே நடித்திருக்கும் இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் போய் என்னை உச்சாணிக்கொம்பில் வைத்தவர் நீங்கள் என்னுடைய கடைசிப்படமும் உங்களுடைய படமாக இருக்கட்டும் என்று கெஞ்சுகிற இடம் கண்களைக் கசியவைக்கிறது.
கமல் என்கிற நடிகனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதன் பலனை பாலச்சந்தரும் அடைந்துவிட்டார். கமலைப் பார்த்தவுடன் கொதிப்பதும் அவர் மரணத்தின் பிடியில் இருக்கிறார் என்று தெரிந்ததும் ஐ லவ் திஸ் ராஸ்கல் என்று சொல்லிக்கலங்குவது உட்பட எல்லாக்காட்சிகளிலும் அவருடைய இயல்பான குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அதனாலேயே தேர்ந்தநடிகர் என்று அவரைச் சொல்லலாம்.
காதலியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியாவும் இந்தப்படத்தின் மூலம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அளவாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.
மனைவியாக நடித்திருக்கும் ஊர்வசியை, மருத்துவமனையில் கமலோடு பேசும் ஒரு காட்சிக்காகவே பாராட்டலாம். கமலுடைய மகளாக சில காட்சிகளில் வருகிற பார்வதி மீண்டும் தானொரு சிறந்தநடிகை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.
மரணத்தின் பிடியில் இருக்கிற கமல் நடிக்கும் படத்தில் சாகாவரம் பெற்ற உத்தமன் என்கிற வேடத்தை ஏற்கிறார். அந்தப்படத்தில் உடன்நடிக்கும் நடிகர்கள் நாசர், சண்முகராஜன், ஞானசம்பந்தம், பூஜாகுமார் ஆகிய எல்லோருமே மிகையாக நடித்திருக்கிறார்கள் நகைச்சுவை என்று நினைத்து அவர்கள் செய்யும் மிகச்சில இடங்களில் புன்னகைக்க வைக்கின்றன மற்ற இடங்களில் அவர்களுடைய செயல்கள் எரிச்சல் மூட்டுகின்றன.
நடிகர் கமலின் மரணம் பற்றி அவருடைய மனைவி மகன், மாமனார் ஆகியோர் தெரிந்துகொள்ளும் காட்சி கண்கலங்கவைக்கிறது. அப்போது மகனோடு கமல் பேசுவதும் மற்றொரு இடத்தில் மகள் பார்வதி அவருடைய அம்மாவுக்குக் கமல் எழுதிய கடிதத்தைப் படிக்கிற காட்சியும் நெகிழ வைக்கின்றன.
கமலின் மேலாளராக நடித்திருக்கும் எம்எஸ்.பாஸ்கர் இந்தப்படத்தில் மிக நல்லபெயர் பெறுவார். ஒரு நடிகரின் மேலாளர் எப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் இருக்கிறார்.
கமல் என்கிற நடிகனின் கதையே போதுமானதாக இருக்கும் போது படத்துக்குள் அவர்கள் எடுக்கும் படத்தின் கதை தேவையா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கமலே கதை ,திரைக்கதை எழுதியிருக்கிறார் என்பதால் அவருடைய சிந்தனைகளை அளவுக்கதிகமாகக் கொட்டியிருக்கிறார், வில்லன் என்பது ஆங்கிலச் சொல் அல்ல வில்லைக் கையாளுபவன் வில்லன் என்று விளக்கம் கொடுப்பதெல்லாம் கமலின் வீம்பையே காட்டுகிறது.
