ராஜாஜிக்குத் புரிந்தது ஜெயலலிதாவுக்குப் புரியவில்லை– போட்டுத்தாக்கும் அதிமுக எம் எல் ஏ, பழ.கருப்பையா.

திடீரென்று தாலி அறுப்புப் போராட்டம் செய்தித்தாள்களில் பரபரப்பு ஏற்றியிருக்கிறது. இந்துமதத்தின் பேரால் ஒரு சிறு கூட்டம் பெரியார் திடலுக்குக் கிளம்பிப்போய் அதைத் தடுத்து நிறுத்த முயல, அங்கே உள்ளவர்கள் எதிர்த்து நிற்க, கைகலப்பு ஏற்பட்டு இரு தரப்பாரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தாக்க வந்தவன், தடுக்க முயன்றவன் என்ற வேறுபாடில்லாமல் இரு தரப்பினரையும் கைது செய்வதுதான் நடுநிலை என்று காவல்துறை பழகியிருக்கிறது. புனிதத் தாலி அறுக்கப்படுவதால் இந்துக்களின் மனம் புண்படும் என்றும் அதனால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும் என்றும் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து தடையாணை பெற்றிருக்கிறார்.
“அவனவன் பெண்டாட்டி தாலியை அவனவன் அறுப்பதில் இன்னொருவனின் மனம் ஏன் புண்பட வேண்டும்? கட்டிக்கொண்டவள் “சரி’ என்கிறாள், கட்டியவன் அறுக்கிறான்… இதில் உனக்கென்ன வந்தது?” என்று கேட்பாரும் உண்டு. இவ்வளவுக்கும் கி.வீரமணி, பெரியாரைப்போல மூர்க்கமாக “அறுக்கும்’ போராட்டம் என்று சொல்லாமல், “அகற்றும்’ போராட்டம் என்று அதை மென்மைப்படுத்தித்தான் சொல்லியிருக்கிறார். எங்கள் வீட்டிலேயே தாலி அறுபட்ட நிகழ்வு ஒன்று நடந்ததுண்டு. ஒருநாள் நான் பொதுவேலையாக வெளியே சென்றிருந்தேன். பட்டப்பகலில் ஒரு திருடன் என் வீட்டுக்குள் நுழைந்து, போராடிய என் மனைவியைக் கீழே தள்ளிவிட்டுத் தாலிச்சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டான். சட்டமன்ற உறுப்பினரின் மனைவி என்பதால் எனக்கு முன்னால் காவல்துறை வந்துவிட்டது. சங்கிலியை அறுத்ததில் அவளுடைய கழுத்தில் சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது. கீழே தள்ளியதில் முழங்கையும் தலையும் அடிபட்டிருந்தன.
ஆனால் அவள் டிபுடி கமிஷனரிடம் சொன்னாள்: “ஐயா, அந்த பட்டுக்கிடப்பான் களவாணி என் பின்னாலேயே வீட்டுக்குள்ளே நுழைஞ்சு என் தாலிச் சங்கி-யை அத்திட்டான். பத்துப் பவுனய்யா! எங்க ஆத்தா வீட்டிலே கலியாணத்தன்னைக்குப் போட்டது! எங்க அப்பச்சி சிங்கப்பூர்ல வாங்கியாந்த சுத்தத் தங்கம்.” “தாலிச்சங்கிலி அறுபட்டதாலே கணவனுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ’ என அவள் அஞ்சக்கூடும் என்று நான் கவலைப்பட்டேன். ஆனால் அவள் “பத்து பவுன்’ என்றும், “சிங்கப்பூர் தங்கம்’ என்றும் புலம்பினாளே ஒழிய, புனிதச் சின்னம் அறுந்துவிட்டது குறித்த எண்ணம் அவளுக்கு கிஞ்சிற்றும் இருந்ததாகத் தெரியவில்லை. அந்த எண்ணம் அரசாங்க வக்கீலுக்குத்தான் மொத்தமாக இருக்கிறது. பிறகு இரண்டு, மூன்று நாள் வெறுங்கழுத்தோடு மிகவும் சோகமாக இருந்தாள். காவல்துறை திருடனையும் பிடித்துத் தாலிச்சங்கிலியையும் மீட்டுக் கொடுத்துவிட்டது. நம்ம ராங்கியம் கறுப்பர் விடுவாரா? “அவன் கண்ணவிஞ்சு போக’ என்று சாபம் கொடுத்துவிட்டு, தாலிச்சங்கிலியை அவளே போட்டுக்கொண்டு அமைதியாகிவிட்டாள்.
ஒவ்வொரு நாளும் விடிந்தும் விடியாத வைகறைப் பொழுதில் வாச-ல் தண்ணீர் தெளிக்கும்போது, கோலம் போடும்போது, பயிற்சிக்காக நடக்கச் செல்லும்போது தமிழ்நாடு முழுதும் ஆயிரக்கணக்கான பெண்களின் தாலிச்சங்கிலிகளை அறுக்கிறார்கள். வீரமணியின் செயல்பாட்டுக்குத் தடையாணை பெற்றுக் கொடுத்ததுபோல், அதே செயலை அனுமதி இல்லாமல் செய்கிற திருடர்களின் செயல்பாட்டுக்குத் தடையாணை பெற்றுக் கொடுக்கக் கூடாதா? வீரமணி அறுத்தால்தான் புனிதம் கெடுமா? திருடர்கள் அறுத்தால் புனிதம் கூடுமா? இந்து மதம் சொல்ல வேண்டாமா? கி.வீரமணிக்குக் கருப்புச் சட்டையின் மீதுள்ள மோகமும், மணமான பெண்ணுக்குத் தாலிச்சங்கிலியின் மீதுள்ள மோகமும் வெறும் அடையாள மோகம்தான்.
இது போன்ற எந்தப் போராட்டமும் தமிழ்நாட்டுக்குப் புதிதில்லை, தடையாணைகள்தான் புதிது. தாலி அறுப்புப் போராட்டத்தோடு நிறுத்தவில்லை பெரியார். இராமர் படத்தை செருப்பால் அடிக்கும் நிலையும் வந்தது. அதைச் சங்கராச்சாரியார் பொருட்படுத்தவில்லை, ஆனால் கருணாநிதி கலங்கிப் போய்விட்டார். தேர்தல் காலத்தில் இராமருக்கு இத்தகைய சிரமத்தைக் கொடுத்திருக்கக்கூடாது என்பதுதான் கருணாநிதியின் கவலை. இவை எல்லாவற்றையும் விட பெரியார் நடத்திய மிகப்பெரிய போராட்டம் பிள்ளையார் உடைப்புப் போராட்டம். இதுபோன்ற காலகட்டங்களில் ஆட்சியில் இருந்த இராசாசி எந்தப் போராட்டத்தையும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவரை விட பெரிய இந்து யார்? கடவுள் மறுப்பு வாசகம் பெரியார் சிலைகளில் எழுதப்பட்டிருக்கிறதே என்று சினங்கொள்கிறார்கள். நீயும் சங்கராச்சாரியார் சிலையை ஊருக்கு ஊர் வைத்து “கடவுள் இருக்கிறார்’ என்று எழுதி வை. இல்லையென்றால் சங்கராச்சாரியார்தான் கடவுள் என்று வேண்டுமானாலும் எழுதி வை. யார் கேட்கப்போகிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளாக அமுக்கி வைக்கப்பட்ட ஓர் இனம் பெரியார் போல் ஒரு தலைவர் கிடைத்து வீறிட்டு எழும்போது, அது தன் எல்லைக்கோட்டை அடையாமல் நிற்கவே நிற்காது என்று இணையற்ற அறிஞரான இராசாசிக்குப் புரிந்திருந்தது. இராசாசி தன் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திராவிட இயக்கத்தை ஒடுக்க முனைந்ததில்லை, அது எதிர்விளைவுகளைத்தான் தோற்றுவிக்கும் என்பது அந்த மூதறிஞருக்குப் புரியும். இந்தி எதிர்ப்பை அவர் ஒடுக்க முயன்றது அரசியல் சார்ந்த நிலைப்பாடு. திராவிட இயக்கத்தின் துணைக் கொள்கைதான் நாத்திகமே ஒழிய, உயிர்க்கொள்கை இனவிழிப்புத்தான். பெரியார் உருவாக்கிய இவ்வளவு பேர்களில் கடவுள் மறுப்பாளர்களாக எஞ்சியிருப்பவர்கள் கருணாநிதியும் அன்பழகனும்தானே! மற்றவனெல்லாம் பூக்குழி இறங்கப் புறப்பட்டுவிட்டானே!
ஒருகட்டத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கமாகத் தோற்றம் பெற்று பார்ப்பனரல்லாதாரின் நலனை முன்வைத்து பின்பு காலநீட்சிக்குத் தக நீதிக்கட்சியாக உருமாறி, ஆட்சி பீடம் ஏறி, இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் ஊன்றி நின்று, அதற்குச் சட்ட உரு கொடுத்து பின்பு 1937-ல் தேசிய இயக்கமான காங்கிரசு வீறு கொண்டு எழுந்தபோது நீதிக்கட்சி தளர்ந்து, தள்ளாடி, இயற்கை எய்தப்போன நிலையில், அதற்குத் தலைமையேற்ற பெரியார் காலநிலையின் தேவையைக் கருத்தில் கொண்டு நீதிக்கட்சியைத் திராவிடர் கழகமாக்கி, அதற்குப் புதிய கொள்கைகளை ஊட்டி, அழியவிருந்த கட்சியை நிலைபெறச் செய்தாரே; அதனால்தான் அவர் நெடுநோக்காளர். தமிழனை சூத்திர நிலையிலிருந்து விடுவித்தது ஒன்று. அவனைத் தமிழனாக உணரச் செய்தது மற்றொன்று. லெனினைப் போல், மாவோவை போல், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பிறக்கக்கூடிய காந்தியைப் போல், தான் கட்டிய இயக்கம் தன் கண் முன்னாலேயே வெற்றிபெற்றதைப் பார்த்த தலைவர் பெரியார்தான். பெரியார் பதப்படுத்தி வேளாண்மை செய்த மண்ணில் இந்து விதை முளைக்குமா என்று மீண்டும் முயன்று பார்க்கிறார்கள். இருந்த இடம் தெரியாமல் இருந்தவர்களின் புதிய ஊக்கத்திற்குக் காரணம் டில்லி அரசு பீடம். விவேகானந்தர் முயன்று பார்த்துத் தோற்ற மண் தமிழ் மண்.
விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் இந்து மறுமலர்ச்சியைப் பற்றிப் பேசியபோது, அவருடைய முகத்துக்கு நேரே “நாங்கள் இந்துக்கள் இல்லை’ என்றார் மனோன்மணிய சுந்தரம்பிள்ளை. “நீங்கள் யார்’ என்று அவர் கேட்டபோது, “தமிழர்களுக்குத் தனிச் சமயங்கள் உண்டு அந்தச் சமயங்களுக்குத் தனித் தத்துவங்கள் உண்டு’ என்றார் அவர்… நியூயார்க்கில் ஐரோப்பியர்களை எதிர்கொள்ள முடிந்த விவேகானந்தரால் மனோன்மணிய சுந்தரம் பிள்ளையை எதிர்கொள்ள முடியவில்லை.
தமிழ்நாட்டை இந்து -இந்து அல்லாதார் என்று பிரிக்க முயல்கிறார்கள். தமிழ்நாடு பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் என்று பிரித்துப் பார்த்து வளர்ந்த நாடு. பெரியார் அதை விரிவுபடுத்தித் திராவிட உணர்வை ஊட்டினார். மார்க்கத்தால் வேறுபட்ட இசுலாமியர்களும், கிறித்தவர்களும் தமிழ்ச் சமயத்தவர்களும் இனவழி ஒருவரே என்பது அதன் பொருள்.
புலியை இடறுகிறார்கள்.
நன்றி: நக்கீரன்

Leave a Response