ஈழ அகதிகளைக் குற்றவாளிகளாகப் பார்க்கிறது இந்திய அரசு–சிவப்பு திரைப்பட விழாவில் நடிகர் ராஜ்கிரண் காட்டம்.

கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிவப்பு படம் தாமதமாக வெளியாகவிருக்கிறது. அப்படத்தின் தயாரிப்பாளர் திடீரென மரணமடைந்ததுதான் தாமதத்துக்குக் காரணம். விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஏப்ரல் 27 அன்று நடந்தது. அப்போது ஈழச்சிக்கல் குறித்து ராஜ்கிரண் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சிவப்பு படம் தமிழகத்துக்கு வந்திருக்கும் ஈழஅகதிப் பெண்ணின் வலிகளைச் சொல்கிற படமாகத் தயாராகியிருக்கிறது. ராஜ்கிரண் ஒரு முக்கியவேடத்தில் நடித்திருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியபோது, உலகத்தின் சோகங்களிலெல்லாம் பெரிய சோகம் ஒருவன் நாடிழந்துபோவது, முள்ளிவாய்க்கால் சோகம் நடந்து ஆறாண்டுகளாகிவிட்டன, அவ்வளவு பெரிய துயரத்தைப் பற்றி இப்போது பேச நாதியில்லை, உலகநாடுகளும் அதைக் கண்டுகொன்னவில்லை இந்தியாவும் தமிழகமும் அப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில் இந்தப்படம் அப்படி ஒரு துயரவாழ்க்கை இன்னும் இருக்கிறது என்று நினைவுபடுத்துகிற படமாக இருக்கும் என்று சொன்னார். அதன்பின் கேன்விகளுக்குப் பதிலளிக்கும்போது, உலகநாடுகள் எல்லாம் அகதியாக வருபவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து அவர்களுக்கு அடிப்படை வாழ்க்கைவசதிகளைச் செய்துகொடுக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் அவர்களை அகதிகளாகப் பார்க்காமல் குற்றவாளிகளாகப் பார்க்கும் போக்கு தொடருகிறது. இந்தியாவிலும் நேபாள அகதிகள் பர்மா அகதிகளுக்கு அகதிகளுக்குரிய வசதிகள் எல்லாம் செய்துகொடுக்கப்படுகின்றன, ஈழத்தமிழ் மக்களை மட்டும்தான் குற்றவாளிகளாகப் பார்க்கிறார்கள். இதற்குக் காரணம், இந்தியஅரசின் வெளியுறவுக்கொள்கை, அதன்படி விடுதலைப்புலிகள்அமைப்பு தீவிரவாத அமைப்பு என்பதால் அங்கிருந்து அகதிகளாக வருகிற மக்களையும் அப்படியே பார்க்கிறார்கள் என்று சொன்னவர், இதற்கு முன்னால் ஈழமக்களைப் பற்றி வந்த படங்கள் சிங்களஆதரவுப்படங்கள் ராஜபக்சேவின் ஆசியோடு வெளியிடப்பட்டவை எனவே அதற்கு தணிக்கைச்£ன்றிதழ் உட்பட எல்லாம் எளிதாக இருந்தன என்றார்.
இந்தப்படத்தை ராஜ்கிரணே வாங்கி வெளியிடுவதற்கு முன்வந்தாராம். ஆனால் தயாரிப்பாளர் தரப்பு இவருக்குப் படத்தைத் தரமுடியாத நிலையில் இருந்ததாம். எனவே இப்போது தேசிகன் என்பவர் படத்தை வெளியிடுகிறார். விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.

Leave a Response