மோடியிடம் பதவி கேட்டா போனேன் ?– இஸ்லாமியர்களிடம் திருமாவளவன் கேள்வி.

விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்துக்கட்சிக் குழுவினரோடு தில்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்ததால் இஸ்லாமியர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார் திருமாவளவன். இதனால் அந்தச் சந்திப்பு குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அதன் விவரம்…
எனக்குத் தெரியும் என்மீது அதீத நம்பிக்கையும் அளப்பரிய பற்றும் கொண்ட என் உள்ளம் நிறைந்த ஈழத்தமிழர்கள் என்மீது வருத்தப்படுவார்கள் என்று. ஆனாலும் சிங்கள இனவெறியன் இராஜபக்சேவைச் சந்தித்தேன்.
என்ன செய்வது எதிரியின் கைகளில் தானே எஞ்சியுள்ள தமிழர்களும் சிக்கியுள்ளனர். அவர்களையாவது காப்பாற்ற வேண்டுமே! அதிகாரமும் அவன் கைகளில் தானே சிக்கியுருந்தது. அவனைப் பார்க்காமல் வேறு யாரை நான் பாரப்பது? அவனிடம் பேசாமல் வேறு யாரிடம் நான் பேச முடியும்? அவனுடன் எனக்கு வேறு என்ன வேலை?
எனக்குத் தெரியும் என்மீது உயிரையே வைத்துள்ள என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளும் என்னைப் பெரிதும் நேசிக்கிற ஏழை எளிய தலித் மக்களும் மிகவும் வேதனைப் படுவார்கள் என்று. ஆனாலும் சாதிவெறியைத் தூண்டி சேரிக் குடிசைகளைக் கொளுத்துவதையே அரும்பெரும் சாதனையாகக் கருதும் ஒருவருடன் கை குலுக்கினேன். என்ன செய்ய? தமிழை , தமிழினத்தை, தமிழ்ப் பண்பாட்டையெல்லாம் காப்பாற்றவும் தமிழர் ஒற்றுமையை வளர்த்தெடுக்கவும் அது பயன்படுமே என்றுதான். அவருடைய சாதிவெறி அப்போதாவது தணியுமே என்கிற ஆசையும் தான்.வேறு என்ன அவருடன் எனக்கு உறவு?
எனக்குத் தெரியும் என்மீது மிகுந்த மதிப்பும் பாசமும் கொண்டுள்ள எனது இஸ்லாமிய சொந்தங்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாவார்கள் என்று. ஆனாலும் அதிதீவிர இந்துத்துவ மதவாத சக்தியான மோடியைச் சந்தித்தேன். என்னசெய்ய? கொள்கைப் பகைவர்களின் கைகளில் தானே ஆட்சியதிகாரம் கோலோச்சுகிறது. தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து வேறு யாரிடம் போய் முறையிடுவது? வேலை நடக்காது என்றாலும் தமிழர் யாவரும் ஒற்றுமையாயிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதற்காவது சந்தித்து தானே ஆக வேண்டும். வேறு என்ன எனக்கு மோடியோடு உறவு? பதவி கேட்டா போனேன்? கூட்டணிக்கு அடிபோடவா போனேன்?
அப்பாவி கூலித்தொழிலாளர்கள் தமிழர்கள் அண்டை மாநிலத்தில் கொல்லப்பட்டுள்ள நிலையில் தமிழர் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாகும்.
என்னைப் புரிந்த எனது இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஒருபோதும் என்மீது அய்யம் வராது. எனக்கு நம்பிக்கை உண்டு.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

Leave a Response