தமிழ் மீனவர்கள் போதைப் பொருள் கடத்துகிறார்கள் என்று சொல்வதா? – மோடி அரசை வறுத்தெடுக்கும் சுப.உதயகுமார்.


மீனவர்கள், விவசாயிகளைக் கேவலப்படுத்தும் கார்ப்பரேட் ஏஜென்ட் பா.ஜ.க. கட்சியை, அரசை கண்டிக்கிறோம்! தொழிலாளர்கள் ஒன்றுதிரள மே தினம் அன்று கோரிக்கை வைக்கிறோம் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் சுப.உதயகுமார் கூறியிருக்கிறார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு….
காங்கிரசுக் கட்சியின் கார்ப்பரேட் ஏஜென்ட் மன்மோகன் சிங் நடத்திய அசிங்கமான அரசை அடியொற்றி நடத்தப்படும் சூப்பர் கார்ப்பரேட் ஏஜென்ட் நரேந்திர மோதியின் பா.ஜ.க. அரசும், கட்சியும், கட்சிக்காரர்களும் உழைத்து வாழும் மீனவர்கள், விவசாயிகளை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஏறத்தாழ 600 தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள், சுமார் 2,000 பேர் முடமாக்கப் பட்டிருக்கிறார்கள், அவர்களுக்கு கடலில் பாதுகாப்பில்லை, கட்சத் தீவு பிரச்சினையும் அவர்களை துன்புறுத்துகிறது என்றெல்லாம் நாம் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்க, மோதி அரசின் அதிகாரி வெந்தப் புண்ணில் உப்பைத் தேய்க்கிறார்.
தன் நாட்டு மக்கள் ஆபத்தான வேலைக்குச் சென்று, பிழைப்பு நடத்தி, உடனிருப்போருக்கு உணவளித்து, நாட்டுக்கு அந்நியச் செலாவணியும் ஈட்டிக்கொடுத்து ஓர் அபாரமான சேவை செய்துகொண்டிருந்தால், ஒன்று அவர்களுக்கு உதவ வேண்டும். அல்லது உபத்திரவம் செய்யாமல் ஒதுங்கி நிற்க வேண்டும். கேவலப்படுத்தாமலிருக்க வேண்டும்.
7,500 கி.மீ. நீளமுள்ள இந்தியாவின் கடற்கரையில் வேலை செய்துவரும் மீனவர்கள் தங்களுக்கென தனி அமைச்சகம் ஒன்றைக் கேட்கிறார்கள்; இதுவரை எந்த பதிலும் இல்லை. தங்கள் பிரச்சினைகளை தங்களின் பிரதிநிதி ஒருவரே எடுத்துரைக்கும் பொருட்டு, தங்களுக்கு தனி நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகள் கேட்கிறார்கள். இதுவரை நடந்தபாடில்லை. தங்களை இந்தியாவின் படைகள் காக்க வேண்டும் என்று கோருகிறார்கள். அதானி, அம்பானிகளைக் காக்கத் துடிக்கும் மத்திய அரசு , ஏழைத் தமிழ் மீனவர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை.
இந்த லட்சணத்தில் இந்திய கடலோரக் காவல்படையின் துணை இயக்குனர் கே. ஆர். நாட்டியாலா எனும் பேர்வழி தமிழ் மீனவர்கள் தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிச் செல்வதாகவும் நீதிமன்றத்திடம் மனு சமர்ப்பித்திருக்கிறார். அப்படியானால் கடலோரக் “காவல்படை” கையாலாகாதது என்று நாட்டுக்குத் தெரிவிக்கிறார். இந்த பேர்வழி உடனடியாக தன் வேலையை விட்டொழிக்க வேண்டும். தமிழின எதிரியான பா.ஜ.க.வும் அது வழிநடத்தும் மத்திய அரசும் தமிழ் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இவையெல்லாம் போதாதென்று மீனாகுமாரி என்பவர் தலைமையிலான கமிட்டி தயாரித்த கார்ப்பரேட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மீனவர்களின் மீது அடுத்தத் தாக்குதலை தொடர்கிறது மோதி அரசு. மீனாகுமாரி மீனா பிடித்து வாழ்ந்தார்? இந்தக் குமாரி எந்தக் கடலில் எவ்வளவு நாட்கள் மீன் பிடித்தார்? யார் இந்த இன்னொரு சாந்தா? இவரது அறிக்கை எப்படி வேதவாக்காகிறது?
மீனவர்கள் கடத்தல்காரர்கள் என்கிற பா.ஜ.க. தற்போது விவசாயிகள் கோழைகள் என்றும், குற்றவாளிகள் என்றும் கொக்கரிக்கிறது. இது யாரோ பொறுப்பற்ற ஒருவனின் கூற்றல்ல. ஹரியாணா மாநில விவசாயத் துறை அமைச்சரின் கருத்து. தங்களின் கார்ப்பரேட் புரோக்கர் வேலைக்கு தடையாக இருக்கும் மீனவர்கள், விவசாயிகளைக் கண்டால், பா.ஜ.க.வுக்கு எரிச்சலும், கோபமும் வருகிறது என்பதுதான் உண்மை.
எனவேதான் நம்மையெல்லாம் சேவைத் துறைக்கு மாறுங்கள், மீன்பிடித்தல், விவசாயம், சில்லறை வணிகம் போன்றவற்றை விட்டுவிடுங்கள் என்று காங்கிரசு, பா.ஜ.க. கட்சிகளும், ஆட்சிகளும் மாறி மாறி கேட்டுக்கொள்கின்றன. தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதமோ, வேலை பாதுகாப்போ, அடிப்படைச் சம்பள உறுதியோ, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையோ, தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு மதிப்போ, வாழ்க்கையில் எந்தவிதமான கண்ணியமோ ஏற்படுத்தித் தராத இந்த இரண்டு கார்ப்பரெட் ஏஜெண்டுகளும் தொழிலாளர்களை அழித்தொழிப்பதில் மும்முரமாயிருக்கின்றனர்.
மீனவர்கள், விவசாயிகளைக் கேவலப்படுத்தும் கார்ப்பரேட் ஏஜென்ட் பா.ஜ.க. கட்சியை, அரசை கண்டிக்கிறோம்! மீனவர்களும், விவசாயிகளும், வணிகர்களும், பெண்களும், தலித் மக்களும், சிறுபான்மையினரும், இளைஞர்களும், தொழிலாளர்களும் ஓரணியில் ஒன்றுதிரள மே தினம் அன்று கோரிக்கை வைக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response