54 பந்துகள் 101 ஓட்டங்கள் லோகேஷ் ராகுல் அதிரடி – ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்தியா, இங்கிலாந்து மட்டைப் பந்தாட்ட அணிகள் 3 இருபது ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இ

இரு அணிகளும் மோதும் முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார்.

அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ரோய் மற்றும் ஜோஷ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டிய இந்த ஜோடி 4-வது ஓவரின் இறுதிப்பந்தில் பிரிந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தை அடித்து ஆட நினைத்த ஜாசன் ரோய் (30 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக அலெக்ஸ் ஹாலெஸ், பட்லருடன் இணைந்தார்.

இருவரும் சற்று நிதானமான ஆட்டத்தையே வெளிபடுத்த இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை சேர்த்தது. இந்நிலையில் 11.3-வது ஓவரில் குல்தீப் வீசிய சுழற்பந்தில் ஹாலெஸ் (8 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேற அடுத்ததாக இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் களம் கண்டார். இதனிடையே 13வது ஓவரை வீசிய குல்தீப், தனது அபார பந்து வீச்சினால் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கு பின் களமிறங்கிய வீரர்களும் மந்தமான ஆட்டத்தையே வெளிபடுத்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும், உமேஷ் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 69 ரன்களை சேர்த்தார்.

பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

முதல் ஓவரிலேயே 4 ரன்களில் தவான் போல்ட் ஆகி வெளியேற, அடுத்ததாக லோகேஷ் ராகுல் களம் கண்டார். இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்ய அணியின் ரன்ரேட் நல்ல வேகத்தில் உயர்ந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் 12.4-வது ஓவரில் ரோகித் சர்மா (32 ரன்கள்) அவுட் ஆகி வெளியேற, கேப்டன் விராட் கோலி ராகுலுடன் இணைந்தார். தொடர்ந்து இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை துவைத்து எடுத்த லோகேஷ் ராகுல் வெறும் 54 பந்துகளில் சதம் அடித்து (101 ரன்கள், 5 சிக்சர்கள், 10 பவுண்டரிகள்) இந்திய அணிக்கு பெருமை சேர்த்தார்.

இதனிடையே ஆட்டத்தின் 18.2-வது ஓவரிலேயே இந்திய அணி வெற்றி இலக்கான 160 ரன்களை குவித்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.அணித்தலைவர் விராட் கோலி- ராகுல் ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Leave a Response