ரஜினி புகைபிடிப்பதை விட்டது எப்படி? – 2012 நிகழ்வுகள் மீள்பார்வை

நடிகர் விஜய் நடிக்கும் ‘சர்க்கார்’ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மற்ற நடிகர்களை எதிர்ப்பாரா என்று அறியாத சிலர் கேட்கின்றனர். தமிழ்த் திரையுலகில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கும் எல்லா முன்னணி நடிகர்களையும் மருத்துவர் இராமதாசு கண்டித்தார் என்பதுதான் உண்மை. அதில் உச்சமாக – புகைபிடிக்கும் பழக்கத்தை சினிமா மூலம் திணித்த நடிகர் ரஜினிகாந்த் புகையிலைக்கு எதிராக பேசும் மாற்றமும் நடந்தது.

அதுகுறித்த வரலாறு.

1998 ஆம் ஆண்டு வாக்கில் மருத்துவர் இராமதாசு, புகையிலை தீமையை எதிர்த்து பசுமைத் தாயகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆணையிட்டார்.

அது தொடர்பான வேலைகளில் ஈடுபட்ட காலத்தில் 2000 ஆவது ஆண்டுவாக்கில், ‘சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளால் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாகிறது’ என சில அறிவியல் ஆய்வுகள் வெளிவந்ததைக் காண முடிந்தது. எனவே, பசுமைத் தாயகம் சார்பில் ‘சினிமாவும் புகைபிடிக்கும் பழக்கமும்’ என்கிற கருத்தில் நாட்டம் செலுத்தத் தொடங்கினோம்.

2002 ஆகஸ்ட் 15 அன்று வெளிவர இருந்த பாபா திரைப்படத்தின் முதன்மை விளம்பரம் நடிகர் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் படத்துடன் வெளிவந்திருந்தது. பாபா திரைப்படத்தின் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் இராமதாசு 2002 ஆகஸ்ட் 11 அன்று பூம்புகாரில் நடந்த மாநாட்டில் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஒரு அரசியல் சக்தியாக பார்க்கப்பட்ட அக்காலத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது. மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அக்காலத்தில் ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுவதே சவாலாக மாறியது.

இதன்பின், 2012 ஆம் ஆண்டில் தனது 63ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய ரஜினிகாந்த் “சிகரெட் பிடித்ததால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்சினை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான். தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டுவிடுங்கள்” என்று கோரினார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ‘பாபா’ படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்தற்கு மருத்துவர் இராமதாசு எதிர்ப்பு தெரிவித்ததை சூசகமாகக் குறிப்பிட்டு “அவர் சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்குப் பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தைக் கைவிட்டனர். சைதாப்பேட்டையில் ரசிகர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எரித்தனர். பொன்னேரி பகுதியில் ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வற்புறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள். இந்த நிலையில் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் ரஜினி.

புகைபிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக ரஜினிகாந்த் மாறியதற்கு நன்றி தெரிவித்து பசுமைத் தாயகம் சார்பில் சென்னை நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதனைப் பார்த்துவிட்டு மருத்துவர் அன்புமணி இராமதாசுவை தொலைபேசியில் தொடர்புகொண்ட ரஜினிகாந்த் ‘நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்று கூறினார்.

– அருள்ரத்தினம்

Leave a Response