கெளதம் மேனனை வைத்து ஐந்து படங்கள்– கத்தி படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் அதிரடி.

 

விஜய் நடித்த கத்தி படத்தைத் தயாரித்து ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியது இலண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம். கத்தி படம் வெளியான நாளில் படத்தின் விளம்பரங்களில் மட்டுமல்ல திரையிலும் அந்நிறுவனத்தின் பெயரையே போடமுடியவில்லை. படம் வெளியான சில நாட்களில் நீதிமன்றம் சென்று தங்கள் நிறுவனத்தின் பெயரை மீட்டெடுத்தது அந்நிறுவனம்.

இவ்வளவு சிக்கல்களைச் சந்தித்து ஒரு தொழில் செய்யவேண்டுமா என்று நினைத்து அதன்பின் படத்தயாரிப்பில் ஈடுபடவேண்டாம் என்று அந்நிறுவனம் நினைத்திருந்ததாம். ஆனால் படத்தயாரிப்பையே தொழிலாகக் கொண்ட சிலரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் படத்தயாரிப்பில் இறங்குகிறதாம் லைகா நிறுவனம்.

இம்முறை ஒன்றல்ல ஐந்து படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறதாம். முதலில் தயாராகவிருக்கும் படத்தை இயக்கப்போவது கௌதம்மேனன். முதல்படம் மட்டுமல்ல அவரை வைத்து ஐந்துபடங்களைத் தயாரிக்கிறோம் என்று ஒப்பந்தம் போட்டு முன்பணமும் கொடுத்துவிட்டார்களாம்.

இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த கௌதம்மேனன் இப்போது மிகவும் தெம்பாகிவிட்டார் என்று சொல்கிறார்கள். அவர் இப்போது சிம்பு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் அந்தப்படமே லைகாவின் கணக்கில் சேர்ந்துவிடுமா என்பதுதான் இப்போதைய பெரிய கேள்வியாக இருக்கிறது. அடுத்து விக்ரமை வைத்து அவர் இயக்குவதாக இருந்த படம் கைவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டது, இனிமேல் அதற்கும் உயிர் வந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

இதனால் மிகவும் உற்சாகமாகிவிட்டாராம் கௌதம்மேனன். இன்னும் சில ஆண்டுகளுக்கு அவருக்கு எந்தச் சிக்கலுமில்லை என்று சொல்கிறார்கள்.

Leave a Response