
பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மூத்த மகனும் இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அண்ணனுமான நடிகர் உதயா. தன் பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்துள்ளார். மோகன் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அவர் இந்த நல்ல காரியத்தைச் செய்துள்ளார்.
உதயா நடிப்பில் உருவாகியிருக்கும் நகைச்சுவைப் படமான ‘ஆவிகுமார்’ வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
அடுத்து, ‘உத்தரவு மகாராஜா’ என்ற முற்றிலும் வித்தியாசமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதில் மனநலம் பாதிக்கப்பட்டவராக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அறிமுக இயக்குனர் ஆசிப் இப்படத்தை இயக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
ஆவிகுமார் படத்தை சேரனின் வீட்டுக்கே திரைப்படம் (சி2ஹெச்) திட்டத்தின் மூலம் வெளியிடப்போவதாக அதன் தயாரிப்பாளர் சொல்லியிருந்தார். அதற்கு எதிராக உதயா நடிகர்சங்கத்தில் கடிதம் கொடுத்தாராம். ஒரு நடிகனுக்கு திரையரங்கில் படம் வெளியாவதுதான் மகிழ்ச்சி எனவே இந்தப்படத்தைத் திரையரங்கில்தான் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதனால் இந்தப்படம் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
